உடையார்கட்டு மருத்துவமனை மீதும் இடம்பெயர்ந்த மக்கள் மீதும் இன்று எறிகணைத் தாக்குதல்: 43 பேர் படுகொலை; 155 பேர் காயம்
பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அமைந்துள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீது இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு நோயாளர் காவு ஊர்திகளும் மருந்து களஞ்சியமும் முற்றாக சேதமடைந்துள்ளன.
சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலினால் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்றாக சேதமடைந்துள்ளதனால் வன்னியில் உள்ள மக்களுக்கு தற்போது சேவையாற்றி வருவது உடையார்கட்டு மருத்துவமனை ஆகும்.
இந்த மருத்துவமனையையும் இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான சுதந்திரபுரம், இருட்டுமடு, வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீது இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
சுதந்திரபுரம் பகுதி மீது இன்று பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 58 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் 10 உடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இருட்டுமடுப்பகுதியில் இன்று பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 16 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
வள்ளிபுனம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
தேவிபுரம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய பல்குழல் வெடிகணைத் தாக்குதலில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
Comments