இது அவர்கள் நடத்திய ஒன்பதாவது விமானத் தாக்குதல். 2007-ம் ஆண்டில் நான்கு முறையும், 2008-ம்
ஆண்டில் நான்கு முறையும் விமானங்களின் மூலம் சிங்கள ராணுவ கேந்திரங்களைத் தாக்கி, தங்களுக்கு எந்தவித சேதமும் இல்லாமல் திரும்பிய விடுதலைப்புலிகளின் வான்படை, இந்த முறை தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு இரண்டு விமானங்களையும், இரண்டு விமானிகளையும் இழந் திருக்கிறது.
''புலிகளின் விமான ஓடுபாதைகள் அனைத்தையும் கைப்பற்றி விட்டோம். அவர்களின் விமானம் ஒன்றை ஏற்கெனவே சுட்டு வீழ்த்திவிட்டோம். இனிமேல்
அவர் களால் தங்களிடம் உள்ள எஞ்சிய விமானத்தைக்கூட பயன்படுத்த முடியாது!'' என்று சிங்கள ராணுவம் கொக்கரித்து வந்தது. ஆனால், புலிகள் தாங்கள் சிங்கள ராணுவத்தை விடவும் திறமைசாலிகள் என்பதை உணர்த் தியிருக்கிறார்கள்.
ஏறத்தாழ முந்நூறு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பறந்துவந்து, தம்முடைய இலக்குகளை அவர்கள் தாக்கியிருக்கிறார்கள். 'தற்கொலைத் தாக்குதல் வெற்றி கரமாக நடந்தேறியது' என புலிகள் அறிவிக்க... சிங்கள ராணுவமோ, 'புலிகளின் விமானங்கள் இலக்குகளை அடைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டன' என்று கூறிவருகிறது.
போரில் சிங்கள ராணுவத்துக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து உண்மை விவரங்கள் எதுவும் உலகுக்குத் தெரிவதில்லை. போரில் கொல்லப்படும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் கூட சிங்கள அரசு வெளிப்படையாகக் கூறுவதில்லை.
கொல்லப்படுகிற சிங்கள வீரர்களின் உடல்களை ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் கொண்டுசென்று காடுகளில் வீசி விடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. ராணுவ வீரர்கள் அதிக எண்ணிக்கையில் சாவது வெளியே தெரிந்தால், அது சிங்கள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும்.
அது மட்டுமல்லாமல், அப்படிச் சாகிறவர்களின் குடும்பங்களுக்குப் பெரிய அளவில் இழப்பீடு வேறு தரவேண்டியிருக்கும் என்கிற காரணத்தால், எவருக்கும் தெரியாமல் சடலங்களைக் காடுகளில் சிங்கள ராணுவம் வீசிவருவதாகத் தெரிகிறது. இதன் மூலம் பணமும் மிச்சம், மக்களிடம் அதிருப்தி எழாமலும் பார்த்துக்கொள்ளலாம்.
செத்துப்போகிறவர்களையெல்லாம் காணாமல் போனவர்கள் கணக்கில் காட்டிவிட்டால், பிரச்னை தீர்ந்தது என்பதாக சிங்கள ராணுவம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்தான் இப்போது வான்புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் ஏற்பட்ட சேதத்தையும்கூட வெளியே சொல்லாமல் மறைத்து வருகிறார்கள்.
புலிகளின் விமானத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நாற்பத் தைந்து பேர் காயமடைந்ததாகவும் கட்டடங்களுக்கு எந்தவித சேதமும் இல்லையென்றும் சிங்கள அரசு சொல்லிவருகிறது. அதற்காக சில புகைப்படங்களையும் அது வெளியிட்டுள்ளது. உண்மை இதுவாக இருந்தால், தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களை பத்திரி கையாளர்கள் நேரடியாகப் பார்ப்பதற்கு சிங்கள அரசு அனுமதிக்காதது ஏன் என்ற கேள்வி நமக்கு எழுகிறது. எனவே, புலிகளின் இந்தத் தாக்குதல் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று எண்ணுவதற்கே அதிக வாய்ப் பிருக்கிறது.
புலிகள் நடத்தியிருக்கும் இந்த விமானத் தாக்குதல், இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் ஜப்பான் நாடு கையாண்ட 'கமிகஸி' என்ற முறையை ஒத்ததாக இருக்கிறது என போரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். கமிகஸி என்றால் 'புனிதச் சூறாவளி' என்று அர்த்தம்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் போர்க் கப்பல்களை தாக்கு வதற்கு குண்டுகள் நிரப்பிய விமானங்களை அந்தக் கப்பல்களின்மீது மோதுகிற யுக்தியை ஜப்பான் கையாண்டது.
அதன் மூலம் பல போர்க் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இப்போது இருப்பது போல் ஏவுகணை தொழில்நுட்பம் பெரிய அளவில் வளராத அந்தக் காலத்தில், ஜப்பான் கையாண்ட கமிகஸி தாக்குதல் முறை, வல்லரசு நாடுகளைத் திகைக்க வைத்தது. இப்போது புலிகள் கையாண்டிருப்பதும் அத்தகைய கமிகஸி தாக்குதல் யுக்திதான்.
இந்தத் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட விமானி களில் ஒருவரான கர்னல் ரூபன், பிப்ரவரி பதினைந்தாம் தேதியிட்டுக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். எட்டுப் பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் தமிழீழ மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் அவர் சில செய்திகளைக் கூறியிருக்கிறார்.
'அன்புக்குரிய மக்களே... எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து, அதாவதுபடிப்படியாக உங்களை உங்களுடைய இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து... உணவுத் தடை, மருந்துத் தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிகிறான். தினம் சாவுக்குள் வாழவைத்து, 'பாதுகாப்பு வளையம்' என கற்பித்து, அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து, உங்கள் உறவுகளைக் கொன்று, உங்களைத் தன்னுடைய திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கிறான். ஏன் தெரியுமா? ஹிட்லர் பல வதை முகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல், மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றார்.
அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபய, ராணுவத்துக்கு கூறியிருப்பது என்ன தெரியுமா? 'தமிழரில் பெண்கள் உங்களுக்கு. ஆண்கள் கடலுக்கு' என்று. அதனடிப்படையில், இங்கிருந்த எத்தனை பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு ராணுவ மருத்துவமனையில் ராணுவத்தைப் பராமரிப்பதற்கு விடப் பட்டுள்ளார்கள் என்று தெரியுமா? இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியா வண்ணம் உள்ளது. அன்புக்குரிய மக்களே... எமக்கு இந்த இழிவு நிலை தேவையா?'' என்று தமிழீழ மக்களிடம் உருக்கமாகக் கேட்டிருக்கிறார்.
''அன்புக்குரிய மக்களே! நாம் விரும்பியோ, விரும்பாமலோ எம்மைப் போராட சிங்களதேசம் பணித்துவிட்டது. 30 வருடங்களாகப் போராடி உங்களுடைய இறுதி லட்சிய மாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை, நீங்கள் போராட்டத்தை விடப்போகிறீர்களா? உங்கள் விடிவுக்காக நீங்கள்தான் போராட வேண்டும்.
நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? If we don't fight for our freedom who else will?வன்னியில் இருக்கும் 2,50,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக் கின்றீர்கள்? சிந்தித்துப் பாருங்கள். 50,000 இளைஞர், யுவதி கள் இணைந்து போராடினால், சிங்கள ராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்துவிடும். 1990-ம் ஆண்டு 14 வயதில் நான் போராடப் புறப்பட்டேன். காரணம், இடப்பெயர்வு, பாடசாலை இல்லை, நாம் நிம்மதியாக வாழ நமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால். நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள். அன்புக்குரிய மக்களே... எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசை வில்லைத் தட்டுங்கள். நிச்சய மாக சுதந்திரம் கிடைக்கும்!' என்று அவர் ஈழ மக்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்.
தற்கொலைத் தாக்குதலுக்காகச் செல்லும் நிலையிலும் தங்களுடைய இலக்கு சிங்கள ராணுவமே தவிர, சிங்கள மக்கள் அல்ல என்பதைத் தெளிவாக ரூபன் தன்னுடைய கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
'எமக்கும் சிங்கள ராணுவத்துக்கும்தான் யுத்தம். சிங்கள மக்களுக்கும் எமக்கும் அல்ல... எமக்கும் சிங்கள மக்களைக் கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும்போது திரும்பத் திரும்ப அவர் வலியுறுத்துவது, 'மக்கள் மீதோ, மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள்' என்றுதான். நாம் சிங்கள மக்களுக்கு ஒன்றைத் தெளிவாகச் சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு, நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம்...' என குறிப்பிட்டிருக்கின்றார்.
