இது தொடர்பாக அருட் பணியாளர்கள் சார்பாக அருட்திரு க.சாம் இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வன்னியில் வாழும் எங்கள் வாழ்வு கேள்விக்குறியாகி, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே நாம் உங்களுக்கோர் அவசர அறைகூவலை விடுக்கின்றோம்.
நிம்மதியும் நிரந்தர வாழ்வும் தொலைந்து போன நிலையில் மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டு இறுதி மூச்சைப் பிடித்தபடியே அனைத்துலக கிறிஸ்தவ சமூகத்திற்கு இந்த அவசர அறைகூவலை விடுக்கின்றோம்.
கொடிய போர் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகள் விடுதலைப் புலிகளாகவே இருக்க, விடுதலைப் புலிகளை அழிக்கின்றோம் என்ற பெயரில் சிறிலங்கா அரசால் தமிழ்மக்கள் நாள்தோறும் மிகவும் மோசமான முறையில் கண்கொண்டு பார்க்க முடியாத வகையில் கொன்று குவிக்கப்படுக்கின்றனர். காயப்படுத்தப்படுகின்றனர்.
வானூர்தி மற்றும் எறிகணை வீச்சால் உடல் சிதறிப் பலியாகும் மக்களின் உடல்களை உரப்பைகளில் (பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தப்படும் இராசயன உரம் கொண்டிருந்த பைகள்) அள்ளியெடுக்கும் அந்த நெஞ்சைப் பிழியும் கோரக்காட்சிகளை எப்படி மறப்பது.
தன் தகப்பனின் சிதறிய உடலை ஒரு பையில் அள்ளியெடுத்த 16 வயது மகனின் மனநிலையை எப்படி எழுதுவது?
உடல் சிதறிப் பலியானவர்களையோ அல்லது காயமடைந்தவர்களையோ அந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்தவோ, காயப்பட்டவர்களுக்கு உதவுவதோ மிகவும் கடினமான விடயமே.
ஏனெனில் அந்த இடங்களில் 1,000 தொடக்கம் 6,000 வரையான எறிகணைகள் நாள்தோறும் அரச படைகளால் எறியப்பட்ட வண்ணமே இருக்கும்.
மழை போல் விழும் இந்த எறிகணைகளின் மத்தியில் மீட்புப் பணிகளை எவ்விதம் செய்ய முடியும்.
இவை அரசால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் நடைபெறுகின்றன.
எனவே இப்பிரதேசம் மக்களால் கொலை வலயம் என்றே அழைக்கப்படுகின்றது.
இந்த பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த உடையார்கட்டு மருத்துவமனை மீது இடம்பெற்ற எறிகணை வீச்சால் மருவத்துமனை சேதமானதுடன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
அந்த தொகையின் இரு மடங்கு மக்கள் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து எழுந்த கேள்விக்குப் பதில் தந்த சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறுகையில், புதுக்குடியிருப்பு மருத்துவமனை இருக்கும் போது மக்கள் ஏன் உடையார்கட்டு மருத்துவமனைக்குப் போகவேண்டும் என்றார்.
இரண்டாம் நாள் வானூர்தி மற்றும் எறிகணை வீச்சிற்கு புதுக்குடியிருப்பு மருத்துவமனை இலக்கானது. அங்கும் காயமுற்ற நிலையில் இருந்த மக்கள் கொல்லப்பட்டார்கள். சிகிச்சைப் பெற வந்திருந்த மக்கள் பலர் காயப்படுத்தப்பட்டனர். மருத்துவமனையும் முற்று முழுதாகச் செயல் இழந்தது.
இப்போது மோதல் நடைபெறும் இடங்களில் மருத்துவமனை என்று ஒன்றில்லை.
பாடசாலை மற்றும் மர நிழல்களில் சிறியளவிலான சிகிச்சைகள் நடைபெறுகின்றன.
இருப்பினும் மருத்துவ அதிகாரியோ மருந்துகள் எதுவும் இல்லை இதனால் காயப்பட்டவர்கள் இறக்கும் சந்தர்ப்பங்களே அதிகம் உள்ளன என்கிறார்.
அதே சமயம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் அரசாங்கம் வெளியேற்றி விட்டது.
தொண்டு நிறுவனங்களோ, ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளோ இங்கு இல்லை.
இங்கு மக்கள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். காயப்படுத்தப்படுகின்றனர். அதிலும் கர்ப்பிணித் தாய்மார்களும் குழந்தைகளும் சிறுவர்களும் மிகவும் கோரமான முறையில் கொல்லப்படுவதை வார்த்தைகளால் விளக்கவே முடியாதுள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் பெண்களையும் உடல் வலிமை குறைந்தவர்களையுமே அதிகம் காணக்கூடியதாக உள்ளது.
ஜயோ கடவுளே என்று எழும் கூக்குரல்கள் எறிகணைச் சத்தத்தையும் மிஞ்சி கேட்டவண்ணமே உள்ளது.
