வன்னியில் 2,000 தமிழர்கள் படுகொலை; அனைத்துலக நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன: இரா.சம்பந்தர் ஆதங்கத்தோடு குற்றச்சாட்டு
மகிந்த அரசாங்கம் தமிழர்கள் மீதான நன்கு திட்மிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருக்கின்றது எனவும் குற்றம் சாட்டிய இரா.சம்பந்தன், அனைத்துலக நாடுகள் உடனடியாக தலையிட்டு இந்த அழிப்பு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சிறிலங்காவின் நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வன்னிப்பெரு நிலப்பரப்பின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும்போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இந்த ஊடக மாநாட்டில் தொடர்ந்து விளக்கமளித்த இரா.சம்பந்தன், பாதிக்கப்பட்டு மனம் நொந்த நிலையில் இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாததன் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
அந்த மக்களை பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட அனுமதி வழங்கக்கூடாதா என்றும் கேள்வி எழுப்பி கவலை வெளியிட்டுள்ளார்.
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து வெளியேறி வருகின்ற மக்களை விடுதலை புலிகள் கொலை செய்கின்றனர் என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்றும் கூறினார்.
விடுதலைப் புலிகள் எதற்காக மக்களை கொலை செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய இரா.சம்பந்தன், அரசாங்கம் கூறுவது போன்று அவ்வாறு மக்களை புலிகள் கொலை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனவும் சுட்டிக் காட்டினார்.
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், வன்னிப்பெரு நிலப்பரப்பில் காயமடைகின்ற மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லை. கொல்லப்பட்ட மக்களின் உடலங்கள் வீதிகளில் கிடக்கின்றன உடலங்களை புதைப்பதற்கு கூட முடியாத நிலை. அந்தளவுக்கு இடைவிடாத எறிகணை பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று கூறி விளக்கமளித்தார்.
அதேவேளை, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் அவரது படைகளும் செய்து வருகின்ற இனப் படுகொலைகளை சில அனைத்துலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்றும் குற்றம் சுமத்திய அவர் இவ்வாறான இனப் படுகொலைகள் உலகில் எங்கும் இடம்பெற்றதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுப் பிரதி தலைவர் மாவை சேனாதிராசா, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீக்காந்தா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Comments