ஒரு ஊடகவியலாளரின் கைது குறித்த கேள்விகள்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் மற்றும் கொழும்பிலிருந்து வரும் சுடர் ஒளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் ந. வித்தியாதரன், கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டாரா அல்லது கைது செய்யப்படுவதற்காகக் கடத்தப்பட்டாரா என்கிற வாதப் பிரதிவாதங்கள் மேலோங்கிய நிலையில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்கிற விவகாரம் புறந்தள்ளப்படுவதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

கல்கிசையிலுள்ள மஹிந்த மலர்ச்சாலையில் இவர் பலவந்தமாக வெள்ளை வானில் ஏற்றிச் செல்லப்பட்டதற்கான கண்கண்ட சாட்சிகள் உண்டு.

26 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் வித்தியாதரன் கடத்தப்பட்டதாகவும் அவரைத் தேடுவதாகவும் காவல்துறை அறிவித்தது.
ஆனாலும் மதியம் 12.30 மணி அளவில் இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காவல் துறையின் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர வித்தி கடத்தப்படவில்லை, கைது செய்யப்பட்டுள்ளாரென தெரிவித்திருந்தார். அதேவேளை
பொலிஸ் தடுப்புக் காவலில் வித்தியாதரன் வைக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தியை ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா உறுதிப்படுத்தினார்.

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை போல் உள்ளது வித்தியின் விவகாரம். கடத்தல் கைது நடந்த அன்றைய தினம், உதயனில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் ""கெடுகுடி சொற் கேளாது'' என்கிற கள யதார்த்தத்தை பிரதிபலிக்கும் பழமொழியொன்று எழுதப்பட்டிருந்தது மிகப் பொருத்தமாக இருக்கிறது.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் ஊடக சுதந்திரங்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும் மரணத்தின் வாசலை முத்தமிட்டு மீண்ட வித்தியாதரனுக்கு நேர்ந்த துன்பியல் நிகழ்வின் உண்மைத் தன்மையை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள்.

பிரான்ஸை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு இக் கடத்தல் கைதினை வன்மையாகக் கண்டித்துள்ளது. அவர்களின் செயற்பாடுகள், வெறுமனே ஐ.நா. சபை போன்று கண்டிப் போடு நின்றுவிடாமல் சர்வதேச மனித உரிமைச் சங்கங்களுக்கும் இச் செய்தியை கொண்டு செல்கின்றன.
கடந்த வாரம், அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு விசேட குழுவினால் கூட்டப்பட்ட, இலங்கை குறித்த விவகாரத்தில் கலந்து கொண்ட திரு பொப் டீட்ஸ் (ஆணிஞ ஈடிஞுtத்) இன் கவனத்திற்கும் வித்தியின் கைது விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமாக இயங்கும் உரிமை குறித்து அதிகம் அக்கறை கொண்டவரே இந்த பொப் டீட்ஸ்.

இந்தக் கடத்தல் கைது பின்னணி குறித்து அரச தரப்பு வெளியிடும் தகவல்கள், வான் கரும் புலிகளின் வானூர்திகள் அண்மையில் கொழும்பில் நடத்திய தாக்குதல்களை மையப்படுத்தியுள்ளன.

தாக்குதல்கள் நடைபெற்ற அன்றைய தினம் இரவு 12.00 மணிக்கு முன்பாக யாழ். உதயனில் வெளியான தலைப்புச் செய்தியில், இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று எதனடிப்படையில் அவரால் எழுத முடிந்தது என்பதே அரசாங்கத் தரப்பினர் தொடுக்கும் கேள்வி.

வான் தாக்குதல் நிகழ்வதற்கு முன்பாக, அவர் இவ்வாறான செய்தியை எழுதியிருந்தால் அவர் மீது சந்தேகம் கொள்வதற்கு சாத்தியப்பாடுகள் உண்டு.

