ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு கரன் பார்க்கர் எழுதிய கடிதம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே கொடுமைக்காரரகளாகச் சித்தரிக்கப்பட்டனர் - மனித உரிமை சட்டத்தரணி கரன் பார்க்கர்.

நவநீதம் பிள்ளை அம்மணி அவர்களுக்கு,

சர்வதேச கல்வி அபிவிருத்தி நிறுவனம் (International Educational Development I.E.D. ஐ.நா. சபையில் பதிவு செய்யப் பட்ட ஒரு அரச சார்பற்ற நிறுவனம்) ஆகிய நாம் மனித உரிமைச் சட்டவாளர் சங்கத்துடன் ( Association of Humanitarian Lawyers IAH) இணைந்து தங்களின் ஜனவரி 29 ஆம் திகதியிடப்பட்ட வட இலங்கையில் தமிழ் மக்களின் அவலம் பற்றிய அறிக்கை குறித்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முன்னைய எமது தொடர்புகளின்படி எம் இரண்டு நிறுவனங்களும் கடந்த 26 வருடங்களாக இலங்கை அரசபடைக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள மோதல் பற்றிச் சமத்துவமான அமைதித் தீர்வுக்காகப் பணியாற்றும் ஒரு சில நிறுவனங்களில் இருப்பதை அறிவீர்கள். தற்போதைய நிலைமை மோசமானது என்பதிலிருந்து மிக ஆபத்தான நிலைமைக்குச் சென்றுள்ளது. சர்வதேசத்தின் ஒன்றிணைந்த இயங்கு நிலைக்கு உங்களது அறிக்கை வழி சமைத்து தமிழ் இன அழிப்பைத் தடுத்துவிடும் என நாம் நம்புகிறோம்.

எமது முன்னைய அறிக்கைகளில் குறிப்பிட்டதன் பிரகாரம், பல வைத்தியசாலைகளும், குடிசார் பாதுகாப்புப் பகுதிகளும் இலங்கை அரச இராணுவத்தின் தாக்குதல் இலக்குகளாக இருந்து வந்துள்ளதைத் தாங்கள் அறிவீர்கள். "விடுவிக்கப் பட்ட'' தமிழரும் உண்மையில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு போக்குவரத்துச் சுதந்திரம் இல்லாது இருக்கின்றனர். மேலும் பல மீனவக் கிராமங்களும் விவசாயக் குடியிருப்புகளும் இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாகி அவற்றில் வாழ்ந்தவர்கள் தடுப்பு முகாம்களில் அகதிகளாக உள்ளனர்.

உணவும் மருந்தும் இல்லாத நிலை அல்லது எல்லா இடங்களிலும் மிகப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. தேவையான அளவுக்கு அவற்றின் விநியோகம் இல்லாது அரச அதிகார மையங்கள் தடுக்கின்றன. இத்தகைய சூழலில் தமிழ்ப் பொது மக்கள் இலங்கை இராணுவத்தின் கைகளுக்குள் வலிந்து போவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது.

உங்களின் கவனத்தை சர்வதேச குற்றவியல் நீதி மன்றச் சட்டங்கள், விதிகளில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். International Criminal Court ICC, Rome Statute, Articles 7 (1) (b) and 7(2) (b); ICC Elements, Article 7 (1)(b) சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றச் சட்டம்7(1) (b), 7 (2)(b) மற்றும் விதிகள் 7 (2)(b) என்பவற்றின் கீழ் பொது மக்களுக்கான உணவு மருந்துகள் மீதான தடைகள் செய்வது அழிப்புக் குற்றங்களின் ஒரு பகுதி எனத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த நிலைமை சர்வதேச சமூகத்தின் (R2P) என்ற கடமைப்பாட்டுக்கு இட்டுச் சென்று விட்டது தெளிவாகத் தெரிகிறது. இதன்படி சர்வதேச சமூகம் இன அழிப்பைத் தடுப்பதுடன், ஆயதமோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் சாதி, மத பாரபட்சம் இல்லாது கிடைக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும். கடந்த காலங்களில் உள்ளதைப் போன்றே இனஅழிப்பு நிலை, "சிவப்பு எச்சரிக்கை'' தரத்தை அடைந்துள்ளது என்று கருதுவதில் நாம் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து கொள்கிறோம்.