தமிழ்நாட்டு மக்களை நோக்கி, 'மாவீரன் முத்துக்குமார் இட்ட தீ, இன்று ஐ.நா. வாசலில்கூட பரவியிருக்கின்றது. இப்போதுதான் தமிழரின் பிரச்னை உலகத்தின் காது களில் விழத் தொடங்கியுள்ளது. எனவே, எம்முடைய தமிழினத்தின் விடிவுக்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின், உலகத்தின், ஐ.நா-வின் காதுகளில் விழும்...' என்று ரூபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புலிகளின் விமானங்கள் இவ்வளவு தூரம் பறந்துவந்து தாக்குதல் நடத்துவது, சிங்கள ராணுவத்துக்குத் தெரிய வில்லை. அவர்களுடைய ராடார் கருவிகள் மூலமாக அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்போது முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் சிங்கள ராணுவம் 'எலின்ட்' எனப்படும் எலெக்ட்ரானிக் இன்டலிஜென்ஸ் சேகரிப்பு வசதிகளை நிறுவியுள்ளது. அவற்றின் மூலமாகக் கூட புலிகளின் விமானங்களை அவர்கள் கண்டறிய முடியவில்லை. புலிகளின் விமானங்கள் மிகவும் தாழ் வாகப் பறந்துவந்து தாக்குதல் நடத்தியதாகவும், விமான விளக்குகள் எரிவது தெரியக்கூடாது என்பதற்காக வெறும் டார்ச் லைட்டுகளை மட்டுமே பயன்படுத்தி விமானங்களை புலிகள் ஓட்டி வந்திருக்கிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது. புலிகளின் வான்படையினர் நிகழ்த்தியுள்ள இந்த சாதனைகள், உலகப் போரியல் வரலாற்றில் என்றும் பேசப்படுகிற பதிவுகளாகத் திகழப் போகின்றன.
புலிகளின் விமானத் தாக்குதலால் தங்களுக்கு சேதம் எதுவும் இல்லை என்று நிரூபிக்க இலங்கை அரசு பெரும் பாடுபடுகிறது. ஆனால், அந்தத்தாக்குதல் நடந்த ஒரு நாளில் மட்டும் இலங்கை பங்குச் சந்தையில் பன்னிரண்டு பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது இலங்கையில் முதலீடு செய்ய வெளிநாட்டினர் தயங்குகிறார்கள் என, அங்கி ருந்து வெளியாகும் பத்திரிகைகள் எழுதுகின்றன.
'இலங்கையில் நடந்துவரும் போரில் இந்தத் தாக்குதல் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. உலக நாடுகள் இப்போதுதான் தமிழ் மக்களுடைய பிரச்னை குறித்துப் பேச ஆரம்பித்தன. இந்த சமயத்தில் இப்படி தாக்குதல் நடத்தியதன் மூலம் தமிழர்களுக்கு ஆதரவான மனநிலையைப் புலிகள் கெடுத்துவிட்டார்கள்...' என்று சிலர் இதை விமர்சிக் கிறார்கள். ஆனால், இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் புலிகள், உலகத் தமிழர்களிடையே ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது.
'புலிகள் நினைத்தால் இலங்கையில் எந்த இடத்திலும் தாக்கக்கூடிய ராணுவ வல்லமையோடுதான் இப்போ தும் இருக்கிறார்கள்' என்று தமிழ் மக்களுக்கு அவர்கள் செய்தி சொல்லியிருக்கிறார்கள்.
அது மட்டு மல்லாமல், சிங்கள அரசு சொல்வதுபோல அவ்வளவு எளிதாக இந்த யுத்தம் முடிவுக்கு வந்துவிடாது என் பதையும் அவர்கள் உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
இதனால் அங்கு ஒரு அமைதித் தீர்வு காணப்படவேண்டும் என்பதற்கான அழுத்தம் கூடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் நாம் புறக்கணித்துவிட முடியாது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், இலங்கையில் யுத்தம் தொடர்வதை காங்கிரஸ் அரசு விரும்பாது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து.
தற்காலிகமாகவாவது அங்கே ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, அதையே தமிழ்நாட்டில் தம்முடைய தேர்தல் பிரசாரமாக முன்வைப்பதற்கும் காங்கிரஸ் முயற்சிக்கக்கூடும்.
அண்மைக் காலமாக இந்திய தூதர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற பகுதிகளைச் சுற்றிப்பார்த்து வருவதும்; பிரணாப் முகர்ஜியின் பேச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் இதைத்தான் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.
ஆனால், காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு இலங்கையில் ஏற்படுத்தப்போகிற சமாதானத்தீர்வு தமிழர்களுக்குப் பயன்தருவதாக இருக்குமா?
அல்லது இங்கே ஓட்டு வாங்குவதற்கு மட்டும் செய்யப்படுகிற சூழ்ச்சியாக அது முடிந்துவிடுமா?
இது தெளிவுபடவில்லை! எது எப்படி இருப்பினும், எதிர்வரும் தேர்தலில் இங்கே கூட்டணிகளை முடிவு செய்வதிலும், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கப் போவது ஈழப் பிரச்னைான்!
விகடன்
Comments