வன்னியில் நடத்தப்படும் போரை, "மனிதாபிமான நடவ டிக்கை" என்று ஆலாபரணம் பண்ணி வர்ணித்து வருகிறது இலங்கை அரசாங்கம். வன்னியில் தான் நடத்திவரும் விடு தலைப்புலிகளுக்கு எதிரான போர், தமிழ் மக்களின் விடிவுக்காகவே நடத்தப்படுவதாக உலகத்துக்குக் காட்டிக் கொள்வதற் காக இந்தப்பதம் பெயர் கவர்ச்சிகரமானது என்று மனதில் வைத்து அரசு அதனைத் தெரிவு செய்திருக்கிறது.
அதுமட்டுமல்ல, போர் முடிந்ததும் வடக்கை அபிவிருத்தி செய்யப்போவதாகக்கூறி வெளிநாடுகளிடம் இருந்து கோடி கோடியாகப் பணத்தைக் கறந்து எடுப்பதற்கும் இந்தச்சொல் மிகப்பெரிய அளவில் உதவும் என்றும் கணக்குப் போடப்பட்டிருக்கிறது.
சுனாமி அழிவின் பின்னரான மீள்நிர்மாணத்துக்குக் கிடைத்த நிதியில் ஒப்பீட்டு ரீதியில் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட வடக்குக்கு எவ்வாறு கிள்ளித் தெளிக்கப்பட்டது என்பது ஏற்கனவே ஒரு "சரித்திரம்".
அந்த சரித்திரத்தை மேலும் தொடர் வதற்காக தமிழருக்கு அழிவுதரும் போருக்குச் சூட்டப்பட்டிருக்கும் பெயரே "மனிதாபிமான நடவடிக்கை" என்பதில் ஐயுறவு கொள்ள எதுவுமில்லை.
அரசின் "மனிதாபிமான நடவடிக்கை" எந்தவகையில் அடிப்படை மனிதாபிமானத்துக்கு மனிதஉரிமைகளுக்கு முற்றிலும் நேர்மாறாக முரணாக மேற்கோள்ளப்பட்டிருக் கிறது என்பதற்கு மன்னார் ஆஸ்பத்திரிக் கதை ஒருதுளி உதாரணம்!
அவர் எவராக இருந்தாலும், ஜென்மப் பகையாளியாக இருந்தாலும், தன்னைக் கொல்ல வந்தவனாக இருப்பினும் அவன் நோயாளியாகிவிட்டால் அவனது மனித உரிமைகள், வாழ்வுரிமைகளைப் பேணி உதவுவது இன்றியமையாத ஒன்றாகும்; அதுவே மனித தர்மமும் ஆகும்.
ஆனால் மோதல்களில் இடையில் சிக்குண்டு காயமுற்று மன்னார் ஆஸ்பத்திரியில், இப்போது இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப் படுகின்றார்கள் என்பதை நேற்றைய உதயனில் நீங்கள் வாசித்து அறிந்திருப்பீர்கள்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதால், போரின் மத்தியில் அகப்பட்டுக் காயமுற்ற மக்களை இராணுவம் அரசாங்கம் "தடுத்து" வைத்திருக்கிறது.
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்......
காயமுற்ற தனது ஒரு பிள்ளையுடன் ஆஸ்பத்திரியில் தங்கியிருக்கும் ஒருதாய், தமது உறவினர்களுடன் விட்டு விட்டு வந்த ஏனைய இரு பிள்ளைகளையும் நாளில் ஒருதர மேனும் ஒருசிலநிமிட நேரமேனும் சென்று பார்த்து அவர் களது தேவைகளை நிறைவேற்ற முடியாமல் வினாடிக்கு வினாடி மனம் பதைத்து உளம் உருகி உணர்வு கலங்கி அந்தரிக்கிறார்.
இராணுவம் அரசு தனது பாதுகாப்புக் காரணங்களைக் கருதி நோயாளர்களின் இரத்த உறவுகளையே தடுத்து வைத்து வைத்தியசாலையை சிறைக்கூடமாக்கி உளச்சித்திரவதை செய்கிறது! எந்த சர்வதேசச் சட்டத்திலும் இத்தகைய மனச்சித் திரவதை அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை தமிழர்கள் என்றால் அவர்கள் மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப் பட்டாலும் எவரும் தட்டிக் கேட்கமுடியாது. இந்த நவீன உலகத்தில் மிருகங்கள் உட்பட உயிருள்ள சகல ஜீவராசிகளையும் சித்திரவதை மற்றும் கொலைசெய்யப்படுவது போன்றவற்றில் இருந்து காப்பாற்றுவதற்கு அ முதல் ஃ வரை காத்திரமான சர்வதேசச் சட்டங்கள் உள்ளன.