இராணுவம் என்றதும் கலங்கி பயந்து நடுங்குகின்றனர். கண்களில் காணும் விடுதலைப் புலிப் போராளிகளிடம் அந்தக் கொலைகார இராணுவத்திடம் இருந்து எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று மக்கள் பரிதவித்துக் கேட்கின்றனர்.
அந்தளவிற்கு பயந்து கலங்கிய மரண பயத்துடன் உள்ளார்கள். அதிலும் கொத்துக்குக்குண்டு தாக்குதல்களிலிருந்து நாம் எப்படித் தப்புவது? எமது குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது? என்று அங்கலாய்த்து விழி பிதுங்கிப்போன நிலையில் காணப்படுகின்றனர்.
இவற்றை எல்லாம் நாம் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து கொண்டு நேரடியாகவே பார்க்கின்றோம்.
மருத்துவ உணவு மற்றும் அடிப்படை வசதிகளின்றி மக்கள் நாள் தோறும் ஓடிக் கொண்டே இருக்கின்றனர்.
நாள்தோறும் நிமிடம் தோறும் இந்த மக்கள் துன்புறுகின்றனர். இரவு-பகலாக உறங்கமுடியாமல் தவிக்கின்றனர்.
பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மக்கள் குறுகிய நிலப்பரப்பிற்குள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு எறிகணை மற்றும் சுகாதார சீர்கேட்டினால் உண்டான நோயாலும் பட்டினியாலும் மக்கள் செத்துக்கொண்டே இருக்கின்றனர்.
போரின் வலிமையையும் வலியையும் தாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, சமாதானம் என்ற நிலைப்பாட்டை அனைத்துலகம் எதிர்பார்த்த வண்ணம் மக்கள் சாவின் விளிம்பில் உள்ளனர்.
சிறிலங்கா அரசோ சகல கதவுகளையும் இழுத்து மூடியுள்ளது.
தமிழ் மக்கள் அதனைத் திறக்கும் பலமான கரங்களாக இந்திய மத்திய அரசையும், அமெரிக்காவையும், ஜக்கிய நாடுகள் சபையையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த கரங்களை செயற்பட வைப்பது யார்?
இதனைச் செயற்பட வைக்கக்கூடியவர்களாக இறைவனால் இந்த பூமியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்தையே நாம் முன்மொழிக்கின்றோம்.
அதுவே உண்மையும் கூட.
இந்த நேரத்தில் சிறிஸ்தவர்கள் யாவரும் கிறிஸ்தவ திருமறையில் உள்ள எஸ்தர் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
எஸ்தரைப் போல் உடன் விரைந்து செயற்பட வேண்டும்.
இலங்கைத்தீவில் சிங்களம் மற்றும் தமிழ் எனும் இரு தேசிய இனங்கள் வாழ்கின்றனர்.
இதில் சிங்கள தேசிய இனம் தனது வாழ்வியல் உரிமைகளையும் இறைமைகளையும் தன்னகத்தே கொண்டு வாழ்கின்ற அதே சமயம், தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வியல் உரிமைகளையும், இறைமைகளையும் மறுத்து இன்று அந்த இனத்தை அதன் மண்ணிலே ஏதிலிகளாக்கி கொன்று குவித்து வருகின்றது.
இதற்குப் பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்ற பெயரையும் கொடுத்துள்ளது.
ஆனால் இதனை அனைத்துலக சமாதான விரும்பிகளான மெய்யான கிறிஸ்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அதே சமயம் ஜெபிக்கின்றோம், மன்றாடுகின்றோம், வேண்டுதல் செய்கின்றோம் என்று மட்டும் கூறி விட்டு இருந்திட முடியாது.
தன் தலை போகும் என்று தெரிந்திருந்தும் நீதிக்கு முகம் கொடுத்து யோவான் ஸ்நானகனைப் போல் எழுந்து செயற்பட வேண்டும்.
ஆமான் என்பவனின் சதியால் முழு யூத இனமுமே அழிக்கப்படும் சூழ்நிலை உருவானபோது வெறுமனே உபவாசம் - ஜெபம் என்று மட்டும் இருந்து விடாமல் தன் இனத்துக்காகவே தன் உயிரை பணயம் வைத்து அரசனிடம் சென்றவர் எஸ்தர்.
அன்று யூத இனம் காப்பாற்றப்பட்டது.
இறைவன் பாத்துக்கொள்வார், செய்வார் என்பது மட்டும் உண்மையல்ல.
ஆக்கபூர்வமாக எழுந்து செயற்பட வேண்டும் என்பதும் உண்மைதான்.
இந்த நிலையில் கிறிஸ்தவ சமூகத்தின் அசைவே தமிழ் இனத்தின் இருப்பை உறுதி செய்யும் என்று நாம் நம்புகின்றோம்.
வன்னியில் நடைபெறும் இந்த பேரவலம் நிறுத்தப்பட சிங்கள மற்றும் இந்திய முதலான அனைத்துலக கிறிஸ்தவ சமூகம் எழுந்து செயற்பட வேண்டும்.
