வல்லரசு நாடுகளின் துணையுடன் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள் - ஃபிரடி டி ஆல்விஸ்

வல்லரசு நாடுகளின் துணையுடன் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள் என ஆசியக் கிறிஸ்தவ மாநாடு என்ற அமைப்பின் செயலாளரான ஃபிரடி டி ஆல்விஸ் கவலை தெரிவித்துள்ளார்.

நேற்று இந்தியாவில் கடலூர் ஆற்காடு லுத்தரன் கிறிஸ்தவ தேவாலயத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில் இந்தியா, அமெரிக்கா ஆதரவுடன் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள்.

இலங்கையின் பெரும்பான்மை சேர்ந்தவனாக இருந்தாலும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், கொடுமைகள், மனித உரிமை மீறல்களைக் கண்டு மனம் வெதும்பியே பத்திரிகைகள் மூலமாவது வெளிநாடுகளுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே செய்தியாளர்களைச் சந்திக்க விரும்பியதாக அல்விஸ் கூறியுள்ளார்.

1956 முதல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழர்கள் யாழ்ப்பாணம் பகுதிக்கு விரட்டப்பட்டனர். 81 முதல் 83 வரை கொழும்பில் இருந்த தமிழர்கள், தோட்டத் தொழிலாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு எந்தப்பயனும் அளிக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகளுடன் இருந்து பிரிந்து சென்ற கருணா உள்ளிட்ட குழுவினருடன் இலங்கை இராணுவம் இணைந்து அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதாகவும் இவர்களிடம் 3 லட்சம் தமிழர்கள் சிக்கித் தவிக்கின்றனர் எனவும் அல்விஸ் கவலை வெளியிட்டுள்ளார். பாதுகாப்புப் பகுதிக்குள் தமிழர்களை வரவழைத்து, அங்கிருக்கும் கருணா குழு மற்றும் தேவானந்தா குழு ஆகியன, இலங்கை ராணுவத்துடன் இணைந்து தமிழர்களை கொன்று குவிக்கின்றனர் எனவும் அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்குகின்றன. தமிழ் பகுதிகளில் செயற்பட்டு வந்த சர்வதேச அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கம் உட்பட அனைத்து அமைப்புகளும் இலங்கை அரசாங்கத்தினால் வெளியேற்றபட்டுள்ளன.

போர்ப் பகுதியில் சிக்கி இருக்கும் தமிழர்கள் 3 லட்சம் பேர் என சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன. எனினும் 1.5 லட்சம் பேரே அங்கு இருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது. அப்படியானால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்களின் கதிஎன்ன? தமிழர்களைக் கொன்று குவிக்கத் திட்டமா? எனவும் பிரடி த அல்விஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுவரை 11 ஊடகவியலாளர்களை இலங்கை ராணுவம் கொலை செய்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நாதியில்லை. ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இலங்கையின் சிறுபான்மைத் தமிழர்களை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றி வருகிறார். அவரது ஒரு சகோதரர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் மற்றொரு சகோதரர் அரசின் அனைத்து நிர்வாகத்தையும் கவனித்து வருவதாகவும் இலங்கையில் குடும்ப ஆட்சியே நடப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை சுதந்திர தினத்தன்று, இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள் என பலர் இருந்தும் சிங்களவர்களுக்கு மாத்திரமே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.தமிழர்களை விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தவில்லை:

இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் அந்த கடமை இருக்கிறது. இல்லையேல் கடவுள்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என செயலாளர் ஃபிரடி டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஆசியக் கிறிஸ்தவ மாநாடு30 நாடுகளில் 125 கிறிஸ்தவ சபைகளைக் கொண்டுள்ளது. இதில் இலங்கையில் நிர்வாகச் செயலாளராக கொழும்பல் பணியாற்றி வருகிறார் ஃபிரடி டி அல்விஸ். என்பது குறிப்பிடத்தக்கது.


Comments