அவுஸ்திரேலியாவில் அமெரிக்கா, பிரித்தானியா, இந்திய தூதரகங்களை நோக்கி மாபெரும் கண்டனப் பேரணி

சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலைக்கு எதிராக ஓங்கிக்குரல் கொடுக்கவும் மெளனித்திருக்கும் உலகைத் தட்டி எழுப்பவும் நாளை வியாழக்கிழமை (05.02.09) காலை 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை அவுஸ்திரேலியாவின் தலைநகரான கன்பராவில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்பேர்ண், கன்பராவில் உள்ள மக்கள் அனைவரும் கன்பராவில் ஒன்றிணைந்து, நாடாளுமன்றம் முன்பாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பிரித்தானியா, அமெரிக்க, இந்திய தூதரகங்களுக்கு பேரணியாகச் சென்று மனு வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாவது:

தொடரும் போரினால் தமிழர்கள் படும் இன்னல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர குறைவதாய் இல்லை. மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மரணப் பொறிக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு அவர்களும் தமது பணியினை முறையாக முன்னெடுக்க முடியாத நிலை தொடர்கின்றது.

இந்நிலையிலும் உண்மைக்கு வாய்ப்பூட்டு போட்டு உலகம் மெளனம் சாதிக்கின்றது.

இனி பொறுத்துக் கொண்டிருந்தால் நமது உறவுகளைத் தான் தொடர்ந்து இழந்து கொண்டிருப்போம்.

எமது மக்கள் யாருமற்ற அநாதைகள் அல்லர். அவர்களுக்கு நாம் இருக்கின்றோம். அவுஸ்திரேலியா முதல் கனடா வரை உலகை அதிர வைப்போம். இனப் படுகொலைக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுப்போம். மெளனித்திருக்கும் உலகைத் தட்டி எழுப்புவோம்.

ஹோம்புஷ், ஓபர்ன், செவன் ஹில்ஸ் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் பேருந்துகள் சரியாக காலை 6:00 மணிக்குப் புறப்படும் என்பதால் காலை 5:45 நிமிடத்துக்குள் பேருந்து புறப்படும் இடங்களுக்குள் வந்து விடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பேருந்து சீட்டுக்கு முன்பதிவு செய்ய கீழ்காணும் எண்களுக்கு அழைத்து உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

ஹோம்புஷ்: லிங்கம்/ஜெகன் ( பிரமிட் வீடியோ & ஸ்பைசஸ்)

தொலைபேசி இலக்கம்: (02) 9764 4433

செல்லிடப்பேசி இலக்கம்: 0412 486 573

ஓபன்: வேலுபிள்ளை - 0412 440 759

செவன் ஹில்ஸ்: ஜேம்ஸ் சுகுமார் - 0414 790 908

Comments