ஆனால் நீதிக்குப் புறம்பான கொலை மற்றும் சித்திரவதை போன்ற அக்கிரமங்கள் தடுப்பார் இன்றி, வேலியே பயிரை மேயும் காட்சிகளே நாளாந்தம் இந்த நாட்டில், மிகக்குறிப்பாக தமிழர் வாழ் பூமியில் அரங்கேறி வருகின்றன.
அவற்றை வெளிப்படுத்தினால் அல்லது சுட்டிக்காட்டினால் எவருக்கும் ஆபத்து வரும் என்ற பயப்பிராந்தியான சூழலே நாடெங்கும் நிலவுகிறது. இத்தகைய சூழலில் தமிழர்கள் என்றால் அவர்களை எதுவும் செய்யலாம், மனித உரிமைகள் மற்றும் எந்த உரிமை குறித்தும் அவர்கள் வாய்திறந்தால் ஆபத்து என்ற நிலை, என்றுமில்லாதவாறு இப்போது மிக உயர்ந்து நிற்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.
வன்னியில் போரில் காயமுற்ற மக்கள் மட்டுமன்றி தமது உயிருக்கு அடைக்கலம் தேடி அரசின் நலன்புரி நிலையங் களை நாடிச்சென்ற தமிழர்களின் கதி மற்றொருகதை. கிளி நொச்சி, முல்லைத்தீவில் இருந்து அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று வவுனியா சென்று நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள தமிழர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வது குறித்து மூன்று வருடங்களுக்கு வாய்திறக்கக் கூடாதென்ற புற நிலை உருவாக்கப் பட்டுவருகிறது.
அவர்களை நலன்புரி நிலையங்களிலிருந்து நலன்புரிக் கிராமங்களில் குடியேற்றி வாழவைப்பதற்கு அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளது. இதுகுறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்போதுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள தமிழ் மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து மனிதாபிமானப் பணியாளர்களும் இராஜதந்திரிகளும் கவலை வெளியிட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த லட்சணத்தில் அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்கப்போவதாக அரசு கூறுகிறது; புதிய திட்டம் வகுத்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த வஞ்சகத் திட்டம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் மீண்டும் தமது சொந்தமண்ணுக்குத் திரும்பச் செல்லாமல் தடுத்து அவர்களை அரசின் "அடிமைகளாக" பிடித்து வைக்கும் உத்தி என்பதனை உள்நோக்கம் அதுவே என்பதனை புத்தியுள்ள எவரும் இலகுவில் இனம் கண்டு கொள்வர்.
இப்போது வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை உறவினர்கள் சென்று சுகம் விசாரிப்பதற்குக்கூட வசதி செய்யப்படவில்லை. அவர்கள் மனிதாபிமானமாக நடத்தப்படுகிறார்களா என்பதனைக் கண்டறிவதற்கு சர்வதேச தொண்டு நிறுவனம் எதுவும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு செல்கையில் அவர்கள் சோதனையிடப்படும்போது போதிய கண்காணிப்பாளர்கள் இல்லை. இது குறித்து மனிதாபிமான அமைப்புகளும் இராஜதந்திரிகளும் மனந்தாங்காது கவலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அரசாங்கம் அவர்களின் கவலையை கருத்தில் எடுப்பதாக இல்லை. நலன்புரி முகாம்களை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அரசாங்கமே நிர்வகிக்கும் என்று மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜயசிங்க அடித்துக் கூறியுள்ளார்.
இதன் அர்த்தம் என்ன?
தமிழர்களை நாம் நினைத்தவாறே நடத்துவோம். யாரும் தட்டிக்கேட்க முடியாது என்பதே ஆகும்.
தமிழ் மக்களுக்கான "மனிதாபிமான நடவடிக்கையின்" போக்கும் விளைவும் அவர்கள் வாழ்வைச் சீரழிக்கும் நோக்கம் சார்ந்ததே என்பதில் ஐயமில்லை.
Comments