சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கையில் தலையிடாதது ஏன்?

* கேள்வி எழுப்புகிறது ஆபிரிக்க ஒன்றியம்

இலங்கை விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏன் தலையிடவில்லையென ஆபிரிக்க ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.

சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பசீர் மீதான தீர்ப்பை அறிவிப்பதை ஒத்திவைத்திருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஆபிரிக்க ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் ஜோன் பிவ், உள்நாடுகளில் நீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக ஆபிரிக்கத் தலைவர்கள் தவறிவிட்டதாக அடிக்கடி கண்டனம் தெரிவிக்கும் சர்வதேச சமூகமானது காஸா , ஈராக் அல்லது இலங்கை மோதல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஏன் வலியுறுத்துவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

டார்பரில் இடம்பெற்ற போர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பசீரை கைது செய்வதா? இல்லையா? என்பது தொடர்பாக அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் திங்கட்கிழமை அறிவித்திருந்தது.

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை சூடானின் மேற்கு பிராந்தியத்தில் அந்நாட்டு ஜனாதிபதி ஒமர் அல்பசீர் இளைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவரை கைது செய்யும் ஆணையை பிறப்பிக்குமாறு கடந்த ஜூலையில் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் தலைமை வழக்கறிஞர் லூயிஸ்ப் மொரினோ ஒகம்போ கேட்டிருந்தார்.

கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தால் ஹோக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன்னால் நிறுத்தப்படும் பதவியிலிருக்கும் முதலாவது அரச தலைவராக பசீர் இருப்பார்.

சூடான் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நாடுகளை உறுப்பினராக கொண்ட ஆபிரிக்க ஒன்றியத்திற்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணை சூடானின் சமாதான நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஆபிரிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தில் ஆபிரிக்கத் தலைவர்களே தனியாக இலக்கு வைக்கப்படுவதாக தோன்றுவதாக ஆபிரிக்க ஒன்றியம் கூறியுள்ளது.


Comments