இந்திய ஈழப் போர் “2″ (தொடர்ச்சி)

தற்பொழுது நடந்து வருவது இரண்டாவது இந்திய ஈழப் போர்தான் என்பதை அண்மைய நாட்களில் வருகின்ற செய்திகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன. இந்திய படையினரின் நேரடிப் பங்களிப்போடு இந்திய அதிகார மையம் தற்போதைய போரை வழிநடத்துகின்றது என்பது தெரிந்திருந்தும் சில காரணங்களால் ஆரம்பத்தில் அடக்கி வாசித்த ஊடகங்களும் தற்பொழுது அதை அம்பலப்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.

ஐந்தாயிரத்திற்கும் அதிகமான இந்தியப் படையினர் களத்தில் நேரடியாக நிற்கின்ற செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பல இந்தியப் படையினர் ஈழத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இன்றைக்கு போர் முல்லைத்தீவுக் காடுகளுக்குள் நடைபெறுகின்றது. முல்லைத்தீவு நகரை இந்திய சிறிலங்காப் படைகள் கைப்பற்றி விட்டன. விசுவமடுவும் எதிரியிடம் வீழ்ந்து விட்டது. கடற்புலிகளின் தளம் இருந்த சாலைப் பகுதிதையும் கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா அரசு கூறுகின்றது. புதுக்குடியிருப்பை சூழவுள்ள பகுதிகளில் கடும் மோதல்கள் நடக்கின்றன. விரைவில் புதுக்குடியிருப்பையும் எதிரி கைப்பற்றக் கூடும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் தங்கும் வீடு ஒன்றை கைப்பற்றியதாக சிறிலங்கா அரசு அண்மையில் கூறியிருந்தது. தேசியத் தலைவரின் மேல் சட்டை ஒன்றையும் கண்டு எடுத்துள்ளதாகவும் கூறியது. உண்மையில் அந்த வீடு வெளிநாட்டு பிரதிநிதிகள் வன்னிக்கு வருகின்ற பொழுது தங்கிச் செல்கின்ற வீடாக இருந்தது. குறிப்பாக எரிக் சொல்கைம் வன்னிக்கு வந்த பொழுது அந்த வீட்டில்தான் தங்கியிருந்தார்.

படையினர் கண்டெடுத்த மேல்சட்டை எரிக் சொல்கைமுடையதா அல்லது யுசூசி ஆகாசியுனடையதா என்று தெரியவில்லை. ஆனால் தாங்கள் தங்கியிருந்த வீட்டை சிறிலங்காப் படையினர் கைப்பற்றியதை படங்கள் மூலம் அறிந்து கொண்டாதாற்தான் இவர்கள் விடுதலைப் புலிகளை ஆயுதங்களைப் போட்டு விட்டு சரணடையும்படி சொல்கின்றார்கள் போலிருக்கின்றது.

அத்தோடு இந்தியாவின் விருப்பமும் இவர்களின் கோரிக்கைக்குள் அடங்கியிருக்கின்றது. பிரணாப் முகர்ஜியுடன் பேசிய பிற்பாடு எரிக்சொல்கைம் விடுதலைப் புலிகளை சரணடையச் சொன்னது இங்கே கவனிக்கத்தக்க விடயம். ஆனால் விடுதலைப் புலிகள் சரணடைய மாட்டார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. மாறாக போரை நீடித்துச் சென்றும் அதனுடைய எல்லைகயை மேலும் விரிவுபடுத்தியும் சிறிலங்கா அரசுக்கு பெரும் அழிவைக் கொடுத்து எதிரியை பணிய வைப்பார்கள்.

ஆயினும் விடுதலைப் புலிகளை ஒழித்து விடலாம் என்று இந்திய சிறிலங்கா அரசுகள் நம்புகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட்டால், விடுதலைப் புலிகளையும் தமிழீழப் போராட்டத்தையும் இல்லாது ஒழிப்பதற்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று இந்திய அதிகார மையம் வெறியோடு இன்றைய போரை நடத்திக் கொண்டிருக்கின்றது.

சிறிலங்காவில் போர் வெறி கொண்ட இனவாத மகிந்த ராஜபக்சவின் அரசும் இந்தியாவில் சோனியா காந்தியின் செல்வாக்குக்கு உட்பட்ட அரசும் பதவியில் இருப்பது இந்திய அதிகார மையத்திற்கு ஒரு வாய்ப்பாகப் போய்விட்டது.

தமிழீழப் போரை ஒழித்துக் கட்டிவிடுவதற்கு இந்திய அதிகார மையம் முனைப்போடு செயற்படுவதற்கு “ராஜீவ்காந்தி அழித்தொழிப்பு” காரணமாக நம்பப்பட்டாலும் அது மட்டும் காரணம் அன்று என்பதை இங்கே சொல்ல வேண்டும். தன்னுடைய நலன் சார்ந்த நோக்கத்திற்காக ராஜீவ் குடும்பத்தின் பழிவாங்கும் மனோபாவத்தை இந்திய அதிகார மையம் பயன்படுத்துகின்றது என்பதுதான் சரியானது.

தமிழீழம் உருவாவதும், அது தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கமும் தன்னுடைய நலன்களை பாதிக்கும் என்று இந்திய அதிகார மையம் நம்புகின்றது. ஆரிய பார்ப்பனியத்தை அடிப்படைச் சிந்தனையாக கொண்டு இயங்கும் இந்திய அதிகார மையம் ஒரு போதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கப் போவது இல்லை.

