சிறிலங்கா 1948 ஆம் ஆண்டு தொடக்கம் பெப்ரவரி 4 ஆம் நாள் சுதந்திரம் கிடைத்ததென பெருமையுடன் பெருவிழா எடுத்து வருகின்றது.
அதேவேளை, தமிழர்கள் அன்றைய நாள் தொடக்கம் தமது சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளாகவே பெப்ரவரி நான்கைப் பார்க்கத் தொடங்கி விட்டனர்.
அந்நியர்களின் பிடிக்குள் இருந்த இலங்கைத் தீவை விட்டு அவர்கள் வெளியேறும் போது தமிழரின் சுயநிர்ணய உரிமை பற்றிச் சரியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் சிந்திக்கத் தவறியதன் விளைவு தமிழரின் அனைத்து உரிமைகளையும் இன்னுமொரு அன்னிய சக்தியிடம் தாரைவார்த்து விட்டுப் போனார்கள் என்று சொல்வது சரியாகவே தெரிகின்றது.
தமிழரை அழிப்பதற்கான வேலைகளை 1948 ஆம் ஆண்டிற்கு முன்னரே சிங்களப் பேரினவாதிகள் நயவஞ்சகமாகத் திட்டமிட்டிருந்தனர். குறிப்பிட்டுச் சொல்வதானால் தமிழரின் தாயக மண்ணில் சிங்களக் குடியேற்றங்களை 1948 ஆம் ஆண்டிற்கு முன்னரே செய்திருந்தனர்.
எடுத்துக் காட்டாக வவுனியா மாவட்டத்தில் 1936 ஆம் ஆண்டு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஒன்று செய்யப்பட்டது. வவுனியா நகரிற்கு தென்மேற்காக இருக்கும் உட்குளம் பகுதியில் இந்தக் குடியேற்றம் செய்யப்பட்டது. (இந்த கிராமத்திற்கு உலுக்குளம் என்று சிங்களப் பெயரைச் சூட்டினார்கள்) இதே போன்ற பல வஞ்சகமான திட்டங்களைச் செய்திருந்தனர். இது போன்றவை சிங்களப் பேரினவாதிகளின் உண்மையான முகத்தை எடுத்துக் காட்டக் கூடியவையாகும்.
இலங்கையின் அரசியலமைப்பு தமிழரின் உரிமைகளை மதிக்காமல் வரையப்பட்டதில் இருக்கக் கூடிய தன்மைகள் சிங்களப் பேரினவாதச் சிந்தனையாளர்களிற்கு சாதகமான அம்சங்களையே கொடுத்துள்ளது. இதுபற்றி தமிழர் காலத்திற்கும் காலம் போராடியே வந்துள்ளனர். இதில் பிரித்தானியர் தமிழரின் சுயநிர்ணய உரிமையை கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளனர்.
டொனமூர் அரசியல் யாப்பு முழுச் சுதந்திரத்தை வழங்கவில்லையெனக் கூறி 1931 ஆம் ஆண்டு தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரிய இளைஞர் காங்கிரஸ் தமிழ்ப் பிரதேசங்களில் புறக்கணிப்பையும் செய்தது.
இலங்கையில் மாறி மாறி அரசியலமைப்புகள் எழுதப்பட்டுள்ளன. ஆறு யாப்புக்களைப் பிரித்தானியர் எழுதினர். சிங்களவர் 1972 ஆம் ஆண்டும் 1978 ஆம் ஆண்டும் இரண்டு யாப்புக்களைக் கொண்டு வந்தார்கள். இதில் 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தனாவால். கொண்டுவரப்பட்ட யாப்பில், அவரது காலத்திலேயே பன்னிரண்டு ஆண்டுகளிற்குள் பதினாறு தடவைகள் திருத்தம் செய்யப்பட்டது.
அரசியல் யாப்புக்களை மாறி மாறிப் புதிதாகக் கொண்டு வந்ததும் பல தடவைகள் திருத்தியதும் தமிழினத்தின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காகவென்று சொல்வது பொருத்தமானதாகவே இருக்கும்.
