"மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகள் மீது கொத்துக்குண்டு எறிகணை தாக்குதல்: 53 தமிழர்கள் படுகொலை; 158 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மற்றும் தேவிபுரம் ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் நேற்றும் இன்றும் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 158 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு மற்றும் மாத்தளன்

புதுக்குடியிருப்பு மற்றும் மாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் இன்று காலை வரை சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் படுகாயமடைந்துள்ளனர்.





தேவிபுரம் - ஞாயிற்றுக்கிழமை இரவு

தேவிபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை இலக்கு வைத்து நேற்று இரவு சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

கபிலன் (வயது 07)

முகிலன் (வயது 10)

கீர்த்தனா (வயது 12)

சாரங்கன் (வயது 10)

துசியந்தினி (வயது 37)

ஆறுமுகம் (வயது 88)

சந்திரகலா (வயது 49)

பாலசுப்பிரமணியம் (வயது 67)

தர்மரத்தினம் (வயது 49)

சிவபாக்கியம் (வயது 48)

எழிலரசி (வயது 37)

ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தேவிபுரம் - திங்கட்கிழமை காலை

தேவிபுரம் "மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று அதிகாலை முதல் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 89 பேர் காயமடைந்துள்ளனர்.

தேவிபுரம் பகுதியில் மக்களுக்கான உணவு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் மூன்று பணியாளர்களும் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பெ.சுப்பிரமணியம் (வயது 40)

சு. சிவகுமார் (வயது 32)

பெ.இராசேந்திரம் (வயது 30)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் மருந்துப் பொருட்கள் முடிவடைந்த காரணத்தினால் கடந்த இரண்டு நாட்களில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.



Comments