கட்சி அரசியலை பின் தள்ளிய மாணவர் பேரெழுச்சி

ஈழத் தமிழர் உயிர்ப்பிரச்சினையில் இந்திய அரசு இரட்டை வேடம் போடுகிறதா? இலங்கை அரசின் நாற்பத்தெட்டு மணிநேர கெடு காலத்திலும் பொதுமக்கள் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில்;

இந்தியா வலியுறுத்தித்தான் இலங்கை 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவித்தது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தமிழக முதல்வர் கலைஞர்களுக்கு கடிதம் எழுதிய அந்த "மை' காவதற்குள்ளேயே

இலங்கை அரசு; ""நாங்கள் அறிவித்தது கெடுதான். 48 மணிநேரம் போர்நிறுத்தம் இல்லை' என்று குரலிட்டு,

இதன் பின்னர் நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் நிலைப்பாடுதான் என்ன? உலகத் தமிழர்கள் முழுமையாக நம்பியிருக்கும் தமிழக முதல்வர் கலைஞரின் இழுத்தடிப்புக்கு என்ன காரணம்? அடுத்தடுத்த இறுதி எச்சரிக்கைகளின் பின்னணிதான் என்ன?'

உலகத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இன்று கேட்கும் கேள்வியும், சந்தேகங்களும் இவைதான்!

போர் என்ற போர்வையில் ஈழத்தமிழினமே அழிக்கப்பட்டு வருகிறது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் உரத்த குரல் எழுப்பி,பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வருவது ஒருபுறமாகவும், மாணவர்களின் அறவழிப் பேரெழுச்சி மறுபுறமாகவும் கொந்தளிக்க, ஈழத் தமிழரின் இன்னல் கண்டு கொதிப்புற்று, மனம்நொந்து தனது உயிரையே தீச்சுடராக அர்ப்பணித்த 26 வயது இளைஞர், பத்திரிகையாளர் முத்துக்குமாரின் இனத்தியாகம் உச்சக்கட்டத்தில் வெடித்த நிலையில் தமிழகமே மக்கள் போராட்டக்களமாக மாறியிருக்கும் சூழலில், நாளை மறுநாள் கூடும் தி.மு.க.செயற்குழுக்கூட்டத்திலாவது ஈழத்தமிழினத்தைக் காப்பாற்றும் இறுதித் தீர்மானத்தை முதல்வர் கலைஞர் முன்மொழிந்து, உடனடியாக செயல்பட்டு உலகத்தமிழர்களின் எதிர்பார்ப்பை நனவாக்குவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் திடீர் கொழும்பு விஜயம் குறித்து இரு அரசுகளின் அறிக்கைகளும் வெவ்வேறு கருத்துக்களில் வெளியாகி, தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு வழக்கம் போல வெறும் புஸ்வாணமாகி விட்ட நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் மனக்கொதிப்பு, ஏமாற்றம் புதிய போராட்டங்களை வடிவமைத்திருப்பதுடன், கட்சி அரசியலை பின்தள்ளி மாணவர்கள் கொண்டுள்ள எழுச்சிகள் தமிழகத்தையே ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது!

இலங்கைத் தமிழருக்கு குரல்கொடுத்து, தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும், மாணவர்களும் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்ட "ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சித் தலைவர்களான' டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், தா.பாண்டியன் ஆகியோர் கடந்தவாரம் "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' எனும் புதிய அமைப்பை தொடங்கிவைத்து நேற்றுக்காலை முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். சென்னை தியாகராயர் அரங்கில் நடந்த இக்கூட்டத்தில், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அமைப்புகளினது பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதுபற்றி இல.த.பா.இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நேற்றுக்காலை தினக்குரலுக்கு தெரிவிக்கையில்; தமிழகத்திலுள்ள அனைத்து தரப்பினரையும் அமைப்புக்களையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எமது அடுத்த கட்ட போராட்ட திட்டம் பற்றி முடிவு செது அறிவிக்கப்படும் என்றும், ஈழத்தமிழ் மக்களுக்கு எமது வேதனையைத் தொடர்ந்து வெளிப்படுத்துவதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என்றும் விளக்கினார்.

ஈழத்தமிழர் இனப்படுகொலை குறித்த தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையை புறக்கணித்த இந்திய மத்திய அரசுக்கும், தீர்மானங்களை ஒத்திப்போடும் தமிழக முதல்வருக்கும் கண்டனம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள்,புதிய இயக்கத்தின் கீழ் வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட முடிவு செதிருப்பது டில்லியிலும் அதிர்ச்சி அலையை எழுப்பியிருக்கிறது. இந்த இயக்கத்தில் மாநில அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவிக்கையில்; ""இலங்கைத் தமிழர் மீது நடத்தப்பட்டு வரும் மிருகத்தனமான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி, நிரந்தர அமைதி ஏற்பட என்னென்ன போராட்டங்களை நடந்துவதென்று ஆலோசித்துள்ளோம். தமிழகத்திலுள்ள மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கும் இப்போராட்டங்கள் படிப்படியாக பல்வேறு வடிவங்களில் செயல்படும்' என்று கூறினார். இக்கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் நேற்று "தினக்குரலு'க்கு தெரிவிக்கையில்; உலகத் தமிழ் மக்களின் தாயகமாக தமிழகம் உணரப்படுவதால், தமிழ்நாடு இன்று இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு, பொறுப்புகளும் அதிகரித்துள்ளன. உலகில் எந்த மண்ணிலும், எந்த மொழிபேசும் மக்களுக்கும் ஏற்பட்டிராத பெருந்துயரத்தை இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ளனர். நமது வரிப்பணத்தில் ஆயுதம் வாங்க வைத்து, ஈழத்து தமிழரைக் கொல்ல இந்தியா மறைமுகமாக இலங்கையுடன் சேர்ந்து யுத்தம் நடத்துகிறது. தமிழ் மக்களை அழித்துவிட்டு அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. முதலில் யுத்த நிறுத்தம், பின்னர் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இப்பொழுது வலிமை மிகுந்த போராட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. இதில், மாணவர்கள் சக்தி நிரம்பியிருக்கிறது. பல லட்சம் மாணவர்கள் ஒருங்கிணைந்து ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். மாணவர்கள் சக்தி மகத்தானது. தமிழ் நாட்டில்,ஹிந்தி எதிர்ப்பு போன்றவற்றில் வரலாறு படைத்தவர்கள். எதிர்வரும் நாட்களில் தமிழகத்தின் அழுத்தம் கடுமையாகவே இருக்கும். உலக சமூகமும், இந்திய சமூகமும் புரிந்துகொள்ளவே இந்த அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது' என்று எச்சரித்தார்.

