இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்!

வன்னியில் இன்று மும்முரமாக முன்னெடுக்கப்படும் போரின் மூலம் என்ன?...

தமிழினத்தின் உண்மையான எதிரி யார்?...

அந்த எதிரியை முறியடிக்க உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியது உண்மையில் என்ன?...

என்ற விடயங்களை இங்கே ஆராய்கின்றார் தி.வழுதி.

"புதினம்" செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.

பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772.

அதாவது - சராசரியாக - ஒவ்வொரு நாளும் 14 தமிழர்கள் கொல்லப்பட்டு, 57 தமிழர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை - இந்த ஒவ்வொரு நாளும் - போர்க்களத்தில் வீழ்ந்து போன, விழுப்புண்பட்ட புலிப் போராளிகளின் எண்ணிக்கை இங்கே சேர்க்கப்படவில்லை. இறந்து போன, போர்க்காயமடைந்த அவர்களும் தமிழர்களே.

இது தவிர - வன்னியில் இருந்து வெளியேறிய 160 வரையான தமிழ் இளம் பெண்களும், இளைஞர்களும் - இரகசியமான சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு - வதை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டதாக வெளியில் சொல்ல முடியாத ஆதாரங்களில் இருந்து நம்பகமான தகவல்கள் உண்டு.

தெளிவாக - இது ஓர் இனப்படுகொலைப் போரே அன்றி வேறொன்றும் அல்ல.

ஆனால் - இந்த இனப் படுகொலைப் போரை நடத்துவது யார் என்பதிலும், அதற்கு எதிராக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதிலும் தான் எமக்கு தெளிவு தேவை.


"அன்னை சோனியாவின் ஆன்மா கரையப்போவதில்லை"

இது இந்தியாவின் போர்; சிறிலங்கா ஒரு பொம்மை மட்டுமே.

இந்தப் போர் ஒரு முடிவுக்கு வருவதற்கு இந்தியா விடப்போவதே இல்லை: அதாவது, சிறிலங்கா விரும்பினாலும் கூட இந்தப் போர் நிற்கப் போவதில்லை.

இந்தியப் படை அதிகாரிகள் - வன்னிப் போர் முனையில் - வெறுமனே பிரதான கட்டளை மையங்களில் மட்டுமன்றி - நேரடியான போர்ச் செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.

இந்திய உளவு வானூர்திகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை 24 மணி நேரமும் கண்காணித்தபடியே உள்ளன.

இந்திய கடற் கண்காணிப்பு கதுவீ (Radar) கருவிகள் வங்காள வரிகுடாவை 24 மணித்தியாலமும் கண்காணித்த வண்ணம் உள்ளன.

இந்தியாவின் கண்களுக்கு தப்பி ஒரு மீன்பிடிப் படகு கூட அங்கு நீந்த முடியாது.

இந்தத் தகவல்கள் எல்லாமே விடுதலைப் புலிகளுக்குத் தெளிவாகத் தெரிந்திருப்பினும் கூட - அரசியல் இராஜதந்திர நோக்கங்கள் கருதி - சில விடயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாதவர்களாக அவர்கள் உள்ளனர்.

ஒரு புறத்தில் போரை நடத்திக்கொண்டு - மறுபுறத்தில், அனைத்துலக நாடுகளிடம் இருந்து வரக்கூடிய அழுத்தங்கள் எல்லாவற்றையும் முறியடிப்பதற்கான இராஜதந்திர ஆலோசனைகளையும் சிறிலங்காவுக்கு வழங்குகின்றது இந்தியா.

பொருளாதாரம் சீரழிந்து சிறிலங்கா வீழ்ந்தாலும், அதனை முட்டுக்கொடுத்து தூக்கிவிட்டு - இந்தியா இந்தப் போரை நடத்தும்.

ஆட்பலம் குறைந்து சிங்களப் படை தவித்தாலும், தன் படைகளை இந்தியா போருக்கு அனுப்பும்.


தனக்காக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையிலேயே இவன் சிரிக்கின்றான்

பிண மலையாகத் தமிழர்கள் வன்னியில் குவிந்தாலும் சரி, முத்துக்குமாரர்களாக "சாஸ்திரி பவன்" முற்றத்தில் தமிழர்கள் எரிந்தாலும் சரி - அன்னை சோனியாவின் ஆன்மா கரையப் போவதில்லை.

தமிழ்த் தேசிய எழுச்சித் தீயை அணைத்து அடக்கும் வரை - காங்கிரசின் இந்திய வல்லாதிக்கம் ஓயப்போவதில்லை.