தமிழரின் சுதந்திரத்தைப் பறித்து சிங்களப் பேரினவாதிகளின் அடிமைகளாகத் தமிழரை வைத்திருப்பதற்கே இனிப்புப் பேச்சுக்களை பேசிய சிங்களப் பேரினவாதிகள் அனைத்து வழிகளிலும் தமிழ் மக்களை அழிப்பதிலேயே மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வந்தார்கள். தாங்கள் புனிதர்கள் என்று உலகின் முன் அடையாளப் படுத்துவதற்காக புனித மதமான பௌத்தமதம் சிங்களவரின் அரசியல் விவகாரங்களை அலங்கரித்து நின்றது, நிற்கின்றது.
சிறிலங்காவின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா முதலாவதாகச் சிங்கக் கொடியை ஏற்றிவிட்டு உரையாற்றும் போது, 'ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் இந்த அதிகார மாற்றத்திற்கு அடிகோலியரையிட்டு நாம் பெருமையடைகின்றோம். இரத்தம் சிந்துதல் இலங்கையின் பெருந்தொகை பௌத்தர்களின் மதத்திற்கே விரோதமானதாகும்" என்று கூறினார்.
ஆனால், அதற்குப் பின்னர் படிப்படியாக மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு, 1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் என மூர்க்கத்தனமாக சிங்களப் பேரினவாதிகள் தமிழரின் சுதந்திரமான வாழ்வில் கை வைக்கத் தொடங்கினர்.
சிங்களவரின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தமிழர் அமைதி வழிப் போராட்டங்களைச் செய்தனர். தமிழரின் அமைதி வழிப் போராட்டங்களை சிங்களப் பேரினவாதிகள் வன்முறையால் ஒடுக்கிவிட நினைத்தனர்.
இன அழிப்பைச் செய்யும் அனைத்து வழிகளையும் செய்து வந்தவர்கள், தமிழரை அழிப்பதற்கு நியாயம் கற்பித்து வந்ததும் குறிப்பிடத்தக்கதே.
இந்த நிலைமையில் உண்மையை உணர்ந்து கொண்ட சிங்களச் சிந்தனையாளர்கள் சிலர் தமிழரின் சுதந்திரம் பற்றிப் பேசியுள்ளனர். (இப்படிப் பேசுவதற்குக் காரணம் தமிழர் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற நிலைமை வலுக்கின்ற போது தனி நாடு என்பதை ஆழமாக நெஞ்சில் இருத்தி விடுவார்கள் என்பதை உணர்ந்ததாகவும் இருக்கலாம்.) 1956 ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் இடதுசாரிப் பாராளுமன்ற உறுப்பினர். லெஸ்லி குணவர்த்தன. உரையாற்றுகையில்... 'தமிழ் மக்கள் தமக்கு ஆபத்து வருவதாக உணர்ந்தால் நாட்டிலிருந்து பிரிந்து போகக் கூட தீர்மானிக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
இந்த உண்மைகள் பேசப்பட்ட அளவிற்கு தமிழரின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆக்கபூர்வமான திட்டங்களை வழங்குவதற்கும் சிங்களப் பேரினவாதிகள் தடையாக இருந்தார்கள் அல்லது நீதியாகப் பேசக் கூடியவர்கள் பலமானவர்களாக இருக்கவில்லை.
தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்காமல் சிங்களவர் சுதந்திரமாக வாழ முடியாத நிலைமை வரும் தவிர்க்க முடியாத கட்டத்திற்குள் வைத்துச் சிங்களச் சிந்தனையானவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழரின் சுதந்திரம் பற்றிப் பேசிய அளவிற்கு நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. இது போன்றவை தமிழரின் உரிமை பாதுகாப்பு என்ற விடயத்தில் தமிழர் தமிழரைத் தவிர வேறு யாருடனும் நம்பிக்கை கொள்ள முடியவில்லை.
சிறிலங்காவில் மாறி மாறி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துக்கொண்ட சிங்களப் பேரினவாதக் கட்சிகள், தமிழரைச் சுதந்திரமாக வாழ விடாது தொடராக இன அழிப்புச் செய்தமையின் வரலாற்று நிகழ்வுகளை 1956, 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளின் மீள் நினைவுகள் எம் முன்கொண்டு வந்து சேர்த்து விடும்.
குறிப்பிட்ட இந்த ஆண்டுகளில் தமிழின அழிப்புத் தீவிரம் பெற்றிருந்தது. ஆனால், தொடராக இடைவெளி விடாது தமிழரை சிறி லங்காப் பேரினவாதிகள் அழித்தொழித்து வந்துள்ளனர்.
