புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: 150 படையினர் பலி; 350 பேர் படுகாயம்; 3 டாங்கிகளும் துருப்புக்காவியும் அழிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க தயாராக இருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் 3 டாங்கிகள் மற்றும் துருப்புக்காவி உள்ளிட்ட பெருமளவிலான வாகனங்கள் விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாரான சூழ்நிலையில் இருந்தனர்.

இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர்.

இதில் 150-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால்

டாங்கிகள் - 02

துருப்புக்காவி - 01

இராணுவ ஊர்திகள் (ட்றக்) - 02

இராணுவ பேருந்து - 01

இராணுவ உழுபொறிகள் - 02

ஆகியன இதுவரை விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

வாகனங்களுக்குள் படையினர் இருந்த போதே விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருந்த பெருமளவிலான படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் இந்த தொடர் தாக்குதலில் பெருமளவிலான படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்ட வண்ணம் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.


Comments