தன்னுடைய நாட்டிலேயே கோடான கோடி மக்களை அடக்கி ஒடுக்கி வருகின்ற வேலையை செய்கின்ற இந்திய அதிகார மையம் இன்னொரு நாட்டின் விடுதலைக்கு ஆதரவாக எதையும் செய்யாது. அதுவும் அந்த நாட்டின் விடுதலை தன்னுடைய நலன்களைப் பாதிக்கும் என்று நம்பினால், அந்த விடுதலைப் போராட்டத்தை அழித்து ஒழிக்க முற்படுமே தவிர, ஒருபோதும் ஆதரவு கொடுக்காது.

முன்பு ராஜீவ்காந்தியைப் பயன்படுத்தி தமிழீழப் போராட்டத்தை அழிப்பதற்கு முயன்ற இந்த சக்தி இன்று ராஜீவ் குடும்பத்தின் பழிவாங்கும் மனோபாவத்தை பயன்படுத்தி, தமிழீழத்தின் மீது இரண்டாவது முறையாக போர் தொடுத்திருக்கின்றது. இதை நாம் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்திய மக்களினதும் தமிழீழ மக்களினதும் நலன்களுக்கு எதிரான இந்திய அதிகார மையம் தமிழர்களின் நட்புச் சக்தி அன்று. “இந்தியா எங்கள் நட்பு நாடு” என்னும் கோசம் இந்திய மக்களை நோக்கியதே தவிர இந்திய அதிகார மையத்திற்கானதாக இருக்க முடியாது. நாம் எப்படித்தான் கெஞ்சிக் கூத்தாடினாலும் இந்திய அதிகார மையம் எங்களுக்கு சார்பானதாக மாறப் போவது இல்லை. இந்திய மக்களையும் இந்திய அதிகார மையத்தையும் பகுத்து அறிந்து கொள்வதன் ஊடாகவே நாம் எமது அணுகுமுறைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

எங்கள் கெஞ்சல்களையும் மனுக்களையும் பார்த்து இந்திய அதிகார மையம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்று நாம் நினைத்தால் அது பகற்கனவாகவே இருக்கும். ஆகவே இந்திய அதிகார மையம் இன்று எம் மீது தொடுத்துள்ள போரை அனைத்து வழிகளையும் கையாண்டு எதிர்கொள்வதைத் தவிர தமிழினத்திற்கு வேறு தேர்வு தற்போதைக்கு இல்லை.

இந்திய சிங்கள அரசுகள் ஏற்கனவே உள்ள பட்டறிவின் அடிப்படையில் இன்றைய போரை முன்னெடுத்துச் செல்கின்றன. இவர்களுக்கு உதவியாக மற்றைய சர்வதேச வல்லரசுகளும் தம்மால் ஆனதைச் செய்கின்றன. மிகப் பெரிய நெருக்கடியை தமிழினம் சந்தித்து நிற்கின்றது. போரில் வெற்றி என்பதை விட தாக்குப் பிடித்து நின்று போராட்டத்தை தொடர்ந்து நடத்தி தக்க சமயத்திற்காக காத்திருப்பதுதான் தமிழினத்திற்கு இன்று உள்ள தெரிவு.

தக்க சமயம் என்பது சில மாதங்கள் கழித்தும் வரலாம், பல ஆண்டுகள் கழித்தும் வரலாம். நிலங்களை இழந்தாலும் போராட்டத்தை இழந்து விடக் கூடாது என்பதில் தமிழினம் உறுதியாக இருக்க வேண்டும்.

அதே வேளை நீடித்துச் செல்லப் போகும் இந்தப் போராட்டத்திற்கு உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் தம்மால் ஆன பங்களிப்பை செய்ய வேண்டியது அவசியம் ஆகின்றது. இந்திய வல்லாதிக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிலங்கா அரசுக்கு தனது தார்மீக ஆதரவை மட்டும் வழங்கியது. அன்றைக்கு தமிழ் நாட்டின் தமிழர்கள் தமது தார்மீக ஆதரவை தமிழீழப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இன்றைக்கு இந்திய அரசு தமிழினத்தை அழிக்கும் போரை நேரடியாக நின்று வழிநடத்துகின்றது. இந்த நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழீழப் போராட்டத்திற்கு தமது நேரடியான பங்களிப்பை வழங்கத் தலைப்படுவது தவிர்க்க முடியாதபடி இயல்பான ஒன்றாக அமைகின்றது.

இப்படியான ஒரு நிலை உருவாகி வருவதை மாவீரன் முத்துக்குமாரனின் வீரச்சாவு எமக்கு உணர்த்தி நிற்கின்றது. கரும்புலிகள் தமது உடலை ஆயுதம் ஆக்குவது போன்று தன்னுடைய உடலை ஆயுதம் ஆக்கி பெரும் எழுச்சியை தமிழ்நாட்டில் முத்துக்குமாரன் உருவாக்கிச் சென்றுள்ளார்.

கடைசியாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் கூட ஈழத் தமிழர்களுக்காக தன்னுடைய உயிரை மாய்த்துள்ளார். அவர் “தமிழீழம் வாழ்க” என்று எழுதி வைத்து விட்டு தீக்குளித்திருக்கின்றார். கட்சி வேறுபாடுகள் இன்றி பெரும்பான்மையான தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன.

இன்றைக்கு இந்திய அதிகார மையம் நடத்துகின்ற இரண்டாவது ஈழப் போரை முறியடிப்பதற்கு பெரும் பங்கை வழங்கப் போகின்றவர்களாக தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களே இருப்பார்கள். தமிழீழத்திலும் தமிழ்நாட்டிலும் வாழும் தமிழர்களோடு உலகு எங்கும் வாழும் தமிழர்களும் இணைந்து இந்தப் போரை வெற்றி கொண்டு தமிழர்களுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கியே தீருவார்கள்.

- வி.சபேசன் (07.02.09)



Comments