சிறிலங்காவின் தலைநகரில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மீது தாக்குதல்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியதனால் அலுவலக கட்டடத்திற்கு சேதம் ஏற்பட்டதுடன் அங்கு கடமையில் இருந்த பணியாளர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் முறையிட்டுள்ளதுடன் காவல்துறை மா அதிபரிடமும் முறையிடப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பம்பலப்பிட்டி காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

இதேவேளை, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கொழும்பில் உள்ள ஏனைய அனைத்துலக தொண்டு அமைப்புக்களும் தமது அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு மகிந்த அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளன.

வாகனம் ஒன்றில் சென்ற இளைஞர் குழுவினர் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் விடுதலைப் புலிகளின் ஊதுகுழல் என கூறி சத்தமிட்டவாறு தாக்குதல் நடத்தியதாக சங்கத்தின் காவலாளிகள் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்படுவீர்கள் என சத்தமிட்டதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் படையினரின் வெற்றிகளை திசை திருப்பும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளருமான விமல் வீரவன்ச கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குற்றம் சாட்டி சில மணி நேரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது படையினர் தாக்குதல் நடத்தினர் என்றும் வீசப்பட்ட குண்டுகள் எரிவாயு தன்மை கொண்டவை எனவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது.

அத்துடன் போர் விதிமுறைகளுக்கு மாறாக படையினர் செயற்படுவதாகவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Comments