இலங்கை இராணுவத்துக்கு ரேடார் கருவி வழங்கியது ஏன்? கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் வாக்குவாதம்:

இலங்கை இராணுவத்துக்கு ரேடார் கருவி வழங்கியது ஏன்? என்பது தொடர்பாக, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் நேற்று 25) தமிழக சட்டப் பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான பொது விவாத்தில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

விவாத்தில் உரையாற்றிய பீட்டர் அல்போன்ஸ்: (காங்கிரஸ) இலங்கைப் பிரச்சினையில் போர் நிறுத்தம் வேண்டுமென்று இந்திய மத்திய அரசு தெளிவாகக் கூறியிருக்கிறது. இலங்கைக்கு ஆயுதங்களையோ, அராணுவத் தளவாடங்களையோ வழங்கவில்லை என நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதன் போது சிவபுண்ணியம் (கம்யூனிஸ்ட்): ஆயுதங்கள் வழங்கவில்லை எனச் சொன்னால், ரேடார் கருவிகள் வழங்கப்பட்டு இருப்பது உண்மையா? இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பீட்டர் அல்போன்ஸ்: எதற்காக அந்தக் கருவி வழங்கப்பட்டது என்பதை பேரவையில் சொல்வது பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்காது. இதன் போது குறுக்கிட்ட அவை முன்னவர் நிதியமைச்சர் அன்பழகன், அந்தக் கருவி, இலங்கை இராணுவத்துக்குத் வழங்கப்படவில்லை. அப்பாவி மக்களைக் கொல்வதற்காகவும் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பீட்டர் அல்போன்ஸ்: இலங்கை முனையிலிருந்து, இந்தியக் கடற்கரையைப் பார்க்கும் வகையில் பொருத்த அந்த ரேடார் கருவி வழங்கப்பட்டது. அதற்கும், இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ‐ இந்தியா வலியுறுத்தாவிட்டாலும் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஐ.நா. சபை ஆகியவை வலியுறுத்தியது தமக்கு ஆறுதல் ‐ பாண்டியன்:

இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தாவிட்டாலும் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஐ.நா. சபை ஆகியவை வலியுறுத்தியது தமக்கு ஆறுதல் அளிப்பதாக இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாவூரில் நேற்று ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்பதே தமது முதல் கோரிக்கை. அதற்கென இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் மீண்டும் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தும், இலங்கை அரசு அதனை நிராகரித்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தாவிட்டாலும் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஐ.நா. சபை ஆகியவை வலியுறுத்தியது ஆறுதல் அளிப்பதாகவும் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இதேவேளை சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் மீதான காவல் துறையின் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் இது ஏதோ ஒரு கூட்டத்தைக் கலைப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் எனவும் பாண்டியன் குறிப்பித்துள்ளார்.

காவல் துறையின் இந்த அத்துமீறலைக் கண்டித்து, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை தினம் (27)ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு அருகில் நேற்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்:

இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகில் நேற்று(25) மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்கியதில் ஒரு மீனவர் பலத்த காயமடைந்துடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்கச்சி மடம் விக்டோரியா நகரைச் சேர்ந்த ராஜா(23), நிஷாந்த்(21) மற்றும் முருகேசன்(25). ஆகியோர் விசைப்படகு ஒன்றில் கச்சத்தீவு அருகே மீன் பிடியில் ஈடுபட்டிந்தனர். இதன் போது அவ்வழியாக படகு ஒன்றில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் இவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் என்ற மீனவர் ராஜா படுகாயமடைந்துள்ளார். அத்துடன் மீனவர்களின் படகில் இருந்த திசை காட்டும் கருவி, மீன்பிடி வலைகள் ஆகியவற்றையும் இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்றுள்ளதாக தமிழக மீன்வளத்துறையிடம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.

இலங்கை அகதிகள் இருவர் படகு ஒன்றின் மூலம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் நேற்று (26) தரையிறங்கியுள்ளனர். மன்னார் மாவட்டம், பேசாலையைச் சேர்ந்த கில்மன்ரோய் (24), நீலன் (28) ஆகிய இருவரே படகு மூலம் பாம்பன் குந்துகால் கடற்கரைக்கு சென்றடைந்துள்ளனர்.

படகுக்கு வாடகையாக 30 ஆயிரம் ரூபாவை வழங்கியதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். பாம்பன் காவல் நிலையத்துக்கு சென்ற இவர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் மண்டபம் அகதி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நேற்று (25) விடுத்துள்ள அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஐ.நா. பொதுச் செயலாளர் பான்‐கி‐மூன் விடுத்த கோரிக்கைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. போர் நிறுத்தம் செய்யத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்த பின்னரும், அதை ஏற்க இலங்கை அரசு மறுத்துள்ளது.

விடுதலைப் புலிகள் முன்வந்த பிறகும் போரை நிறுத்த முடியாது என கூறும் இலங்கை அரசு மீது சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வீரமணி கேட்டுள்ளார்.

Comments