ஒரே நாளில் 6 ஆயிரம் பீரங்கிக் குண்டுகளை "மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது வீசியது சிறிலங்கா: நேற்று 24 தமிழர்கள் படுகொலை: 81 பேருக்குக் காயம்
வன்னியில் உள்ள தேவிபுரம் மக்கள் காப்பு வலயம் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கித் தாக்குதலில் 24 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 81 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது நேற்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் செறிவான எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியுள்ளனர்.
நேற்று முழு நாளும் அதிகாலை தொடக்கம் மாலை வரை 6 ஆயிரம் எறிகணைகள் வரை இந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் 14 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 91 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 91 பேரும் மாத்தளன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் 10 பேர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகையிலேயே உயிரிழந்து விட்டனர்.
காயமடைந்த ஏனையவர்களின் நிலைமையும் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments