''ஏன் இப்படிப் பண்ணின?''
''ஈழப் பிரச்னையில மத்திய அரசாங்கத்தோட கண்ணு குருடாகிருச்சு. நான் வெச்சுக்கிட்ட தீ அதோட கண்ணைத் திறக்கும்.''
''இவ்வளவு படிச்சவனா இருக்க... தீக்குளிச்சுச் சாகுறது தப்பில்லையா?''
''என்னைவிட படிச்ச, புத்திசாலிகளை மொத்தமாக் குண்டு போட்டு தினம் தினம் கொல்லுதே இலங்கை அரசு.''
''எந்த ஊர் தம்பி நீ?''
''தூத்துக்குடி மாவட்டம் கொலுவை நல்லூர். இங்க கொளத்தூர்ல இருக்கேன். அப்பா, இரும்பு வியாபாரி. தங்கச்சி தமிழரசி கர்ப்பமா இருக்கா. அவளுக்கு இது தெரிய வேணாம்.''
''நீ ஏம்ப்பா இப்படிப் பண்ணின?''
''என் இனத்துக்காக... வேற வழி தெரியல. எங்க ஊர்ல நிறையப் பேரு ராணுவத்துல சேர்ந்து, நாட்டுக்காக உயிரை விட்டிருக்காங்க. அதனால, கொலுவை நல்லூரைக் கொள்கைநல்லூர்னு சொல்வாங்க. அந்த ஊர்க்காரன் நான்.''
''போன் நம்பர் கொடுப்பா... யாருக்குத் தகவல் சொல்லணும்?''
'தலைவர் பிரபாகரனுக்குச் சொல்லுங்க. அண்ணன் திருமாவளவனுக்குச் சொல்லுங்க... பிரபாகரன் கில்லாடி. அவருக்கு இந்நேரம் இது தெரிஞ்சிருக்கும்'' மரணிக்கிறது வார்த்தை!
மரண சாசனத்தின் ஒவ்வொரு வார்த்தையும் படிக்கப் படிக்க, நடுங்குகிறது நெஞ்சு. 'என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். உங்களைப் போல்தான் நானும் தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்துப் பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக்கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல், தவிக்கும் எத்தனையோ பேரில் நானும் ஒரு சாமானியன். வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால் ஆம் என்றோ, இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் நியாயமானதென்றால், அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே! ஏன் திருட்டுத்தனமாகச் செய்ய வேண்டும்?
ஜாலியன்வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னி யிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தை களைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?
சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம் மக்களைக் கொலை செய்து வருவது சர்வதேச சமூகத்தின் மௌனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்? நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம், பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபராஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி, ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்துகொள்கிறோமே... எங்கள் சகோதரிகளையும் குழந்தைகளையும் விட்டுவிடச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமாரச் சிரிப்பதை ஒரு நாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக்கொண்டு இருப்பதே!''இப்படி ஓடிக்கொண்டே போகிறது முத்துக்குமாரின் வார்த்தைகள்.
கடல் கடந்த சோகத்தால் கண்ணீர்விட்டவர்களையும் கண்டுகொள்ளாதவர்களையும் குற்ற உணர்ச்சியில் தள்ளிவிட்டுப் போயிருக்கிறது முத்துக்குமாரின் மரணம். அவர் ஒரு பத்திரிகையாளர் என்பது இறப்புக்குப்பிறகு தான் பத்திரிகைகளுக்குத் தெரியும். அவர் சினிமாவில் உதவி இயக்குநர். கொளுத்திக்கொண்ட பிறகுதான் சினிமாக்காரர்கள் அறிவார்கள். ஆனால், மரண சாசனத்தை எழுதிவைத்துவிட்டு, அந்தத் தீ தனது தேகத்தைச் சுட்டெரிக்கும்போதும் கலங்காமல், 'தமிழீழம் வெல்க!' என்ற முழக்கத்தை மட்டும் நிறுத் தாமல் கருகிய முத்துக்குமார், இன்று உலகத் தமிழ்க் குடும்பங்களின் முதல் பிள்ளையாக உச்சிமுகர்ந்து மெச்சப்படுகிறார்.
