டெல்லி-2,000 தொண்டர்களுடன் வைகோ உண்ணாவிரதம்


சென்னை: மதிமுக சார்பில் 2,000 தொண்டர்களுடன் டெல்லியில் நாளை மறுநாள் முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை அரசின் கொடூர ராணுவத் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழர்களை நினைத்து ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் நெஞ்சில் வேதனைத் தீ பற்றி எரிகிறது.

ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், ராணுவத்தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்றும், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை, இலங்கை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, இந்திய அரசு தலையிட வேண்டும் என கனடாவின் வெளி விவகார அமைச்சர், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வற்புறுத்தியுள்ளார்.

போர் நிறுத்தம் செய்யுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்டும் கூட்டு அறிக்கை விடுத்த பின்னரும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மீது, சிங்கள ராணுவமும், விமானப்படையும் ஏவுகணைத் தாக்குதலும், குண்டு வீச்சும் நடத்தியதில், மருத்துவமனையில் இருந்த 116 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 260 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 28 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளின் கண்டனத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகி வரும் இலங்கை அரசு அதிலிருந்து தப்பிக்க விடுதலைப்புலிகள் தான் அப்பாவித் தமிழர்களைக் கொன்றார்கள் என்று கோயபெல்ஸ் பாணி பொய்ப் பிரசாரத்தை இரண்டு நாட்களாக செய்து வருகிறது.

இலங்கை அரசின் அராஜகத்தை, வெளி உலகத்துக்குத் தெரிவித்ததற்காக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேர்களை, முல்லைத் தீவில் இருந்தே வெளியேற்றப்பட்டனர். மொத்தமாகத் தமிழ் இனத்தைக் கொன்று தமிழ் ஈழத்தையே சுடுகாடக மாற்ற ராஜபக்சே திட்டம் போட்டுவிட்டார்.

போர் நிறுத்தம் தான் ஒரே வழி என்பதை நன்றாக அறிந்திருந்தும், இந்திய அரசு அதை சொல்லத் தயாராக இல்லை.

ஏனெனில், விடுதலைப்புலிகளை அழிப்பது தான் இந்திய அரசின் நோக்கம். நான் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் குற்றம் சாட்டுகின்றபடி, இலங்கையில் கொல்லப்படுகின்ற ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும், அவன் சிந்துகின்ற ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும், இந்திய அரசு, குறிப்பாக தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பாளி ஆகும்.

எனவே, இந்திய அரசின் துரோகத்துக்குக் கண்டனம் தெரிவிக்கவும், வதைபடும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க, அகில இந்திய அளவில், ஆதரவு திரட்டவும், உண்மை நிலைமையை இருட்டடிப்புச் செய்யும் டெல்லி ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தைக் கடந்து, இந்திய மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்கவும், தலைநகர் டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு அருகில் ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 13-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மதிமுக சார்பில், என்னுடைய தலைமையில், மிகப் பெரிய உண்ணாநிலை அறப்போர், காலை எட்டு மணி முதல் நடைபெறுகிறது.

இந்த அறப்போரில் பங்கு ஏற்பதற்காக, ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றுவிட்டார்கள். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த உண்ணா நிலை அறப்போருக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர்களைக் காக்க உரை ஆற்றுவார்கள் என்று கூறியுள்ளார் வைகோ.


Comments