பிரபாகரனின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடிக்கும் வரை - சோனியா காந்தி நிம்மதியாக தூங்கப் போவதில்லை.

என்றோ இறந்து போன ராஜீவ் காந்திக்காக - நேற்றும் இன்றும் நாளைக்கும், இனி என்றும் தமிழர்களைப் பழி தீர்த்துக்கொண்டே இருக்கப் போகின்றது காங்கிரசின் இந்தியா.

சிவ்சங்கர் மேனனையும், பிரணாப் முகர்ஜியையும், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த உணவு மூட்டைகளையும் சிறிலங்காவுக்கு பகிரங்கமாக அனுப்பி - மற்ற நாட்டுக்காரர்களைத் தள்ளி நிற்க வைத்து விட்டது இந்தியா.

நோர்வேயின் எரிக் சொல்கெய்ம் - மிக அண்மையில் - புலிகளிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார், "இப்போது எமது கையில் எதுவுமே இல்லை", என்று.

உலகத் தமிழர்களே! இது எமக்குரிய நேரம்: இதுவே தான் எமக்கான நேரம்!

எமக்காக எழுந்துவிட்ட ஏழு கோடி தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து - உலகத் தமிழர்கள் நாம் - எம்மைப் பழி தீர்க்க முனையும் இந்தியாவின் இந்த குரூர வெறிக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும்.

ஊரில் நடைபெறும் நிகழ்வுகளின் செய்திகளைப் பார்த்து, கொதிப்படைந்து - ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வுப் பெருக்கோடு எதையாவது செய்து கொண்டிருக்கின்றோம்.

உலகு எங்கும் - கவனயீர்ப்பு நிகழ்வுகள் செய்து, ஆர்ப்பாட்டப் பேரணிகள் வைத்து, மனுக்கடிதங்கள் எழுதி, மனிதச் சங்கிலிகள் பிடித்து - எங்கள் கோபத்தையும், ஆதங்கத்தையும் பிழையான இடங்களின் மீது நாம் காட்டிக்கொண்டிருக்கின்றோம்.

சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் போட்டு தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தமாறு உலக நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபையையும் நாம் வேண்டுகின்றோம்.


இந்தியா நடத்தும் போர்: இனி நடக்க முடியாதவள் ஆனாள் தங்கை

ஆனால் - தமிழர் இனப் படுகொலையை நிகழ்த்துவது சிறிலங்கா அல்ல; அது இந்தியாவே என்பதை நாம் உணர வேண்டும்.

சிறிலங்கா இப்போது வெறும் பொம்மை மட்டுமே; இது இந்தியா இயக்கும் போர் என்பது எல்லோருக்குமே தெரியும்.

இப்போதுள்ள சூழலில் - தென்னாசியாவில், இந்தியாவை மீறி எதுவுமே நடக்கப்போவதில்லை.

மேற்குலக நாடுகள் என்றாலும் சரி, ஐக்கிய நாடுகள் சபை என்றாலும் சரி -

ஆகவும் மிஞ்சிப் போனால் - எமது ஆய்க்கினை தாங்காமல் - ஒரு அறிக்கையை விடுவார்கள்; கவலை தெரிவிப்பார்கள். அதற்கு மேல் அவர்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள்; அவர்களால் எதுவும் செய்யவும் இயலாது.

இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்.

"வெள்ளை மாளிகை" முன்றலிலும், "டவுணிங் ஸ்ட்றீட்"டிலும், ஒட்டாவாவின் வீதிகளிலும் மற்றும் மேற்குலகின் சாலைகளிலும் நாம் நடத்தும் பேரணிகள் உண்மையில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்குச் சங்கடங்களையே ஏற்படுத்தும்.

எம் மீது ஒரு வகையான சினத்தைக்கூட - அந்தந்த நாட்டு அரசுகளினதும், அந்தந்த நாட்டு மக்களினதும் மனங்களில் - உருவாக்கப் பார்க்கும். ஒரு வகையில் - தேவையற்ற பகை உணர்வைக்கூட, அது தமிழர்களுக்கும், மேற்குலகிற்கும் இடையில் ஏற்படுத்தும்.

மேற்குலக அரசுகளின் ஆதரவு பின்னால் எமக்கு தேவை: இப்போது, எதுவும் செய்ய முடியாத சூழலில் அவர்கள் இருக்கும் போது - அவர்களைச் சங்கடப்படுத்துவது நமக்கு நன்மையைச் செய்யாது; அது அழகும் அல்ல.