மூன்று நாடுகளின், முப்படைகளின் தாக்குதலில் சிக்கிச் சிதைந்துகொண்டே இருக்கும் ஐந்து லட்சம் மக்களைத் தங்களது படைபலத்தால் காத்து வரும் விடுதலைப் புலிகள், முத்துக்குமாருக்கு 'வீரத் தமிழ் மகன்' என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள். பெரும் பாலும் இந்திய நிகழ்வுகள் குறித்து அறிக்கைகள் விடாத புலிகள், இதுவரை இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். ஆகிய இருவர் இறப்புக்குக் கண்ணீர் அஞ்சலி அறிக்கை வெளியிட்டார்கள். இப்போது முத்துக்குமாருக்காக! அடுத்தகட்ட வியூகங்களைப் பற்றிப் பேச தனது தளபதிகள் அத்தனை பேரையும் அழைத்த பிரபாகரன், அப்போது முத்துக்குமாரின் கடிதத்தை அனைவருக்கும் வாசித்துக் காண்பித்ததாக வைகோ சொல்கிறார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, தன்னை மட்டும் சுட்டுக்கொண்ட எத்தனையோ தீக்காயங்களைப் பார்த்திருக்கிறது. முதல் தடவையாக உலகத்தின் மொத்தப் பேர் மனங்களையும் தனது வார்த்தைகளால் சுட்டவனைப் பார்த்தது.
27 வயதுக்குள் அடங்கிய முத்துக்குமாரின் அப்பா குமரேசன் இரும்புக் கடையில் வேலை பார்க்கிறார். மகனுக்கு இப்படியரு எஃகு மனம் இருப்பதைத் தெரிந்துகொள்ளாத பாசக்காரத் தந்தை. முத்துக்குமார் மூத்தவர். அடுத்தது வசந்தகுமார். கடைசியாக, தங்கை தமிழரசி. இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் வசந்தகுமார் இறந்துபோனார். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் இவர்களின் அம்மா மறைந்தார். வேறு வசதி வாய்ப்பு கள் அற்ற குடும்பம்.
முத்துக்குமார், பத்தாம் வகுப்பு வரை படித்தவர். 500க்கு 466 மதிப்பெண்கள். சின்ன வயதில் இருந்தே தமிழ்ப் பற்று. அதை ஊட்டியவர் புலவர் தமிழ்மாறன். எங்கு கூட்டங்கள் நடந்தாலும், போய் கவனிப்பதும், கிடைத்த புத்தகங்களைப் படிப்பதுமாக ஆர்வம் அதிகமானது. குடும்ப நிலைமை காரணமாக, படிப்பை நிறுத்தியிருக்கிறார்.
ஆனால், அறிவுத் தேடுதல் அதன் பிறகுதான் தொடர்ந்திருக்கிறது. அந்தக் கடிதம் அவரது அறிவின் ஆழத்தையும் வீரியத்தையும் சொல்கிறது.மெக்ஸிகோவில் இருந்து அழிந்துபோன மத்திய அமெரிக்க இனம் மாயா. தென்னாப்பிரிக்காவில் இருந்து அழிந்து போனவர்கள் இன்கா. அதைத்தான் முத்துக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஹட்டியில் நடந்த ராணுவ நடவடிக்கை முதல் உலகக் குத்துச்சண்டை வீரர் முகமது அலி சொன்னது வரை அனைத்தும் தனது தீவிரமான படிப்பின் காரணமாக உள்வாங்கிக் கடிதத்தில் வடித்திருக்கிறார். ''பத்தாம் வகுப்பு படித்தவனுக்கு இதெல்லாம் தெரியுமா? அவனுக்கு இவ்வளவு இலக்கணச் சுத்தமாக எப்படி எழுத வந்தது?'' என்ற போலீஸ் சந்தேகங்கள் இன்னும் முடிந்தபாடில்லை.
'கலைஞரா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்போதும் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார். பிறகு, சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார். இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்னை எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல' என்பதில் தொடங்கி, அவர் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் அத்தனையும் கூர்மையானவை.
'ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் ராஜீவ், இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் இருப்பவர்' என்ற அழகான வர்ணிப்புகளை ஆழமான படிப்புதான் கொடுத்திருக்கும்.
''எம் புள்ள செத்துப் போயிட்டான்கிறது வருத்தமாதான் இருக்கு. ஆனா, நாட்டுக்காகச் செத்தான்னு பெருமையா இருக்கு!'' கதறுகிறார் முத்துக்குமாரின் அப்பா குமரேசன். அரசாங்கம் கொடுத்த இரண்டு லட்சம் பணத்தை வேண்டாம் என்று இந்தக் குடும்பம் அறிவித்து, தன்னுடைய கம்பீரத்தைக் காட்டியிருக்கிறது.
