சிறிலங்கா போர்க் கைதிகளின் சீர்திருத்தப்பள்ளி மற்றும் பராமரிப்பு இல்லங்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: 21 தமிழர்கள் பலி; 71 பேர் காயம்

சிறிலங்கா படை போர்க் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தப் பள்ளி, மூதாளர் நலன் பேணலகம் உள்ளிட்ட சிறார் பெண்கள் பராமரிப்பு இல்லங்கள் மீது இன்று சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் 21-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்ட சிறிலங்காவின் கடற்படையினர், தரைப்படையினர் தடுத்து வைக்கப்படும் சீர்திருத்தப் பள்ளி மீது இன்று புதன்கிழமை சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இந்த சீர்திருத்தப் பள்ளியினை அடிக்கடி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் பார்வையிட்டு வருவது உண்டு.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

இதேவேளை, மூதாளர் நலன் பேணலகம், பெண்கள் உளவளப் பராமரிப்பு நிலையமான "வெற்றிமனை" தாய்-சேய் பராமரிப்பு நிலையமான "மலர்ச்சோலை", "செந்தளிர்" சிறுவர் இல்லம், பாதிக்கப்பட்ட பெண்கள் பராமரிக்கப்படும் "மேரி" இல்லம், பாதிக்கப்பட்ட பெண்கள் பராமரிக்கப்படும் "நிறைமதி" இல்லம், "அன்புமனை" தாய்-சேய் இல்லம் "குருகுலம்" சிறுவர் இல்லம் என்பனவற்றின் மீதும் இன்று பிற்பகல் 12:30 நிமிடத்துக்கு சிறிலங்கா வான்படையின் எஃப்-07 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இதில் 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தால் பார்வையிடப்படும் இடங்களில் பராமரிப்பு இல்லங்களும் அடங்கும்.

அத்துடன், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் இதன் புவி நிலையிடத் தகவல் இருக்கின்றது.

இதனை, அவர்கள் ஏற்கனவே தாக்குதல் தவிர்க்கப்பட வேண்டிய இடம் என சிறிலங்கா படைத்தரப்புக்கு கொடுத்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இங்கு போர்க் கைதிகளாக சிறிலங்கா கடற்படையினரும் தரைப்படையினரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஏனைய நிறுவனங்கள் அனைத்துலக நாடுகளின் உதவிகளுடன் இயங்கிய தொண்டு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]



Comments