எனவே - அளவுக்கு அதிகமான தொந்தரவைக் கொடுக்காமல் ஓரு தூர நோக்கப் பார்வையோடு மேற்குலகை நாம் விட்டுவைக்க வேண்டும்.

இப்போது -

எமது துடிப்பு - சக்தி - கவனம் எதனையும் வேறு இடங்கள் நோக்கிச் சிதற விடாமல் - எல்லாவற்றையும் இந்தியாவை நோக்கியே நாம் செலுத்த வேண்டும்.

உலகத் தமிழர்களின் பொங்கும் உணர்வு எழுச்சியைப் பல திசைகளிலும் பரவ விட்டு, எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்காமல் -

அதை ஒருங்கே குவித்து - சரியான இலக்கை நோக்கி நகர வைக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நாடுகளிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்களின் கைகளிலேயே இப்போது உள்ளது.

அந்த சரியான இலக்கு - இந்தியா.

என்றுமில்லாத அளவுக்கு பேரெழுச்சி கொண்டுள்ள தமிழக மக்களுக்குப் பின்னால் உலகத் தமிழர்கள் உடனேயே அணிதிரள வேண்டும். எமக்காகப் போராடும் அவர்களோடு நாம் ஒன்றிணைய வேண்டும்.

விடுதலைப் புலிகளின் கோலாகலமான ஒரு போர் வெற்றிக்காக இரண்டு வருடங்கள் நாம் காத்திருந்தோம்: எதுவுமே நடக்கவில்லை; நடக்க இந்தியா விடவில்லை.

இப்போது - காங்கிரஸ் ஆட்சியின் கேவலமான ஒரு வீழ்ச்சிக்காக நான்கு மாதங்கள் காத்திருக்க எமக்கு அவகாசம் எதுவும் இல்லை; அதன் பிறகு கூட ஏதாவது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவதமும் இல்லை.

உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்களை நாம் இப்போதே முற்றுகைக்கு உள்ளாக்க வேண்டும்.

தொடர்ச்சியாக - இடைவிடாமல் - ஒருங்கு திரட்டப்பட்ட செயல் வீச்சோடு - அதை நாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு செய்ய வேண்டும்.

லண்டன் நகர வீதிகளில், ஒரு லட்சம் பேர், ஒரே நாளில் திரண்டு பிரித்தானிய மக்களின் அன்றாட வாழ்வுக்குச் சிரமங்கள் தருவதைத் தவிர்த்து விட்டு - லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தை 5 ஆயிரம் பேராக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும்.

அதேபோல - ரொறான்ரோ நகர வீதிகளில், 80 ஆயிரம் பேர், ஒரே நாளில் திரண்டு கனடிய மக்களின் அன்றாட வாழ்வுக்கு அலுப்புத் தருவதைத் தவிர்த்து விட்டு - கனடாவுக்கான இந்தியத் தூதரகத்தை 4 ஆயிரமாக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும்.

இதே போல ஒவ்வொரு நாடுகளிலும் செய்ய வேண்டும்.

தமிழர் பிரச்சினை தவிர வேறு எதைப் பற்றியுமே சிந்திக்க முடியாத - நாளாந்த அலுவல்களில் சிரத்தை காட்ட முடியாத - செயலிழப்பு நிலைமைக்கு வெளிநாட்டு இந்தியத் தூதரகங்களை நாம் உள்ளாக்க வேண்டும்.

எமது இடைவிடாத முற்றுகைகள் மூலம் - தூதரக அதிகாரிகளையும், தூதுவர்களையும் செயற்பட முடியாத அளவு எரிச்சலுக்கும், சினத்திற்கும் உள்ளாக்க வேண்டும்.

தமது தூதரகங்களுக்கே சென்றுவர முடியாதுள்ள - தமது பணிகளை ஆற்ற முடியாதுள்ள தமது கையாலாகாத்தனத்தை அவர்கள் டெல்லித் தலைமைக்கு முறையிட வைக்க வேண்டும்.

தமிழ் இனத்தைப் படுகொலை செய்து அழிக்கும் போரின் சூத்திரதாரி சிறிலங்கா அல்ல; இந்தியா தான் என்பதை இந்த உலகின் முற்றத்தில் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

இந்தியா நடத்தும் இந்தப் படுகொலைப் போரின் பழியை இந்தியாவின் தலையிலேயே நாம் சுமத்த வேண்டும்.

ஓரு பழம்பெரும் இனத்தை அழிக்கும் நாடு என்ற அவமான வெட்கத்தை இந்தியாவின் முகத்தில் நாம் பூச வேண்டும்.

