இரவு நேர பீரங்கித் தாக்குதல்: வன்னியில் இன்று செவ்வாய் 22 தமிழர்கள் சிறிலங்காவால் படுகொலை; 87 பேருக்கு காயம்

வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து இரவு நேரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் இன்று 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். போதிய மருத்துவ வசதிகள் இன்றி காயமடைந்தவர்கள் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தேவிபுரம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:15 நிமிடம் தொடக்கம் 3:15 நிமிடம் வரையான ஒரு மணி நேர கடும் இருட்டு நேரத்தில் சிறிலங்கா படையினர் 250-க்கும் அதிகமான எறிகணைகளை வீசித் தாக்கியுள்ளனர்.

இதன் போது 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது இன்று அதிகாலை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் போது 4 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களினால் காயமடைகின்ற மக்கள், மருத்துவமகைளும் போதியளவு மருத்துவ சிகிச்சைகளும் இல்லாத நிலையில் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என "புதினம்" செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.



Comments