ஆகவே சட்ட ரீதியாகவும் இக் குற்றச்சாட்டுகள் வலுவிழக்கும் சாத்தியமுண்டு.
உதயன், சுடர் ஒளி மீதான தாக்குதல்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இவ்வூடகம் மீதான வன்முறைகள், தொடர் நிகழ்வாகிப் போனாலும் வன்முறையாளர்கள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை. சுடர் ஒளி ஆசிரியரை கடத்தும் முயற்சியொன்று கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்டதை தற்போது நினைவிற் கொள்ளலாம். லசந்த விக்கிரமதுங்கவின் மர்மக் கொலை நிகழ்வின் பின்னர் அரசியல் புகலிடம் வழங்க அழைப்பு விடுத்த பல மேற்கு நாட்டு தூதரகங்களின் வேண்டுகோளை வித்தியாதரன் நிராகரித்த விடயம் பல தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நன்கு தெரியும்.

எவ்விதமான இறுக்கமான சூழ்நிலையிலும் தளர்வுறாமல் மக்களுக்கான பணியை உறுதியாக மேற்கொள்பவனே உண்மையான ஊடகவியலாளன் என்பது எனது தாழ்மையான கருத்து.

போர்ச் சூழலில் இடையில் சிக்கித் தவிக்கும் மக்களின் பேரவலங்களை உலகின் பார்வைக்கு கொண்டு செல்லும் ஊடகவியலாளர்கள், தேசத் துரோகிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுவதனை, கடந்த கால வரலாற்றுப் பதிவுகளில் காணக் கூடியதாகவிருக்கிறது.

சுடர் ஒளி ஆசிரியரைச் சுற்றி, இத்தகைய மாயத் திரைகள் நீண்ட காலமாகவே போடப்பட்டு வந்துள்ளன.

ஒரே வழித் தடத்தில் பயணிக்கும் சக ஊடகவியலாளன் என்கிற அடிப்படையில் அவரின் கருத்துக் கூறும் எழுத்துரிமையை நிராகரிக்கும் எந்தச் சக்திகளையும் வன்மையாகக் கண்டிப்பதற்கு ஊடக தர்மத்தைப் போதிக்கும் அல்லது கடைப் பிடிக்கும் சகலரும் ஒன்றிணைய வேண்டும்.

ஆயுதம் ஏந்திய அரச இயந்திரங்கள் மட்டுமே, ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த வல்லவை எவராவது கூறினால் இந்த நாட்டிற்கு பத்திரிகைகள் தேவையில்லை, நாடாளுமன்ற ஹண்சாட்டுகளே போதும்.

தபால் கந்தோருக்கு சென்று, அங்கு வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றப் பதிவேட்டின் பிரதிகளை மக்கள் வாசித்தறிந்து செல்லட்டும்.

இனி என்ன.... பாதுகாப்பு ஊடகத் துறையினர் வெளியிடும் செய்திகளை மட்டுமே, பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டுமென்கிற நிர்ப்பந்தம் வருமாயின் நாட்டிற்கு ஒரு பத்திரிகையே போதும் போலும்.

அடுத்ததாக, நாம் கடத்தப்பட்டார் என்று முதலில் கூறிய செய்தியை திரும்பத் திரும்ப சொல்லக் கூடாது. அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறும்போது முதலில் கூறிய கடத்தப்பட்டார் என்கிற செய்தியை நீங்கள் மறந்துவிட வேண்டும் இதுதான் இன்றைய களச் சூழலில் இலங்கை ஊடகத்தார் எதிர்கொள்ளும் பத்திரிகை தர்மங்கள்.

தேசியம் என்பது பொய்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதே உண்மை என நீட்டி முழுக்கும், ஜனநாயக சோசலிசவாதிகள், ஊடக அடக்கு முறைக்கு எதிராக வீதியில் இறங்கியதை இன்னமும் மக்கள் தரிசிக்கவில்லை.

- இதயச்சந்திரன்-

[நன்றி வீரகேசரி வாரவெளியீடு]


Comments