ஆரம்பத்தில் சினிமா கனவுடன் இருந்த முத்துக்குமாருக்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், தற்காலிகமாகப் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்திருக்கிறார். பல்வேறு சிறு பத்திரிகைகளுக்கும் வடிவமைப்புசெய்து கொடுத்த இவருக்கு, இரண்டு மாதங்களுக்கு முன்தான் 'பெண்ணே நீ' பத்திரிகையில் வேலை கிடைத்திருக்கிறது. இது ராமதாஸின் மகள்கவிதா நடத்தும் பத்திரிகை. 'பொங்கல் மலரைச் சிறப்பா வடிவமைச்சார்னு பாராட்ட சட்டை எடுத்துவைத்திருந்தேன்'' என்று அழுகிறார் கவிதா.
சம்பவத்துக்கு முந்தைய நாள் தனது நண்பர் வீட்டுக்குப் போய், 'எனக்கு அவசரமா 1,500 ரூபாய் பணம் வேண்டும்' என்று வாங்கியிருக் கிறார் முத்துக்குமார். அது இன்னொரு நண்பனின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதற்கான சிகிச்சைக்காம். பணம் கொடுத்தவரும் வாங்கியவரும் முத்துக்குமாரின் உடலைத் தொட்டு அழுத காட்சி சோகமயமானது.
இப்படி ஒரு முடிவுக்கு முன்னால், தனது மரண சாசனத்தை எழுதி இருக்கிறார். கோபமும் வேகமும் வார்த்தைகளாக வந்து விழ, 14 கோரிக்கைகளை முன்வைத்த சாசனம்.
தமிழீழத்தின் பகுதியில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் வாங்க வேண்டும், ராஜீவ் கொலையை இன்டர்போல் மீண்டும் விசாரிக்க வேண்டும், பிரணாப் முகர்ஜிக்கு நார்கோ அனாலிசிஸ் சோதனை செய்ய வேண்டும் என்று நீளும் அறிக்கையில், சிங்களவர் பக்கமும் தனது இரக்கத்தை இறக்கினார். லசந்த விக்கிரமதுங்க கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சிங்களப் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும், தமிழகத்துக்குத் தப்பி வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மனிதாபிமானக் கை நீட்டியபடி மடங்குகிறது முத்துக்குமாரின் எண்ணங்கள்.
கொளத்தூர் பகுதியே தமிழ் உணர்வாளர்கள் நீந்தும் குளமாக இருந்தது. 29ம் தேதி காலையில் இறந்த முத்துக்குமாரின் உடலை 31ம் தேதி மாலைதான் எடுக்க முடிந்தது. யாரும் உடலை எடுக்க விடவில்லை. 'என் உடலை காவல் துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்' என முத்துக்குமார் சொல்லிப்போனதுதான் நடந்தது. அவர் எதிர் பார்த்ததையும் தாண்டி, அதன் விளைவுகள் அமைந்தன.
தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் நீங்கலாக மற்ற கட்சிகள் அனைத்தும் தங்கள் சொந்தக் கட்சி உறுப்பினர் இறந்ததைப் போல துயரத்தில் பங்கெடுக்கக் குவிந்தார்கள். 50 ஆயிரம் பேர் திரண்ட கூட்டம் அது.
மூச்சுவிட்ட காலத்தில் முகம் தெரியாமல் வலம் வந்து, அடங்கிய பிறகு அனைவருக்குமானவராகி இருக்கிறார் முத்துக்குமார். தற்கொலை கள் தவறுதான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், தியாகங்கள் பெரிது!
மாணவர் போராட்டம்!
'தமிழினம்
அமைதி கொண்டிருந்தால்
ஏடுகள் தூக்கிப் படிப்போம்.
இன்னல்கள் விளைந்தால்
எரிமலையாகி வெடிப்போம்'
என்ற காசி ஆனந்தனின் கவிதை வரிகளைச் சொல்லி தமிழ்நாட்டு மாணவர்கள் களத்தில் குதித்திருக்கிறார்கள். சட்டக் கல்லூரிக்குள் மோதல் என்றதும் நாடு முழுவதும் இருந்த சட்டக் கல்லூரிகள் மூடப்பட்டன. கிராமப்புறத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டுப் பாடு வந்தபோது, அனைத்து மருத் துவக் கல்லூரிகளும் மூடப்பட்டன. ஆனால், இப்போது ஒட்டுமொத்த மாக அத்தனைக் கல்லூரிகளை யும் இழுத்து மூடியிருக்கிறது தமிழக அரசு.
காரணம், முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் ஊர்வலத்தில் திரண்ட 50 ஆயிரம் பேரில் 80 சதவிகிதம் மாணவர்கள். இது அத்தனை ஊருக்கும் பரவ ஆரம்பித்தால், கட்டுப்படுத்துவது கஷ்டம் என்பதால்தான், அரசாங்கம் இப்படியரு முடிவை எடுத்தது!
Comments