நோர்வேயின் பிரதி வெளியுறவு அமைச்சரைப் போன்றே வேறு சில அரச அதிகாரிகளும் இதனை இன ஒழிப்பு எனக் கண்டித்து உள்ளனர். இது தொடர்பில் நாம் சிறப்பு ஆலோசகர் டெங் (Special Adviser Deng ) அவர்களுக்குப் பல முறை தெரிவித்துள்ளோம் இன அழிப்பு மற்றும் பேரிடர்களைத் தடுக்கும் ஆணை அவரிடம் இருக்கிறது. நாம் அவருடைய கருத்துக்களைப் பெறுவதற்காக இன்னமும் காத்திருக்கிறோம். ஆனால், இந்தத் துன்ப துயரங்களுக்கு ஒரு முடிவு காண அனைத்துலக சமூகத்தின் சகல கருவிகளும் பயன்படுத்தப்படுவது அத்தியாவசியமாக உள்ளது.

பினயவரும் மூன்று காரணிகள் உட்பட,

(1) தமிழ் மக்களின் பிரதேசங்களின் பூகோள முக்கியத்துவம் காரணமாக அமெரிக்காவின் இராணுவத் தளங்களின் தேவைகள்;

(2) ஜெனீவா உடன் படிக்கைகளுக்கும் மற்றும் அனைத்து ஒப்பந்த விதிகள் சார்ந்த நடைமுறைகளும், மனித உரிமைகள் சட்டங்களையும் ஊறு செய்யும் வகையில் முரண்பாடுகளைப் பயங்கரவாதம் எனப் பட்டியலிட்ட முடிவு

(3) தமிழ் மக்கள் பற்றிய மிகக் குறைந்த அனுதாபக் கருத்துக்களைத் தெரிவிக்கும் எந்த ஒரு சர்வதேச நபரையும் மிக வன்மையாக உரத்த குரலில் கண்டிக்கும் சிங்கள அரசியல் வாதிகள்: (இது பற்றி மேலும் அறிய விரும்புவோர் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் 09.12.2008 நடந்த ஒத்தி வைப்புப் பிரேரணையில் சிறீலங்கா மீதான விவாதத்தின் போது பல உறுப்பினர் பேசிய கருத்துக்களைwww.parliament.uk என்ற இணையத்தின் காப்பகத்தில் உள்ள ஒளிஒலிப் பதிவுகளில் பார்க்கலாம்.)

இவை போன்ற பல்வேறு காரணிகளால் சில நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் குடிசார் அமைப்புகளுக்கு மிகப் பெரும் தடைகளாக உள்ளன. இவை மாட்டன்ஸ் (Martens ) கூற்றுப்; போல், "பொது மக்களின் மனச்சாட்சியின் ஆட்சியை'' இயல்பாகச் செயற்படுத்த விரும்பும் அமைப்புகள், உதவும் நிறுவனங்கள் வெளியே விரட்டப்பட்டும் உயிர் காக்கத்தாமாக ஓடியும் உள்ளனர். பயப்படும் அளவு எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்பொழுது அரச அதிகாரிகள் நாகரிகம் அடைந்த மக்களால் நினைத்தும் பார்க்க முடியாத விதத்தில் அரசாங்கங்களையும், ஐ.நா. அதிகாரிகளையும் மிரட்டுகிறார்கள்.

புலிகள் சிறுவரைப் போரில் ஈடுபடுத்துவது பற்றிய உங்கள் கருத்துக்களை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். ஒரு சில குழுவினர், சிறுவரைப் போரில் ஈடுபடுத்துவது பற்றித் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்து வருவது எமக்கு விசனத்தைத் தருகின்றது. எந்தக் காலத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சிறுவர் ஒரு சிறு தொகைக்கு அதிகமாக இருந்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை.

அப்படி இருந்தவர் கூடப் போர்க் களத்தில் ஈடுபடுத்தப்பட்டதற்கான தரவுகளும் இல்லை. சர்வதேசச் சட்டத்தின் பிரகாரம் போரிடுவோருக்கான வயது 15 என்பதும் 18 அல்ல என்பதும் தாங்கள் அறிந்ததே. தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது வேறு எந்த அமைப்போ தாமாகவே குறைந்த வயதைக் கடைப் பிடிக்கலாமே அல்லாது அதற்கான கடப்பாடு அல்லது கட்டாயம் சட்டப்படி இல்லை என்ற நிலை உள்ளது.

