நாளாந்தம் 5,000 வரையான பீரங்கிக் குண்டுகள்; புதுவகை எரிகுண்டுகள்; செவ்வாய் மட்டும் வன்னியில் 58 தமிழர்கள் படுகொலை

"மக்கள் பாதுகாப்பு வலயம்" என தானே அறிவித்து இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அடைக்கலம் புக வைத்த பின்னர் - சிறிலங்கா படைகள் தொடர்ச்சியாக நடத்தும் கடுமையான பீரங்கி எரிகுண்டுத் தாக்குதல்களில் - இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 காயமடைந்துள்ளனர். மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

50 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களும், மேலும் 10 ஆயிரம் வரையான ஏற்கெனவே குடியிருந்த மக்களும் வாழ்ந்து வந்த சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை வரை சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்றைய இந்த தாக்குதலில் 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த பகுதியில் தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மீட்புப் பணிகள் சரிவர செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், மீட்புப் பணிகள் முழுமையாக முடிவடையும் போது கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களினதும் எண்ணிக்கை இதனைவிட அதிகமாகலாம் என்றும் சம்பவ இடத்தில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதுவரை நடைபெற்ற மீட்புப் பணிகளில் 55 பேரினது உடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுதந்திரபுரத்தின் பிறிதொரு பகுதி மீது இன்று பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில், மேலும் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேசமயம், புதுக்குடியிருப்பு நுண்கலைக் கல்லூரி மீது இன்று காலை 8:30 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இன்னும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

எரிக்கும் குண்டுகள்

சிறிலங்கா படையினர் தற்போது ஏவும் பீரங்கிக் கணைகள் யாவுமே வீழ்ந்து வெடிக்கும் இடத்தில் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் தன்மையுடையதாக இருப்பதாக "புதினம்" செய்தியாளர் வன்னியில் இருந்து தெரிவிக்கின்றார்.

மனித உடல்களோ, மரங்களோ, கட்டடங்களோ, வாகனங்களோ எதுவாயிருந்தாலும் பற்றி எரிகின்றது. இதனால், அண்மைக்காலங்களில் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின்றவர்கள் எல்லோருமே - உடல் கருகி உயிரிழப்பதுடன், காயமடைகின்றவர்களும் மிகக் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகின்றனர் என எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

சிறிலங்கா படைகள் ஏவும் இந்த எறிகணைகள், எல்லாவற்றையும் எரித்துக் கருக்கும் தன்மை உடையவையாக இருப்பினும் - இந்த எறிகணைகள் சரியாக எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை இன்னமும் கண்டுபிடிக்க முடியாது உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



Comments