இதனிடையே; டில்லியில் இம்மாதம் பன்னிரண்டாம் திகதி பாராளுமன்றம் கூடும்போது பாராளுமன்றத்துக்கு முன்பாக உண்ணாவிரதம் மேற்கொள்ள தமிழ்ப்படைப்பாளிகள் முன்னணி திட்டமிட்டுள்ளது. முன்னணியின் செயலாளர் பா.ஜெயப்பிரகாசம் தினக்குரலுக்கு தெரிவிக்கையில், ""ஈழத்தமிழின படுகொலையைக் கண்டிக்காமல், இதற்குத் துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்து படைப்பாளிகள், மாணவர்கள், கலைஞர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர்,அரவாணிள் பங்குபெறும் மாபெரும் தொடர் உண்ணா நிலைப்போராட்டம் இம்மாதம் பன்னிரண்டாம் திகதி பாராளுமன்றம் முன்பாக தொடங்கிவைக்கப்படும். இதற்கான ஆலோசனைக் கூட்டம், இன்று முதலாம் திகதி எழும்பூரில், சென்னை அருங்காட்சியகம் அருகில் நடைபெறும்' என்று கூறினார்.

அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் இவ்விதமாக இருக்க, மாணவர்களின் வகுப்புகள் பகிஷ்கரிப்பு, உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டங்கள் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 14 பேரின் ஏழுநாள் உண்ணாவிரதம் முடிந்த நிலையில், சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளனர். திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்பு உண்ணாநோன்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தஞ்சாவூரில் போராட்டம் நடத்திய 15 மாணவர்கள் கைது செயப்பட்டனர். இது போல, பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் 15 பேர் கடந்தவாரம் கைது செயப்பட்டனர். சென்னையிலும் பல மாணவர்கள் கைது செயப்பட்டனர். மாணவர்களுடன் வழக்கறிஞர்களும் நீதிமன்றில் புறக்கணிப்பு போராட்டத்தை கடந்தவாரம் ஆரம்பித்து பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். காலவரையறையற்ற நீதிமன்ற புறக்கணிப்பைத் தொடரவும் வழக்கறிஞர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஈழத்தமிழருக்காக உயிர்த்தியாகம் செத முத்துக்குமாரின் புகழுடல் நேற்று, ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீர்க்கடலில் சங்கமித்து, சென்னையில் மூலகொத்தளம் மயானத்தில் அடக்கம் செயப்பட்டது. எல்லாத் தரப்பினரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மாணவர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். திரைப்படத்துறையினர் வாவிட்டு கதறி அழுதனர்.

தமிழ்மொழியிலும், தமிழர்கள் மீதும் மிகுந்த பற்றுக் கொண்ட முத்துக்குமார் ஒரு வித்தியாசமான இளைஞர். அவர் பள்ளியில் படிக்கும்போது, ஆசிரியைகளை அம்மா என்றும், ஆசிரியர்களை ஐயா என்றுமே அழைப்பார். வகுப்பறைக்கு ஆசிரியர் வந்தால் "குட்மானிங் சார்' என்பதற்கு பதிலாக ""வணக்கம் ஐயா, உள்ளேன் ஐயா' என்பார். ஆங்கிலக் கலப்பை சேர்க்காமல், சுத்தமான தமிழில்தான் பேசுவார், எழுதுவார். குட்மானிங் சார் என்று கூறாததற்காக, பள்ளிக்கு செல்லாமல் படிப்பை நிறுத்திக் கொண்ட முத்துக்குமார், ஒரு மாத தமிழ் சஞ்சிகையில் பத்திரிகையாளராக கடமையாற்றி, தமிழுக்காக வாழ்ந்து, தமிழருக்காக உயிர் நீத்தார். முத்துக்குமாரின் மறைவு குறித்து, இரண்டு எம்.ஏ.பட்டங்களைப் பெற்ற, பார்வையற்ற மனவிழிக்கவிஞர் நேற்று எழுதிய கவிதை அஞ்சலியின் சில வரிகள்!

ஒரே ஒரு மடல் எழுதி உன்னையே சுடராக்கிப்

பலகோடி விழிகளின் பார்வைக்கு வைத்தாயே.

வெற்றுத்தீயல்ல! உனது தீ ஈசனின்

நெற்றிக் கண்ணில் நிதர்சனப் பெருந் தீ!

வாழைமட்டை மனங்களைக் கூடப்

பற்றிக் கொள்ளும் பட்டினத்தார் தீ!

நீ; தியாகத்தில் பூத்த செந்தழல் மலர்!

-தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா -


Comments