தாயக மக்களை காப்பாற்றுமாறு கோரி தமிழ்நாட்டில் அகதி ஒருவர் தீக்குளித்து மரணம்

தாயகத்தில் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வாழ்ந்த இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தீக்குளித்து தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார்.

இவர், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உருக்கமாக ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்தார்.

அதன்பின் பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை அமரேசன், சிவப்பிரகாசம் உட்பட தமிழகம் முழுவதும் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் சிவகாசி அருகே வாழ்ந்து வந்த இலங்கை தமிழ் அகதி ஒருவரும் தீக்குளித்துத் தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவரான பாலசுப்பிரமணியம் கோகுலரத்தினம் (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ள இவர், 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்றுள்ளார்.

பின்னர், இந்தியக் குடியுரிமை பெற்று அரசு சார்பில் சிவகாசி அடுத்த ஆனையூர் காந்திநகரில் உள்ள 'சிலோன்' குடியிருப்பில் வழங்கப்பட்ட 2 சென்ட் நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வந்தார்.

அங்கு, சிவகாசி 'காளீஸ்வரி' பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.



இலங்கையில் சிங்களப் படையால் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதால் கோகுலரத்தினம் மனவேதனையுடன் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் கையில் மண்ணெண்ணெய் கலன், ஆளும் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் கொடியுடன் இன்று புதன்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள உலங்குவானூர்தி இறங்கும் தளத்திற்கு சென்ற அவர், அங்கு தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துள்ளார்.

அவரின் அலறல் ஓசை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள் அனைவரும் ஓடி வந்து கோகுலரத்தினத்தின் உடல் மீது சாக்குப் பைகளைப் போர்த்தித் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் உடல் கருகிய நிலையில் கோகுலரத்தினம் உயிரிழந்தார்.

செய்தி அறிந்ததும், மாவட்ட ஆட்சியர் ரகுபதி சென்று பார்வையிட்டார். பின்னர் காவலர்கள், கோகுலரத்தினம் தீக்குளித்து இறந்த இடத்தில் சுருட்டிய நிலையில் கிடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியையும், அவரின் குடும்ப அட்டையையும் கைப்பற்றினர்.

சுருட்டப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைப் பிரித்துப் பார்த்தபோது அதில் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது. அதில், தமிழக முதல்வர் கலைஞர் விரைவில் குணமடைய வேண்டும். இலங்கையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடி வரும் இராமதாஸ், திருமாவளவன், வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்யக்கூடாது என எழுதப்பட்டிருந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

கோகுலரத்தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியுடன் சென்றததால் அவர் அக்கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கோகுலரத்தினத்தின் உடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் கோகுலரத்தினம் தீக்குளித்துத் தன் உயிரைத் தியாகம் செய்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Comments