உச்சமடையும் தமிழர் பேரவலம்: வன்னி மருத்துவமனைகளில் குவியும் உடலங்கள்; மருத்துவமனை செயலிழப்பு; நேற்றும் 13 தமிழர்கள் படுகொலை
அதேவேளை, வன்னியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொல்லப்பட்ட தமிழர்களின் உடலங்கள் தொடர்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
மருத்துவமனைகளில் குவியும் தமிழர்களின் உடலங்கள்
வன்னி பகுதிகளில் கடந்த சில நாட்களக சிறிலங்கா படையின் பரவலான எறிகணை வீச்சுக்கள் காரணமாக படுகொலையான 22 தமிழர்களின் உடலங்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரத்துறை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தன்னிடம் தெரிவித்ததாக "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இவற்றில், சுதந்திரபுரம் மருத்துவமனைக்கு 12 உடலங்களும் உடையார்கட்டு மருத்துவமனைக்கு 10 உடலங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், பலியான பலரின் உடலங்கள் உறவினர்களால் அந்தந்த இடங்களிலேயே புதைக்கப்படுவதாகவும் பரவலாக எறிகணை வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதனாலும், மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டிருப்பதாலும் கொல்லப்படுவோரது உடலங்கள் சரியான முறையில் கணக்கெடுக்கப்படுவதோ, அல்லது புதைக்கப்படுவதோ இல்லை எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு மருத்துவமனை
புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நான்காவது நாளாக நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலால் மருத்துவமனையின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டு விட்டன.
மருத்துவமனையின் முதன்மைப் பகுதிகளான வெளிநோயாளர் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதிகள் என்பன எறிகணைத் தாக்குதல்களில் நாசமாகிவிட்டன. இதனால் அந்த மருத்துவமனை இனி இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழுப் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நிலைகொண்டிருந்த போதிலும் கூட மருத்துவமனை மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளைத் தாக்கக்கூடாது என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு மற்றும் அனைத்துலக நாடுகள் வலியுறுத்திய பின்னரும் சிறிலங்கா படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். 300 மீற்றர் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த பின்னரும் மருத்துவமனை மீது தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தாக்குதல்களின் போது, ஏற்கனவே சிறிலங்கா படையின் எறிகணைத் தாக்குதலில் உடையார்கட்டில் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரும், அங்கு ஏற்கெனவே நடைபெற்ற எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்து அங்கேயே காயக்கட்டுக்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் நேற்று கொல்லப்பட்டு விட்டனர்.
அ.வசந்தகுமார் (வயது 26) மற்றும் ப.மதன்ராஜ் (வயது 19) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.
அறுவைச் சிகிச்சைக்கூடம் மீது வீழ்ந்த சிறிலங்கா படையின் பீரங்கி குண்டிலேயே இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த ஜனவரி 30 ஆம் நாள் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமலச்செல்வன் கஸ்தூரி (வயது 26) நேற்றைய தாக்குதலின் போது அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.
காயமடைவோர்
வன்னியில் சிறிலங்கா படையின் எறிகணை வீச்சுக்கள் தொடர்வதால், நேற்று புதன்சிழமை இந்த எறிகணை வீச்சுக்களின் போது காயமடைந்த பெருமளவிலான பொதுமக்கள் ஆங்காங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரபுரம் மருத்துவமனைக்கு நேற்று மாலை 5:00 மணி வரையிலும் காயமடைந்த 44 பொதுமக்களும், உடையார்கட்டு மருத்துவமனைக்கு 14 பொதுமக்களும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
எனினும், பெரும் அவலமும் குழப்பமும் நிலவுவதால் இவ்வாறு கயமடைந்து வருவோரின் பெயர் விபரங்கள் உரிய முறையில் சேகரிக்க முடியாதிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஏராளமானோர் சிறுவர்களாய் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதில் ஒரு வயதுடைய குழந்தை ஒன்றும் அடங்குகின்றது. அந்த குழந்தையின் தாய் முன்னரே எறிகணை வீச்சில் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இறந்துவிட்டார். அவரது மற்றுமொரு குழந்தையும் ஏற்கெனவே பீரங்கி தாக்குதலில் இறந்து விட்டது எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றும் படுகொலை
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அம்பலவன்பொக்கணை பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலின் போது 4 சிறுவர்கள் உட்பட 10 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 36 பேர் காயமடைந்துள்ளனர்.
சா.சுதாஸ் (வயது 05)
பாலசேகரம் கஜேந்திரன் (வயது 10)
பாலசேகரம் கஜானா (வயது 13)
செல்வநாயகம் கிளி (வயது 31)
சின்னப்பு இராசமலர் (வயது 56)
சின்னப்பு கெங்காதரன் (வயது 45)
பொ.ஜீவமலர் (வயது 53)
ஆகியோரே படுகொலை செய்யப்பட்டோர் ஆவர்.
கொல்லப்பட்ட மேலும் மூவரின் உடலம் சிதறிக் கிடப்பதினாலும், அவர்கள் இடம்பெயர்ந்து வந்தவர்களாய் இருப்பதனாலும் அவர்களின் பெயர் விபரங்களை உடனடியாக பெறமுடியவில்லை.
மேலும் இத்தாக்குதலின் போது
மதன் மபிசன் (வயது 04)
தமிழ்மாறன் சர்மிகா (வயது 09)
கெங்காதரன் பாலதரணி (வயது 06)
கெங்காதரன் தர்மேஸ் (வயது 08)
சிவநேசன் (வயது 30)
த.சாந்தநேசன் (வயது 37)
கோ.மகேந்திரம் (வயது 47)
மகேந்திரம் இராசமலர் (வயது 47)
சௌந்தரராசா சறோஜினிதேவி (வயது 45)
அன்ரன் மேரிமலர் (வயது 30)
புஸ்பராசா ரேணுகாதேவி (வயது 28)
செல்வராசா புஸ்பராஜா (வயது 30)
தினகரன் சின்னத்தம்பி (வயது 55)
வல்லிபுரம் கோமதி (வயது 30)
தமிழ்மாறன் மேனகா (வயது 29)
தர்மராசா வாகீசன் (வயது 23)
யோசப் டில்லிமலர் (வயது 63)
செபமாலை விக்ரர் (வயது 72)
சின்னத்துரை தனராசா (வயது 50)
தனராசா புஸ்பராணி (வயது 45)
ஆகியோர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.
Comments