இந்தியாவின் முயற்சி தமிழ் மக்களை பேரினவாதத்திற்கு அடிமைகளாக்கி அழிப்பதற்கே வழிவகுக்கும்: செ.கஜேந்திரன்

வன்னியில் உள்ள தமிழ் மக்களை வெளியேற்ற இந்தியா முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக கூறுவது தமிழ் மக்களை முழுமையாக அகதிகளாக்கி - சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிமைகளாக்கி - அழிப்பதற்கே வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு நேற்று புதன்கிழமை (25.02.09) செல்வராஜா கஜேந்திரன் எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போரினை சிறிலங்கா அரசு மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது.

பொதுமக்களை இலக்கு வைத்து வான் தாக்குதல்களையும் எறிகணைத் தாக்குதல்களையும் உக்கிரமாக நடாத்தி வருகின்றது.

பொதுமக்களை இலக்கு வைத்து திட்டமிட்டு மேற்கொண்டு வரும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் கடந்த 01.01.2009 தொடக்கம் 24.02.2009 வரையான 55 நாட்களில் மட்டும் 2,076 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 4,727 தமிழ் மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் சிறுவர்கள் அதிகளவில் அடங்குகின்றனர். இறந்தவர்களில் அதிகளாவானோர் படுகாயமடைந்த நிலையில் உரிய மருத்துவ வசதிகள் எதுவும் இன்றியே உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நேற்று 24 ஆம் நாள் வரை 1948 பேர் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளவர்கள் சிங்களவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு சிகிச்சைகளுக்காக பலவந்தமாக அனுப்பப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு உதவிக்காக வந்தவர்கள் பலவந்தமாகப் பிரிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உறவினர்கள், நண்பர்களின் உதவிகள் எதுவும் இன்றி பாரிய மனிதாபிமான நெருக்கடிகளை காயமடைந்தவர்களும் உதவிக்கு வந்தவர்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலதிக சிகிச்சைகளுக்காக கொண்டு வரப்பட்டவர்கள் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள போதிலும் அவர்களின் உடலங்கள் வன்னியில் உள்ள உறவினர்களிடம் அனுப்பி வைக்கப்படாமலேயே அடக்கம் செய்யப்படுகின்றது.

சிகிச்சைக்காக வந்த நோயளிகளும் உதவிக்கு வந்துள்ளவர்களும் மீண்டும் வன்னியில் உள்ள தமது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று இணைந்து கொள்ள அனுமதி மறுத்துள்ள சிறிலங்கா அரசு, அவர்களை குடும்ப உறுப்பினர்களுடன் இணைவதனை தடுக்கும் வகையில் பலவந்தமாக முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர்.

இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசங்களுக்குள் வன்னியில் இருந்து இதுவரையில் 35,000 வரையான பொதுமக்கள் வந்துள்ளதாக அரசு கூறுகின்றது.

இவர்கள், அனைவரும் தாமாக விரும்பி வரவில்லை மாறாக மக்கள் வாழ்விடங்களை இராணுவம் திடீரென கைப்பற்றிய போது இராணுவத்தினரிடம் அகப்பட்டு இராணுவத்தினரால் பலவந்தமாக கொண்டு வரப்பட்டவர்களும் பெருமளவில் உள்ளனர்.

அவ்வாறு வந்த பொதுமக்களை ஆண்கள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் வேறாகவும் தாய்மார் மற்றும் குழந்தைகள் வேறாகவும் பிரிக்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அனுப்பப்படும் போது பெருமளவு பெண்களும் ஆண்களும் படையினரால் தெரிவு செய்யப்பட்டு இரகசிய முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆண்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். பெருமளவானோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

எஞ்சியவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் பெயர் விபரங்களை இராணுவம் இரகசியமாக வைத்துள்ளது.