அதனை நோக்கியே எமது செயற்பாடுகள் யாவும் அமைய வேண்டும்.

உண்மையில் - மேற்குலகத் தலைவர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் நாம் நேரடியாக எதனைமே சொல்ல வேண்டியதில்லை:

உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன்னால் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நாம் நடத்தும் முற்றுகைப் போராட்டமே - சொல்ல வேண்டிய செய்தியை அந்தந்த நாட்டுத் தலைவர்களுக்குச் சொல்லும்.

படுகொலைப் பழியை இந்தியா மீது சுமத்தி - இந்தியாவை கூனிக்குறுக வைத்து - தமிழர்களின் விடயத்தில் இந்தியாவின் விருப்பத்தை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் மேற்குலக நாடுகளை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.

மேற்குலக நாடுகளை அவ்வாறான முடிவுகளை எடுக்க வைப்பதன் மூலம் - சோனியா காந்தியின் குரூர விருப்பங்களை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் காங்கிரஸ் தலைமையை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.

நாம் தெளிவாக இருப்போம் -

சிறிலங்கா அல்ல, இந்தியாவே தமிழர்களின் எதிரி. அதனையே நாம் இலக்கு வைக்க வேண்டும். மேற்குலக நாடுகளையும், அதன் தலைவர்களையும் நோக்கி எமது கவனத்தையும், சக்தியையும் சிதறவிடாமல் - இந்தியாவை நோக்கியே எமது எண்ணங்களையும், செயல்களையும் நாம் ஒருங்கு குவிக்க வேண்டும்.

ஒரேயடியாக - இந்தப் பிரச்சினைக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும்.

இந்தியாவை நோக்கிய எமது செய்தி - உலகம் முழுவதிலும் - ஒன்றாகவே இருக்க வேண்டும்:

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!
சிறிலங்காவுக்கான போர் உதவிகள் அனைத்தையும் நிறுத்து!

ஓவ்வொரு நாளும் 15 தமிழர்கள் சாகின்றனர். ஓய்ந்திருந்து யோசிக்க எமக்கு நேரமில்லை. அவர்களையும், எம் தேசத்தையும் காக்கும் வழியும் எமக்குத் தெரிகின்றது.

செயற்படுவோம், இப்போதே!

கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com


கையிழந்த தம்பி காத்திருக்கிறான், நாம் கை கொடுப்போம் என்ற நம்பிக்கையில்



Comments

PRO-LTTE Web Sites Target India As The Villain

By B. Raman

In a desperate attempt to secure a pause in the fighting in the Vanni area of Northern Sri Lanka in order to be able to regroup, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) has been emulating the tactics of human shields or human buffers used by the Hizbollah in the Lebanon in 2006 and by the Hamas in Gaza recently to slow down the Israeli military strikes.

2. While refusing to let the civilians in the areas still controlled by it to move to the safe zones proclaimed by the Sri Lankan Government under the pretext that the civilians cannot be forced to move against their will unless there is an internationally-guaranteed ceasefire, it has activated the Sri Lankan Tamil diaspora in the West and Australia to demonstrate in large numbers in the streets to highlight the plight of the civilians. It has mobilised the support of foreign human rights organisations on this issue. Impressive demonstrations were held by large numbers of Sri Lankan Tamils in different Western cities on January 31, 2009.

3. At the same time, pro-LTTE web sites have been highlighting the protests launched by some political parties and by some sections of students and lawyers in Tamil Nadu against the alleged violations of the human rights of the Sri Lankan Tamils and their calls for Indian intervention in support of the Sri Lankan Tamils. They have been trying to project as if the protest campaign in Tamil Nadu has been gathering momentum.

4. Some of the pro-LTTE web sites in the Tamil language have been carrying inflammatory articles projecting India as the villain for allegedly providing military assistance to Sri Lanka in its counter-terrorism campaign against the LTTE. They indirectly admit that during the last two years the LTTE has suffered a series of set-backs and attribute these set-backs to the assistance allegedly given by India to the Sri Lankan Army.

5. One such article calls upon the members of the Sri Lankan diaspora abroad to hold continuous demonstrations outside Indian diplomatic missions in protest against India's role in Sri Lanka. The pro-LTTE web sites have been directing their criticism against the Government of India as well as the Congress (I), which is projected as the "Sonia Congress". Some of the criticism is personally directed at Mrs. Sonia Gandhi.

6. They have been accusing the Congress (I) of taking vengeance on the Sri Lankan Tamil community for the assassination of Rajiv Gandhi in 1991.

(The writer is Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai. E-mail: seventyone2@gmail.com )