இன அழிப்புப் போரின் உச்ச நிலை!

இன அழிப்புப் போரின் உச்ச நிலையாக வன்னிப் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த அனைத்து வைத்தியசாலைகளையும் சிறிலங்கா அரசு செயலிளக்கச் செய்துள்ளது. சிறிலங்கா இராணுவத்தினதும், விமானப்படையினதும் தாக்குதல்களுக்கு இலக்காகாத வைத்தியசாலைகள் இல்லையென்று கூறுமளவிற்கு இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இத்தாக்குதல்களில் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் வைத்தியத் தாதி ஒருவர் கூட அடங்கியுள்ளனர். பொதுமக்கள் பெருமெண்ணிக்கையில் காயங்களுக்குள்ளாகியுள்ளர். இத்தனைக்கும் இவ் வைத்தியசாலைகளின் அமைவிடங்கள் தொடர்பான தகவல்கள் அரசிற்கு வழங்கப்பட்டிருந்தன. அத்தோடு இவ் வைத்தியசாலைகள் சிறிலங்கா அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வலயங்களுக்குள்ளும் அமைக்கப்பட்டிருந்தன.

அது மாத்திரமின்றி இவ்வைத்தயசாலைகளுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் ஐ.நா.பிரதிநிதிகளும் தொடர்பைக்கொண்டிருந்தனர். புதுக்குடியிருப்புப் போன்ற வைத்தியசாலைகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் நிலைகொண்டிருந்தனர். ஆனால் சிறிலங்கா அரசு சர்வதேச நியமங்களுக்கோ அன்றி தமது உத்தரவாதங்களுக்கோ அன்றி உலகின் அபிப்பிராயங்களுக்கோ மதிப்பளித்துச் செயற்படப் போவதில்லையென்பதை அதன் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் வெளிப்படுத்திநிற்கின்றன.

இந்த வகையில் நோயாளர்களையும் இராணுவ நடவடிக்கையின் போது காயமடைந்தவர்களையும் குண்டு வீசிக்கொல்லும் அளவிற்கு சிறிலங்கா அரசின் இனவெறிச் செயற்பாடு உள்ளது. இது சர்வாதிகாரி ஹிட்லரின் செயற்பாடுகளை விட மோசமானதாகும். இதன் மறுபுறமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட எந்த சர்வதேச அமைப்புக்களோ அன்றி நாடுகளோ இத்தாக்குதல்களை தடுக்க முடியாதுள்ளது என்பதும் ஜயதார்த்த பூர்வமானதாகவுள்ளது. இதில் சில வேளைகளில் சர்வதேச அமைப்புக்கள் - இத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய பலம் - அதாவது அரசியல் பலம் கொண்டவையாக இல்லாது இருக்கலாம்.ஆனால் இதனைத் தடுத்து நிறுத்தக் கூடிய சக்தியுள்ள நாடுகள் பல இருப்பினும் அவை இவ்விடயத்தில் அக்கறை கொண்டவையாக இல்லை.மாறாக இத்தகைய படுகொலைகளுக்கு ஆதரவளிப்பவையாகவே உள்ளன என்றே கொள்ளவேண்டியுள்ளது.

சில நாடுகள் விடுதலைப் புலிகள் மீதான பகையைத் தீர்த்துக் கொள்வதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பம் எனப் பார்ப்பது போல் தெரிகின்றது. ஆனால் இந் நாடுகள் சிறிலங்கா அரசின் தாக்குதலில் பெருமவலத்தை சந்தித்து நிற்பவர்கள் தமிழ் மக்கள் என்பதை அவர்கள் கருத்திற் கொள்ளவில்லை. இந் நிலையில் தமிழ் மக்களின் பாதுகாப்பில் இந் நாடுகள் அக்கறை கொண்டுள்ளதாக கூறிக் கொள்வதே கேலிக்கும் கேள்விக்கும் உள்ளானதொன்றாக கொள்ளவேண்டியுள்ளது.

-ஆசிரியர்தலையங்கம்(10-02-2009 ஈழநாதம்)-



Comments