இதனால் தான் எழுபதுகளில் வன்முறையை வன்முறையால் எதிர்கொண்டனர் தமிழர். தமிழின அழிப்பின் தீவிரம் தொண்ணூறுகளின் பின்பே அதிகமானதாகச் சிலர் சொல்வார்கள். ஆனால், எண்பதுகளின் பின்பே தமிழின அழிப்பு உச்சம் பெறத் தொடங்கியது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிறைச்சாலைகளிற்குள் தடுத்து வைத்தவர்களை சுட்டும் வெட்டியும் கொன்றனர். மனித உரிமை என்பதனை துளியெனவும் மதிக்காது பேரவலம் ஏற்பட்டது.
ஆரம்ப நாள் தொடக்கம் தமிழின அழிப்பை புதிய புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் பயன்படுத்தி மேலும் அழிவுகளைச் செய்ததன் நோக்கம் தான் இன்றும் சிறிலங்காப் பேரினவாதிகளிடம் தொக்கி நிற்கின்றது.
புனர்வாழ்வு வழங்குகின்றோம் எனப் பிடித்துக் கொண்டு சென்றவர்களைப் பண்டாரவளை பிந்துனுவௌ முகாமில் வைத்துக் கொன்றழித்தனர். இன்று யாழ்ப்பாணத்திற்குள் சிறைச்சாலைக்குள் வாழ்வது பாதுகாப்பெனவும் சிலர் எண்ணுகின்றனர்.
இப்படியான நிலைமைகள் எல்லாம் எதனைக் காண்பிக்கின்றது? தமிழரின் சுதந்திரத்தைப் பறித்தெடுத்த சிங்களவரின் மனநிலை பிந்துனவௌpல் ~எங்கள் நாய்களிற்குப் புலியிறைச்சி போடுவோம்| என்பதாக அமைந்திருந்தது.
~தமிழரின் இறைச்சி சிங்களவரின் நாய்களிற்கு| ~தமிழரின் தோலினால் செய்த செருப்பைப் போட விருப்பு| என்பனவெல்லாம் சிங்களவரின் மனோ நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
இன்று வன்னியில் மூன்று லட்சம் மக்களை அழிப்பதற்காக சிங்களப் பேரினவாத அரசு படைகளை ஏவிவிட்டு இன அழிப்பின் உச்சத்தை அரங்கேற்றும் இவ்வேளையில் சுதந்திரநாள் கொண்டாட்டத்தைச் செய்யும் எண்ணத்தையும் கொண்டுள்ளது. இதுவரை காலமும் செய்து வந்த தமிழின அழிப்பு இன்று உச்சமடைந்துள்ளது. இப்படிக் கொடுமையாகவும் கோரமாகவும் தமிழினத்தை அழிப்பதால் தமிழர் சுதந்திரமாக வாழ முடியாமல் போகும் நிலைமை மட்டுமே வரும். இதனை நன்கு உணர்ந்த சிலர் தமது கருத்துக்களைச் சொன்னார்கள். அவற்றை சிங்களவர் சொன்னது பொருத்தமானதாகும். ஆனால் அதனைச் சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளத் தவறவிட்டு விட்டனர்.
1. மற்றொரு இனத்தை அடிமைப்படுத்திக் கொள்வதற்காக போரிடும் ஓர் இனம் ஒரு போதும் சுதந்திரத்தை அனுமதிக்க முடியாது. (சுனந்த தேசப்பிரிய, சரிநிகர் 30 டிச. 2000)
2. நான் தமிழனாக இருந்தால் சுதந்திரத்தைப் பெறுவதற்கு வெடிகுண்டைக் கட்டிக் கொண்டு போயிருப்பேன். (அனுராதபுரம் மாகாண சபை உறுப்பினர் திசநாயக்க)
3. தமிழர் சுதந்திரமாக வாழவில்லையென்றால் சிங்களவர் சுதந்திரமாக வாழ முடியாது. (டீ.டீ.ஊ. யின் சந்தேசியவில் பணியாற்றும் பண்டார)
சிங்களப் பேரினவாதிகள் தமிழரின் சுதந்திரத்தைப் பறிப்பதில் கரிசனை காட்டும் போது எவர் சொல்வதனையும் கேட்கவில்லை. '1799 ஆம் ஆண்டளவில் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு தமிழரின் தனியாட்சிக்குள் இருந்தது" என பிரித்தானிய ஆளநர் கிளைக்கோண் தெரிவித்திருந்தார். (ஜி. நடேசன். இலங்கை இன முரண்பாடுகளின் வரலாறு)
தமிழரின் சுதந்திரம் பறிபோனதற்கு காரணமான பிரித்தானியாவின் ஆளுநர் கிளைக்கோண் தமிழரின் தனியாட்சி பற்றிக் கூறியதை பார்க்கின்ற போது ஏன் இன்று பிரித்தானியா தமிழரின் ஆழ்மன விருப்பைப் புரிந்து கொள்ளத் தவறி நிற்கின்றது என்பது புரியவில்லை.
சிங்களச் சிந்தனையாளர்கள் சொன்னதையோ, இலங்கை தீவு முழுவதையும் ஒற்றையாட்சிக்குள் கொண்டு வந்த பெருமைக்குரிய தவறிழைத்த பிரித்தானியாவின் குறிப்பிடத்தக்க சிலர் சொன்னதையோ செவிமடுக்காத சிங்களப் பேரினவாதிகள் இனி ஒருபோதும் தமிழரைச் சுதந்திரமாக வாழ விடுவார்கள் என்று சொல்ல முடியாத கட்டமே இன்றுள்ளது.
எனவே, தமிழர் சுதந்திரமாக வாழ வேண்டும். பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று போராடி இருபதாயிரத்திற்கும் அதிகமான உயிர்களை ஈகம் செய்துள்ளனர். சிங்களப் பேரினவாதிகளின் இன அழிப்பு நடவடிக்கைகளிலும் விலைமதிப்பற்ற உயிர்கள் சிங்களப் பேரினவாதிகளின் இனவெறிக்குப் பலியாக வேண்டிய நிலையும் தமிழரிற்கு ஏற்பட்டது.
ஆகவே, இப்படிக் கொடுக்கப்பட்ட விலைக்குப் பெறுமதியான பொருள் தமிழரிற்குக் கிடைத்தே ஆக வேண்டும்.
அந்நியர் பறித்த தமிழரின் தனியரசை சிங்களவரிடம் கொடுத்து விட்டுப் போன நாளே பெப்ரவரி நான்காகும். அறுபது ஆண்டாக சிங்கள அன்னியரிடம் பறிபோன தனியாட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான எண்ணத்தை சிங்களப் பேரினவாதிகளே ஏற்படுத்தினார்கள். தமிழரும் மனிதர்கள் அவர்களும் உரிமையுடன் சுதந்திரமாக வாழ வேண்டும் என சிங்களப் பேரினவாதிகள் எண்ணியிருந்தால் இன்று குருதி சிந்தி தனிநாட்டுப் போராட்டம் தொடர்ந்திருக்காது. தமிழரைத் துன்பக் கடலில் தத்தளிக்க விடவில்லையென்றால் நிலமை இப்படியானதாக வந்திராது.
நீண்ட, துயர் சுமந்த தமிழர் பாதுகாப்பு பற்றி மிகவும் அக்கறைப்படுகின்றனர். இலங்கைத் தீவிற்குள்ளிருக்கும் நிலைமை தமிழர் அனைவராலும் சரிவர உணரப்படல் வேண்டும். சந்தையில் நிறுத்து விலை கொடுத்து வாங்க சுதந்திரம் என்பது சுண்டங்காயல்ல. வலிசுமந்து, புயல்களையும் எரிமலைக் குழம்புகளையும் ஏறி மிதித்து புதிய அனுபவங்களையும் சந்தித்துத் தான் நிம்மதியான சுதந்திரமான வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும்.
1948 ஆம் ஆண்டு இலங்கைத் தீவை விட்டு வெளியேறும் போது பிரித்தானியா தவறிழைத்தது அதனை மீண்டும் தழும்பகற்ற வேண்டுமென்றால், தமிழரின் தனியாட்சியை அமைப்பதற்கு தடையாக இராது ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.
தமிழர் சுதந்திரமாக வாழ வேண்டுமெனின் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் நாள் வரை போராடுவதைத் தவிர வேறு வழியேயில்லை என்பதை உலகத் தமிழினமே சிந்திக்க வேண்டும். ஒன்றரைக் கோடிச் சிங்களவரை எட்டரைக் கோடித் தமிழர் வென்றால் தான் தமிழீழத்தில் தமிழர் நிம்மதியாகச் சுதந்திரமாக வாழ முடியும்.
-கனகரவி-
நன்றி: நிலவரம்
Comments