உண்மையில் கிறிஸ்தவர்களுக்கு தேசப்பற்று இருக்க வேண்டும். ஆயினும் அவர்கள் தேச வெறிக்கும், இனமொழி பாகுபாடுகளுக்கும், அப்பாற்ப்பட்டவர்கள். ஒடுக்கப்பட்ட இனத்திற்கு கைகொடுக்க வேண்டியவர்கள். சுயநலமற்றவர்கள் தன்னைப்போல் பிறரை அன்பு செய்பவர்கள்.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரு கால கட்டத்தில் ஓடுக்கப்பட்டனர். கொன்று குவிக்கப்பட்டனர்.
இப்போது தலை நிமிர்ந்துள்ளனர்.
இதனை நாம் மறக்கக்கூடாது.
எனவே சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே நீங்கள் பௌத்த சிங்கள அரசிற்கு அச்சப்பட வேண்டாம்.
நீதிக்கு முகம் கொடுங்கள். சிங்கள தேசிய இனம் போல் தமிழ்த் தேசிய இனமும் எல்லா வாழ்வியல் உரிமைகளுடனும் இந்த தீவில் வாழ நீதிக்காக போராடுங்கள்.
அனைத்துலகம் எங்கும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழத் தமிழர்கள் என்னும் பெயரில் குரல் கொடுக்கின்றீர்கள் என்பதை நாம் அறிவோம்.
ஆயினும் நீங்கள் உங்கள் அனைத்து வல்லமையையும் பயன்படுத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
அனைத்துலக கிறிஸ்தவ சமூகம் என்ற பெயரில் எழுந்து செயற்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
சகல கிறிஸ்தவ மொழிபேசும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளையும் ஒன்றிணைத்து செயற்படும்படியாக நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்திய கிறிஸ்தவ சமூகத்தையும் கேட்டுக்கொள்கின்றோம்.
நோர்வேயின் நோர்வே பப்டிஸ்ற் யூனியனில் உள்ள இறை பணியாளர் அந்தோனிப்பிள்ளை, ஸ்ரலின் செபஸ்ரியன் அவர்களும் இதற்கான ஒழுங்குகளைச் செய்து கொடுக்க வேண்டும் எனவும் நாம் கேட்டுக்கொள்வதோடு, இவ்விதம் இறங்கிச் செயற்படும்படியாக அனைத்துலக கிறிஸ்தவ சமூகத்தையும் கேட்டுக்கொள்கின்றோம்.
போர்கள் ஓய வேண்டும், மனிதப் பேரவலம் மறைய வேண்டும், உணவு, மருத்துவ மற்றும் அடிப்படைத் தேவைகள் யாவும் சந்தித்து கொடுக்கப்பட வேண்டும்.
நடைமுறைச் சாத்தியமற்ற மாயையான இந்தப் போர் ஓய வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்.
ஏனெனில் விடுதலைப் புலிகளை ஒழிக்க இன்னமும் குறுகிய நாட்களும் நிலமுமே உண்டு என அரசு கூறிக்கொண்டு கொடிய போரை நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் கிழக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
எனவேதான் மேற்படி விடயம் நடைமுறைச் சாத்தியமற்றது என்கின்றோம்.
உண்மையில் அழிந்து கொண்டிருப்பது அப்பாவிப் பொதுமக்கள்தான் என்பதை உணர்ந்து ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டியுள்ளது.
அந்நிய தேசத்தில் இருந்த யூதர்கள் ஆமானின் சதியால் முற்று முழுதான அழிவின் விளிம்பில் இருந்தனர்.
இந்த இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றும்படியாக அந்த தேச அரண்மனையில் இருந்த யூதப் பெண்ணான எஸ்தருக்கு மெர்த்தேகாய் சொன்ன வார்த்தைகளை நினைவூட்டுகின்றோம்.
(நீ ராஜாவின் அரண்மனையில் இருக்கின்றதனால் மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க நீ தப்புவாய் என்று உன் மனதில் நினைவு கொள்ளாதே. நீ இந்தக்காலத்திலே மௌனமாக இருந்தால் யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும். அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்திற்கு உதவியாய் இருக்கும்படிக்கு உனக்கு இராஐ மேன்மை கிடைத்திருக்கலாமே யாருக்குத் தெரியும்)
நிம்மதியாக வாழ்ந்து சுதந்திரக்காற்றைச் சுவாசிப்போர் மரணத்தின் பிடியில், சாவின் விழிம்பில் நின்று அவலப்படும் சகோதர சகோதரிகளைக் காக்க எழாதிருக்க முடியுமோ?
அனைத்துலக கிறிஸ்தவ சமூகமே உங்கள் உறவுகள் சகோதர சகோதரிகள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
உடன் விரைந்து செயற்படுங்கள்.
இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்களாக என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments