லோக்சபா தேர்தலை அனைவரும் புறக்கணிப்போம்: விஜயகாந்த்

சென்னை: தமிழ் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து வருகிற லோக்சபா தேர்தலை அனைத்துத் தமிழக கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும். அப்படி செய்வதாக இருந்தால் அதில் முதல் கட்சியாக தேமுதிக இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் சிங்கள அரசின் முப்படைகளும் தமிழர் பகுதிகளைத் தாக்கியதால், முல்லைத் தீவின் ஒரு சிறிய பகுதியில் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் சிக்கியுள்ளனர்.

எந்த நேரத்திலும் அவர்களுக்கு எதுவும் நேரலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சிங்கள அரசோ பாதுகாப்பு மண்டல பகுதிகள் என்று ஒரு சில பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்கள் அந்த பகுதிகளில் வந்து பாதுகாப்பாக தங்கிக்கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.

சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டல பகுதிக்கு தமிழர்கள் சென்றால், வயதானவர்கள், குழந்தைகள் தவிர, மீண்டும் தீவிரவாதிகள் உருவாக கூடாது என்று சொல்லி சிங்கள போர் படையினர் தமிழ் வாலிபர்களை கொன்று விடுகின்றனர். பெண்களையும் மானபங்கப்படுத்தி அழித்து விடுகின்றனர். சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டலங்கள் என்பது தமிழர்களின் மரணப்படுகுழிகள் தான் என்பதை சிங்கள அரசு வேண்டுமென்றே மறைத்து வருகிறது.

சிங்கள அரசின் இத்தகைய போக்கின் காரணமாக அங்குள்ள தமிழர்கள் சிங்களர்கள் கையில் சிக்கி சாவதை விட அவர்களை எதிர்த்து போராடி செத்து மடிவதே மேல் என்ற நிலைக்கு ஆளாகி விட்டனர். இந்த சூழ்நிலையில் சிங்கள அரசு போரை மேலும் நீடித்தால் பல லட்சக்கணக்கான தமிழர்கள் பேரழிவையே சந்திக்க வேண்டியிருக்கும். இதை அனுமதிப்பது நாகரீக உலகிற்கு எவ்விதத்திலும் சரியல்ல.

போன உயிர்களை மீண்டும் தருவது யாராலும் முடியாது. ஆகவே உயிர்கள் போவதை தடுக்க மனிதாபிமானமுள்ள உலகம் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இத்தகைய மனிதகுலப் பேரழிவு ஏற்படும் அபாயக்கட்டத்தில், உலகில் பல்வேறு நாடுகளில் ஐ.நா.மன்றம் தலையிட்டுள்ளது. அது போல ஐ.நா.மன்றம் இந்த பிரச்சினையிலும் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், அதை கண்காணிக்கவும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழினப் பேரழிவை தடுக்க ஐ.நா.மன்றத்தில் எழுப்ப இந்திய அரசால் தான் முடியும். அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது என்று சொல்வது சரியல்ல. மனிதாபிமான அடிப்படையிலும், அண்டை நாட்டில் ஏற்படும் பிரச்சினையால் தங்கள் நாட்டின் அமைதிக்கு பங்கம் எற்படுமென்றாலும் நிச்சயமாக ஒரு அரசு தலையிட கடமைப்பட்டுள்ளது.

ஒன்றரை கோடி சிங்களர்களுக்கு தனி நாடு உள்ளது என்ற காரணத்தால் உலக நாடுகளிடமிருந்து ஆயுத உதவியை எளிதில் பெற முடிகிறது. ஆனால் ஆறரை கோடி தமிழர்களைக் கொண்ட தமிழகம், இந்திய அரசைத்தான் நம்ப வேண்டியுள்ளது. எனவே இந்திய அரசு, ஐ.நா. மூலமோ, நேரடியாக தலையிட்டோ இனப் படுகொலையை தடுக்க வேண்டும்.

கருணாநிதி தமிழினத் தலைவரா?

தமிழினத் தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்னையில் உருப்படியான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

இலங்கைப் பிரச்னை பற்றி தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்ட குரலைத்தான் எழுப்பி வருகின்றனர். அப்படியிருக்க இலங்கைத் தமிழர் பிரச்னையை விளக்கிக் கூட்டங்கள் நடத்த வேண்டும், மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று திமுக அறிவித்துள்ளது மக்களை திசை திருப்பும் வேலை. எத்தனைக் காலம்தான் தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றப் போகிறார்?

இந்திய அரசு தமிழினப்படுகொலையைத் தடுக்க தவறுமானால், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தேசிய அரசில் பங்கு பெறுவதில் அர்த்தமில்லை. ஆகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சியினரும் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சாதாரணமாக தங்கள் ஊரில் உள்ள குறைகளை செய்து கொடுக்காததற்கே அந்த ஊர் மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்றால், அரசு ஓடோடி சென்று அந்த மக்களின் குறைகளை தீர்க்க உறுதி கொடுத்து அவர்களை தேர்தலில் ஈடுபட வைக்கிறது. அப்படியிருக்க இலங்கையில் தமிழினமே படுகொலைக்கு ஆளாகும் சூழ்நிலையில், தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்தால் அப்பொழுதாவது இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காதா என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு.

தேர்தல் புறக்கணிப்பு முடிவு எடுக்கப்படுமானால், தே.மு.தி.க.வை பொறுத்தவரை முதலாவதாக இடம் பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிங்கள ராணுவத்தின் அநீதியை தடுத்து நிறுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் ஒருமித்த கருத்தோடு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ஒன்றுப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.


Comments