இது விடயமாக அண்மையில் நாம் மனித உரிமைச் சபைக்கு எழுத்து மூலம் சமர்ப்பித்த வாக்கு மூலங்களையும் இத்துடன் இணைத்துள்ளோம். இவை எமக்கு இது விடயமாக வாய் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் இருந்து பெறப்பட்டவை.

இந்த விடயத்தில் எந்த வகையிலும் நாம் ( Lord's Resistance Army or the conflict in Liberia ) லோட்ஸ் எதிர்ப்பு இராணுவம் (உகண்டா) அல்லது லைபீரிய முரண்பாடுகளுடன் ஒப்பிட முடியாத நிலை உள்ளது. எமது பார்வையில், தேவைக்கு அதிகமான அளவு அழுத்தம் கொடுக்கப் பட்டமையானது, புலிகளை அரசியற் காரணங்களுக்காகப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துள்ள அதேவேளை, இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கையால் பல நூறாயிரம் குழந்தைகளின் உணவு, மருந்து, வதிவிடம், பாதுகாப்பு என்பவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் தடுக்கப்பட்டும் விட்டது.

நாம் ஏற்கனவே உங்களுக்கு முன்வைத்த ஏனைய ஆணை அதிகாரம் பெற்றுள்ளவர்களுக்கு எழுதிய கடிதங்களில் தெரிவித்துள்ளது போன்று, தமிழர் பிரச்சனையை இராணுவ வழிகளில் அல்லாது ஏனைய வழிகளில் தீர்வு காண சிங்கள அதிகாரிகள் தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர். அத்தகைய அவர்களின் தீர்வு நிச்சயமாக நேர்மையானதாக இருக்காது. இலங்கை ஒரு சிங்கள தேசம், சிங்களவரே ஆளவேண்டும் எனச் சிங்கள அதிகாரிகள் வெளிப்படையாகத் தொடர்ந்தும் தெரிவித்து வருவதை நாம் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து எல்லா மக்களுக்கும் ஏற்புடையதான தீர்வுத் திட்டம் ஒன்றை உருவாக்க சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். வெளியாரின் சமரசம் இல்லாது ஒரு நேர்மையான தீர்வு ஏற்படாது என்பது தெளிவாகத் தெரிகின்றது. சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு சிங்களவரின் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் நசுக்கப்பட்டு வருவது போன்று அல்லாது தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட உள்ள ஒரே வழி தமிழ் மக்கள் முழு உரிமைகளும் பெறுவதற்குச் சர்வதேச சமூகம் பலத்துடன் உடனடியாகச் செயற்படுவதே ஆகும்.

உங்களின் அறிக்கை தேவையான நடவடிக்கைக்கு வழி சமைக்கும் உந்து சக்தியாக அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம். அதனைத் தொடர்ந்து நீங்களோ, உங்களின் பிரதிநிதியோ பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிட இலங்கை அரசு எந்த வித தடையும் செய்யாது எனவும் எதிர்பார்க்கிறோம். சர்வதேச சட்டங்களின் பிரகாரம் ஆணை அதிகாரம் பெற்றுள்ளவர்களின் நேர்மையான வேண்டு கோள்களை இலங்கை அரச அதிகாரிகள் மறுப்பதை அனுமதிக்கும் காலம் இதுவல்ல.

இது சம்பந்தமாக அனைவரையும், நீங்கள் உட்பட நாம் கேட்டுக் கொள்வது, உங்களின் தயவை நாடுபவரையும், பெருமளவு புலம் பெயர்ந்த நாடற்ற தமிழர்களின் பிரதிநிதிகளையும் தீவிரமாகத் தொடர்புகொள்ள வேண்டும். அடக்கு முறைச் சிங்கள அரசுகளால் அவர்கள் நாடற்றவர்களாக ஓடி வந்தவர்கள். மேலும் தீவில் இன்னமும் இருக்கின்ற அவர்களின் உறவினருடன் நிலையான தொடர்புகளை வைத்திருப்பவர்கள். அவர்களின் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவையும் நேர்மையான எந்த ஒரு தீர்வுக்குள்ளும் அடக்கப்பட வேண்டியவையும் ஆகும்.

இலங்கை பற்றிய உங்கள் செயற்பாடுகளுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். உங்களுக்கு எம்மால் ஆகக் கூடிய உதவிகள் ஏதும் இருப்பின் தயவு செய்து அறியத்தரவும்.

மிகவும் உண்மையுள்ள,

கரன் பார்க்கர்

நன்றி: நிலவரம்


Comments