நாகை மாவட்டம், சீர்காழி நகர், பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தியின் மகன் "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரன் (வயது 47). இவர் மயிலாடுதுறை வட்டம், தலைஞாயிறு கூட்டுறவு சீனி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இவர், இந்திய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒரு குடும்பத்தின் உறுப்பினர் ஆவார். "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரன் கட்சியின் நகரச் செயலாளராகவும், அவரின் தாய் சரஸ்வதி கட்சியின் நகர மகளிர் அணி துணைத் தலைவியாகவும் உள்ளனர்.
இன்று சனிக்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரன் தனது தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
உடலில் தீ எரிந்துகொண்டிருக்கும் போது, "தமிழ் வாழ்க!... தமிழீழம் வெல்க!... காங்கிரஸ் ஒழிக!... ராஜபக்ச ஒழிக!... என ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டே எரிந்திருக்கிறார் என்றும், இவை வீடியோவில் பதிவாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரின் பெற்றோர் உடனேயே தீயை அணைத்ததுடன், உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தமிழீழம் வெல்க!
சீர்காழி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரன் -
தமிழீழம் வெல்க!
தமிழ் வாழ்க!
தமிழ் மக்களை காப்பாற்றுங்க!
ராஜபக்ச ஒழிக!
காங்கிரஸ் ஒழிக!
போரை நிறுத்துங்கள்!
என வலியின் வேதனையிலும் முழக்கமிட்டார்.
சீர்காழி அரசு மருத்துவமனையில் முதல் கட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக மருத்துவத்துக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாலை 3:45 நிமிடமளவில் "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரன் உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு.க.பெரியசாமி, பன்னீர்ச்செல்வம், க.அன்பழகன், ரவிக்குமார் ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்து "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
மேலும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வேலு.குணவேந்தன், மாநில இளைஞர் எழுச்சிப் பாசறை துணை செயலாளர் மா.ஈழவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் கோ.ஆலயமணி, மாவட்டச் செயலாளர்கள், கா.அப்துல் ஹமீட், க.அகோரம், அமைப்பு செயலாளர் தங்க. ஐயாசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் த.கலியமூர்த்தி, வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஏ.ஐயப்பன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் எம்.மகாலிங்கம் உட்பட 500-க்கும் அதிகமானோர் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.
இதேவேளை, தமிழீழ மக்களுக்கு ஆதரவாக ஏற்கெனவே "வீரத் தமிழ் மகன்" முத்துக்குமார் என்ற ஊடகவியலாளர் சென்னை மத்திய அரச செயலக முன்பாகவும் "வீரத் தமிழ் மகன்" ரவி மதுரையிலும் தம்மை எரித்து வீரச்சாவடைந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Comments