குடும்பங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுளமையினால் எத்தனை பேர் காணமல் போனார்கள் யாருடய உறவினர்கள் காணாமல் போனார்கள் என்ற விபரங்கள் எதுவும் தெரியாமல் முகாம்களில் உள்ள மக்கள் தவிக்கின்றனர்.

முகாம்களில் உள்ள இளம் பெண்களும் ஆண்களும் விசாரணைகளுக்காக என்று கூறி இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டு துன்புறுத்தப்படுவதுடன் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும்போது அக்கொடூரத்தினை படையினர் வீடியோ கமராக்களில் பதிவு செய்யும் கொடூரங்களும் நடைபெற்று வருவதாக முகாம்களில் இருந்து நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

மக்கள் தமது பிரச்சினைகளை வெளியே யாருக்கும் சொல்ல முடியாதளவுக்கு இராணுவத்தினரதும் துணை இராணுவக் குழுவினரதும் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாக முகாம்களில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தூதரகங்களை சார்ந்தவர்களும் முகாம்களுக்கு பயணம் செய்து பொதுமக்களை சந்திக்கும்போது பொதுமக்களுடன் சிவில் உடை அணிந்து இராணுவப் புலனாய்வுத்துறையினரும் துணை இராணுவக் குழுவினரும் பொதுமக்கள் போன்று நிற்பதனால் அச்சம் காரணமாக மக்கள் உண்மைகளை பேச முடியாதுள்ளதாகவும் குறித்த சில மணி நேரங்களில் அல்லது ஓரிரண்டு நாட்களில் மக்களின் உண்மையான பிரச்சினைகளை கேட்டறிய முடியாது என்றும் முகாம்களில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் பெருமளவானோர் தாம் வன்னியில் உள்ள தமது உறவினருடன் சென்று மீண்டும் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் ஆனால் அது தொடர்பாக பேசினால் இராணுவத்தினரால் தாம் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட நேரிடும் என அஞ்சுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் கொழும்பு உட்பட தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டும் உள்ளனர்.

அப்பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், சித்திரவதைகள், கொள்ளைகள் என்பன தாராளமாக நடைபெற்று வருவதுடன் மிக வேகமான சிங்கள மயமாக்கலும் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலும் ஏற்கனவே இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தவோ சிங்கள மயமாக்கலை தடுக்கவோ இந்திய அரசாங்கத்தினால் முடியாமல் போய் உள்ளது.

சிறிலங்கா அரசின் நடவக்கைகளை நோக்கும் போது வன்னியில் எஞ்சியுள்ள பகுதிகளை கைப்பற்றி முழு அளவிலான இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகி வருவதை தெளிவாக உணர முடிகிறது.

இந்நிலையில் வன்னியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவர முயற்சி செய்வது சிங்கள-தமிழ் மக்களுக்கு இடையிலான 60 ஆண்டுகால பிரச்சினைகளை தீர்க்க ஒரு போதும் உதவப் போவதில்லை.

இவ்வாறான நிலையில் வன்னியில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கான நம்பகமான பாதுகாப்பான வழிமுறைகளை கண்டறியுமாறும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயாராக உள்ளதாகவும் இந்தியா கூறுவது தமிழ் மக்களை முழுமையாக அகதிகளாக்கி சிங்கள பௌத்த பேரினவாததிற்கு அடிமைகளாக்கி அழிப்பதற்கே வழி வகுக்கும்.

எனவே, இந்தியா வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை உடன் கைவிட வேண்டும் என்பதுடன்

சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் இன அழிப்பு போருக்கு வழங்கும் சகல ஆதரவையும் உடன் விலக்கிக்கொண்டு, உடனடி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்தவும் வன்னியில் உள்ள மக்களுக்கான உடனடி மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைக்க நடவடிக்கை ஏடுக்க வேண்டும் எனவும் கோருவதுடன்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி -

அவர்களை தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக அங்கீகரித்து -

தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கையை அங்கீகரிப்பதன் மூலம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் கோருகின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments