![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0N7Q0NE2YbPApneMb_gLvUs1vlLPOGKpEvKZJl9RnZ9NsK6Ve5KRVTMZZH-upZOcGd2MN0fktRss5aBvbi-lSvp8sQOETAfr6k3LgzBThyphenhypheneMlgogql5B6qHIK6hb2xxeJjnmvpXk01v8Z/s400/thamizh_desam_138.jpg)
செப்டெம்பரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஓர் இந்தியத் தூதுக்குழுவுக்கும் இடையே பலாலியில் அரசியல் உரையாடல் நடைபெற்றது. கண்ணுக்கெட்டும் தொலைவில் அமைதித் தீர்வு வந்துவிட்டாற் போல் தெரிந்தது. இடைக்கால நிர்வாக மன்றம் (சபை) அமைப்பது தொடர்பான சிக்கலைத் தீர்க்க வேண்டியிருந்தது. பலாலியில் எனது இராணுவத் தலைமை யகத்தில் இந்தியத் தூதர் ஜெ.என். தீட்சித்தின் தலைமையில் நடைபெறவிருந்த சந்திப்புக்கு 1987 செப்டெம்பர் 16-17 என நாள் குறிக்கப்பட்டது.
1987 செப்டெம்பர் 14/15 இரவில் தீட்சித் என்னைத் தொலை பேசியில் அழைத்து, பிரபாகரன் பேச்சுவார்த்தைக்கு வரும்போது அவரைத் தளைப்படுத்துங்கள் அல்லது சுட்டுத் தள்ளுங்கள் என்று கட்டளையிட்டார். பிறகு உங்களை அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டு நான் அனைத்துப் படைத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் திபிந்தர் சிங்கை அழைத்துப் பேசினேன்.
நாங்கள் அறம்பிழாப் படையினர் ஆதலால் வெள்ளைக் கொடியுடன் பேச்சு நடத்த வருகிறவர்களைச் சுட மாட்டோம் என்று தீட்சித்துக்குச் சொல்லிவிடும்படி திபிந்தர் சிங் எனக்குக் கட்டளையிட்டார். பிறகு நான் கொழும்பிலிருந்த தீட்சித்தை அழைத்து, இந்தச் செய்தியைத் தெரியப்படுத்தினேன்.
உங்கள் கட்டளைக்கு நான் கீழ்ப்படிய மாட்டேன் என்றும் அழுத்திச் சொன்னேன். (இந்திய இலங்கை) உடன்பாட்டின் செய லாக்கத்தில் எழுந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு இந்திய அமைதிக் காட்டிய படைதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை அழைத்துள்ளது என்று சுட்டிக் காட்டினேன். தீட்சித் சொன்ன பதில் இதுதான்:
"அவர் (இராசீவ் காந்தி) எனக்கு இந்தக் கட்டளைகளைத் தந்துள்ளார். இராணுவம் இதிலிருந்து கழன்றுகொள்ளுமானால், இந்திய அமைதிக் காப்புப் படையின் கட்டளைத் தளபதி ஆகிய நீங்களே பொறுப்பாவீர்கள்''
மறுநாள் காலை அப்போது இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநராக இருந்த லெப்டினண்ட் ஜெனரல் பி.சி. ஜோஷி என்னை அழைத்து, தீட்சித்தின் கட்டளை தொடர்பான என் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி எரிச்சலுற்றார். உடனே அவர் பலாலியில் இருந்த என்னிடம் பேசும்படி அனைத்துப் படைத் தளபதிக்குச் சொல்லி விட்டார்.
விடுதலைப் புலித் தலைவர்களைச் சந்திப்பதற்காக என்னை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லும்படியும் கட்டளையிட்டார். 1987 செப் டெம்பர் 16இல் நடக்கவிருந்த கூட்டத்தில் பிரபாகரன் கலந்து கொள்வதையும் அனைத்துப் படைத் தளபதியே உறுதிசெய்ய வேண்டும் என்றார். பிரபாகரன் பலாலி வந்து சேர்ந்தவுடன் தீட்சித் துக்குத் தகவல் தெரிவிக்கச் சொன்னார். தகவல் கிடைத்தவுடன் தீட்சித் கொழும்பிலிருந்து உரிய நேரத்தில் புறப்பட்டு வந்து விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
அனைத்துப் படைத் தளபதியும் நானும் யாழ்ப்பாணத்துக்கு உலங் கூர்தியில் (ஹெலிகாப்டர்) பறந்து சென்று பிரபாகரனைச் சந்தித் தோம். பேச்சுவார்த்தைக்காக அவரையும் அழைத்துக் கொண்டு பலாலி திரும்பினோம். கொழும் பில் உள்ள இந்தியத் தூதரகத்துக் குத் தகவல் கொடுத்து தீட்சித் திட்டப்படி பகல் 11 மணிக்கு பலாலி வரச் செய்தோம்.
நான் அவரை வரவேற்று, லெப்டினண்ட் ஜெனரல் திபிந்தர் சிங்கையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவையும் சந்திப்பதற்காக அதிகாரிகள் உணவுக் கூடத்துக்கு அழைத்துச் சென்றேன். பேச்சு வார்த்தை நடந்து மிகவும் வெற்றி கரமாக முடிந்தது. எங்களில் பெரும்பாலார் இந்திய அமைதிப் படை 1987 திசம்பருக்குள் இலங்கையை விட்டு வெளியேறி விடும் என்ற முடிவுக்கு வந்தோம். முடிவில் முட்டுக்கட்டை நீங்கி விட்டது, அமைதி நெருங்கி வந்து விட்டது என்றே கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் நினைத்தோம். பகலுணவுக்குப் பிறகு விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவினர் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வதை நான் உறுதி செய்தேன். அவர்கள் தங்கள் ஊழியர்களின் வழிக்காவலுடன் சாலை வழியாகப் பயணம் செய்வதையே விரும்பினார்கள்.
அநேகமாக இந்த நிகழ்ச்சியை வைத்தே, இந்திய அமைதிக் காப்புப் படை செய்ய வேண்டியதைச் செய்வதற்குச் சிறிதும் அணியமாய் இல்லை என்று தீட்சித் இந்திய அரசுக்கு எழுதியதாகத் தகவல். அமைதிப் படைத் தளபதிகள் பிரபாகரனுக்கு அசாதாரண மரியாதை காட்டு கிறார்கள், "அவருக்கு வணக்கம் கூடத் தெரிவிக்கிறார்கள்' என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். முடிவில், 54ஆம் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியை மாற்றா விட்டால் பேரழிவுச் சூழல் உருவாகக் கூடும் என்றும் தெரிவித்தார்.
("ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியும் இலங்கை சென்ற இந்திய அமைதிப் படைத் தளபதிகளில் ஒருவருமான மேஜர் ஜெனரல் அர்கிரத் சிங் எழுதிய "சிறிலங்காவில் தலையீடு' நூல், பக்கம் 57-58)
Maj.Gen.Harhirat Singh (Retd.) Intervention in Sri Lanka - The IPKF Experience Retold, 2007 Manohar Publishers, New Delhi, Price
Comments