ஐ.நா.வில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை தடுத்து நிறுத்திய ரஸ்யா

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் மெக்சிகோ நாடு கொண்டுவர இருந்த பிரேரணையினை ரஸ்யா தடுத்து நிறுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையின் தற்போதைய நிலமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் மெக்சிக்கோ கொண்டுவர இருந்த தீர்மானத்தை ரஸ்யா தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் உறுப்பினராக இணைந்துள்ள மெக்சிக்கோ கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இரகசிய கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்திருந்தது.

எனினும், ரஸ்யா அதனை எதிர்த்ததுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெறுவது தேவையற்றது எனவும் தெரிவித்திருந்ததாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, மெக்சிக்கோவின் தீர்மானம் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதனால் அது அதிக முக்கியத்துவமற்றது.

இலங்கையின் விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் கொண்டு வரப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியான ஜி.எஸ்.பலிகக்கரா மெக்சிக்கோ பிரதிநிதிகளை சந்தித்து சிறிலங்காவின் நிலை தொடர்பாக விளக்குவார். எனவே, இந்த விவகாரம் பாதுகாப்பு சபைக்கு வராது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபைக்கு வருவதை ரஸ்யா மட்டும் எதிர்க்கவில்லை. பிரித்தானியாவும் எதிர்த்து நிற்பதாக சபையின் இந்த மாதத்தின் தலைவரான யுகியோ ரகாசு தெரிவித்தார்.

சூடானின் டாபர் மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளும், இலங்கையில் தோன்றியுள்ள பிரச்சினைகளும் ஒரே மாதிரியானவையல்ல என பிரித்தானியாவின் தூதுவர் ஜோன் சாவெர் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Comments