பழ வியாபாரம் செய்து வந்த இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை நிர்வாகி ஆவார்.
ஒரு வயது குழந்தையின் தந்தையான இவர், இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலை குறித்து மன அழுத்தத்தில் இருந்து வந்தார். கடந்த மாதம் வீட்டின் அருகில் உண்ணாநிலைப் போராட்டமும் நடத்தியுள்ளார்.
சோதி
மருத்துவமனையில் காயக்கட்டுகளுடன் சோதி
அழுதபடி நிற்கும் சோதியின் தாயார்
இந்நிலையில் மனைவியும் குழந்தையும் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றிருந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இவர், கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற வளாகத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் இலங்கையில் இனப் போரைத் தடுத்து நிறுத்தக் கோரியும், சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீயிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் சோதியை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 90 விழுக்காடு அளவிற்கு உடல் எரிந்துள்ளது என்றும், 3 மணிநேரம் கழித்த பின்னரே நிலைமை குறித்து தெரிவிக்க முடியும் என்றும் மாலை 3:00 மணியளவில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் உள்ள சோதி மிகவும் தெளிவாக உரையாடினார்.
தான் படிக்காதவன் என்றும் அதனால் தனக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை என்றும் கூறிய அவர், தன்னோடு இத்தகைய தீக்குளிப்புச் சம்பவங்கள் முடிவுக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நான் இலங்கைக்குப் போய் இருந்தால் நூறு சிங்கள சிப்பாய்களையாவது கொன்றிருப்பேன்' என அவர் உறுதியான குரலில் தெரிவித்தார்.
அழுது கொண்டிருந்த அவரது தாயையும் அவர் சமாதானப்படுத்தினார். ஈழம் வெல்லும் என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்.
இந்நிகழ்வு குறித்து கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.
சோதி தீக்குளித்த செய்தி அறிந்ததும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் விரைந்து சென்று அவரை பார்வையிட்டார்.
சோதியின் அம்மாவுக்கு ஆறுதல் கூறிய அவர், மருத்துவர்களிடம் தகவல் கேட்டறிந்தார். அவரோடு கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாறன், கடலூர் நகர் மன்றத் துணைத் தலைவர் தாமரைச்செல்வன், திருமேனி, அறிவுடைநம்பி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் சென்றிருந்தனர்.
தீக்குளிப்பு முயற்சிக்கு முன்னதாக சோதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீக்குளிப்பு முடிவு குறித்து தெரிவித்ததாகவும், அவர் ஆறுதல் கூறியதுடன், அது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும், அதனையும் மீறி சோதி தீக்குளித்தார் என்றும் கூறப்படுகிறது.
Comments