அம்பலமாகும் தி.மு.க. உள் கதைகள்!

ல்யூட் அடித்தபடி ஆபீஸ் செக்யூரிட்டி டிஜிட்டல் கண்ணாடிக் கதவை திறந்துவிட... ''கண்ணப்பன் எத்தனை கண்ணப்பனடீ...'' என்று பாடியபடியே வந்தார் கழுகார்.

புன்னகையுடன் நாம் வரவேற்க, ''பழக்கதோஷத்தில் பழைய கிரீம்ஸ் ரோடு ஆபீசுக்குப் போய்விட்டேன்.

விகடன் ஆசிரியர் இலாகா இப்போது அண்ணாசாலை அலுவலகத்துக்கே ஜோராய் திரும்பி விட்டதே... மேலும் சுடச்சுட செய்திகளில் தூள் கிளப்ப வாழ்த்துகள்!'' என்ற கழுகார்... தன் பாட்டுக்கு, ஸாரி... செய்திக்கு வந்தார்.

''தனக்கும் மரியாதை இல்லை... தன்னை நம்பி வந்தவர்களுக்கும் பிரயோஜனமில்லை என்ற ஆதங்கத்தோடு துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு தாய் வீடு நோக்கி நடையைக் கட்டி விட்டார் இளையான்குடி எம்.எல்.ஏ-வான ராஜகண்ணப்பன். போன இதழிலேயே அவர் கொதிப்பை உமக்கு விலாவாரியாகச் சொல்லியிருந்தேனே... ஆனால், அவர் தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை இத்தனை ஸ்பீடாக ராஜினாமா செய்வார் என்பதோ, அதை சபாநாயகர் படக்கென்று ஏற்பார் என்பதோ நான் எதிர்பார்த்ததைவிட ஸ்பீட்!''

''சிவகங்கைக்காரரின் ரிவர்ஸ் கியருக்கு பின்னணி என்னவோ?''

''சில மாதங்களாகவே உள்ளுக்குள் புகைந்து புழுங்கிவந்த ராஜகண்ணப்பன், சமீபத்தில் ஒருநாள் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். அதற்கு முன்னால், அமைச்சர் பதவி நிச்சயம் என சொல்லி ராஜகண்ணப்பனிடம் வேண்டிய மட்டும் சிலர் கட்சிக்குள் பலனடைந்த கதையும் நடந்ததாம். அப்படியும் காரியம் கைகூடாததால் கடுப்பாகி விட்ட ராஜகண்ணப்பன், 'உங்களை நம்பி வந்ததற்கு நல்லா அனுபவிக்கிறேன். எனக்கு எம்.எல்.ஏ. பதவிகூட வேண்டாம், என்னை விட்டு விடுங்கள்' என்று நேரடியாக ஸ்டாலினிடமே சொல்லிவிட்டு வேகமாக அறைக்குள்ளிருந்து வெளியேறினாராம். அதன்பின் சமாதான முயற்சிகள் எடுத்தும் கண்ணப்பனின் கோபம் தணியவில்லை!''

கழுகாரின் தாகம் தணிக்க நன்னாரி சர்பத் கொடுத்தோம். தாகசாந்தி முடித்து உடன் பிறப்புகளின் குமுறலைக் கொட்டத் தொடங்கினார் கழுகார்.

''தலைவர் குடும்பத்துப் பெண்மணி ஒருவர் சென்னையில் ஃபர்னீச்சர் கடை வைத்திருக்கிறார். அந்தக் கடைக்குப் பக்கத்தில் இருக்கிற ஆடிட்டர் ஒருவர் சொன்னால் தி.மு.க-வில் என்ன வேண்டுமானாலும் நடக்குமாம். 'அ.தி.மு.க- வில் சசிகலா குடும்பம் ராஜ்ஜியம் நடத்துவதாக எங்காளுங்க மேடை போட்டு பேசுறாங்க. ஆனா, இப்ப ஆம்பளை, பொம்பளைன்னு பல சசிகலாக்கள்கிட்ட சிக்கிப் படாதபாடு பட்டுக்கிட்டு இருக்கு தி.மு.க.! இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத்தான் இப்ப அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருக்குறவங்க முடிஞ்ச மட்டும் பீராய்ஞ்சுவிடுகிற மனப்போக்குல செயல்பட ஆரம்பிச்சுட்டாங்க' என்ற உடன்பிறப்புகளின் விரக்திக் குமுறல் கேட்கிறது...'' என்று 'லைவ்' செய்த கழுகாரிடம்...

''அழகிரி தென்மண்டல அமைப்புச் செயலாளரான பிறகு கட்சியைத் தூக்கி நிறுத்தப் போவதாக அறிவித்தார். ஆனால், அவருடைய எல்லைக்குள்ளேயே ஒரு எம்.எல்.ஏ-வை இழந்திருக்கிறதே தி.மு.க?'' என்றோம்.

''ராஜகண்ணப்பன் மட்டுமல்ல... இன்னும் பல 'கண்ணப்பன்கள்' கழகத்துக்கு டாட்டா காட்ட தயாராகி விட்டார்களாம். அண்மையில் தி.மு.க-வில் இணைந்த சேலம் செல்வகணபதியும் வந்த சுருக்கி லேயே மீண்டும் தாய் கழகத்துக்குத் திரும்பிவிட, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூலமாக தூதுவிட்டுக் கொண்டிருக்கிறாராம். சேலம்எம்.பி. தொகுதி தி.மு.க-வில் தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் செல்வகணபதி. ஆனால், அது மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவரான தங்கபாலுக்குதான் என உறுதியாகிவிட்டதாம். அதுமட்டுமல்ல, சேலத்து அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகத்தோடு இவருக்கு ஒத்துப் போகாது என்று பலரும் எடுத்துச் சொல்லியதையெல்லாம் புறக்கணித்து விட்டுத்தான் தி.மு.க-வுக்கு வந்தார் செல்வகணபதி. ஆரம்பத்தில், செல்வகணபதியோடு இணக்கமாக இருப்பது போன்ற நிலையில் இருந்த வீரபாண்டியாரின் ஆதரவாளர்கள், தற்போது செல்வகணபதியை முற்றிலுமாக புறக்கணித்திருக்கிறார்களாம். அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்து திருநெல்வேலியில் இருந்தபடியே அரசியல் செய்துகொண்டிருக்கும் கருப்பசாமி பாண்டியன், இன்றும் மாவட்டப் பொறுப்பாளராக இருக்கிறார். அவர், தனக்கு எப்படியும் இம்முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்தார். அவரும்கூட சுத்தமாக நிம்மதியிழந்துதான் இருக்கிறாராம்...''

''அடப்பாவமே....''

''கானாவைப் பொறுத்தவரை, 'எனக்கு மாவட்ட பதவியில்கூட அவ்வளவு ஈடுபாடு இல்லை. அமைச்சர் பதவி தந்தால் போதும்' என வெளிப்படையாகவே மேடைகளில் பேசிவந்தார். இந்த சூழலில், டேப் விவகாரத்தில் சிக்கி, தன்னுடைய அமைச்சர் பதவியை இழந்த பூங்கோதை அருணாவுக்கு திடீரென மறுபடி பதவி கொடுத்து, கானாவின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போட்டிருக்கிறது தி.மு.க. தலைமை! 'இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி' என்னும் புதுத் துறையை பூங்கோதைக்காகவே ஏற்படுத்திக் கொடுத்திருப்பதைப் பார்த்து, 'தி.மு.க-வின் அந்தக் குடும்பத்து பவருக்கு முன்னால் நீங்க எந்த காலத்திலும் தென் மாவட்டத்தில் பூங்கோதையை ஓவர்டேக் பண்ண முடியாது, அண்ணே' என்று கானாவின் அப்செட்டை மேலும் அதிகமாக்கி வருகிறார்களாம் அவருடைய ஆதரவாளர்கள்....''

''அப்படியா?''

''அ.தி.மு.க-விலிருந்து மாறி வந்த மற்றொரு பிரபலமான துணை சபாநாயகர் வி.பி.துரை சாமி கதை வேறுமாதிரி. தன் தொகுதிக்குள் நடக்கும் அரசு விழாக்களில் எல்லாம் தான் புறக்கணிக்கப்பட்டு தன் இடத்தை வீரபாண்டியாரும், அவருடைய மகனும் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற புழுக்கத்தில் இருக்கிறாராம். 'பாவம் அவர் தலித்! இந்த மாவட்டத்து சாதி பாலிடிக்சும் அவரை அழுத்துகிறது. அதையும் மீறி, ஏரியாவுக்குள் தனக்கென்று தனி செல்வாக்கை வளர்த்து, 'உள்ளூர் ஒபாமா'வாகவே ஒரு மாற்றத்துக்காகத் துடிக்கிறார்' என்கிறார்கள் நாமக்கல் துரைசாமியின் நலம் விரும்பிகள்!''

''ஓ!''

''இதேபோல் அ.தி.மு.க-வில் அமைச்சர் பதவியை அனுபவித்துவிட்டு தி.மு.க-வுக்குத் தாவியவர் ராமநாதபுரத்துக்காரரான தென் னவன். இவரும் தி.மு.க-வில் இத்தனை நாளாக 'கண்டுகொள்ளப்படாதவர் லிஸ்டில்' இருப்பதால் ராஜகண்ணப்பனுடன் முட்டுக்கொடுத்து அம்மாவிடம் சரணாகதி அடையும் யோசனையில் இருக்கிறாராம். இதற்காக தன்னுடைய ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் அவர். அதுமட்டுமல்ல, அழகிரி பேரைச் சொல்லி எம்.எல்.ஏ-வான ஒருவரே, அ.தி.மு.கழக எம்.பி. ஒருவருடன் உறவாடுவதாக தகவல். 'அஞ்சா நெஞ்சரே... ஆற்றல் அரசரே..!' என அழகிரியை போற்றி போஸ்டர்கள், ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைத்து அசத்திவரும் சிலரே, அ.தி.மு.க-வில் நம்பர் டூ-வாக இருந்த அமைச்சர் ஒருவரின் மகன் மதுரைக்கு வரும் போதெல்லாம் ஃபிளைட் டிக்கெட் எடுத்துத் தருகிறார்களாம்.''

''அட, ரெட்டை வேஷ உலகமே!''

''இதுபற்றியெல்லாம் தங்களுக்குள் பேசி வருந்தும் தி.மு.க-வின் ரெண்டாம் கட்ட சீனியர்கள் சிலர், 'கட்சிக்காக உண்மையாக உழைக்கும் கட்சித் தொண்டன், அண்ணா அறிவா லயம் கட்ட தலைக்கு ஒரு ரூபாய் வசூலித்துக் கொடுத்த தொண்டன், தலைவரையும் கட்சியையும் நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால், பதவியில் இருப்பவர்களோ கூடிக் கும்மியடிக்கிறார்கள். தலைநகரில் மிக சென்சிடிவ்வான இடத்திலேயே ஆர்ப்பாட்ட விருந்துகள் நடக்

கிறதாமே...' என்றெல்லாம் தங்களுக்குள் பேசி வருந்துகிறார்கள். 'கட்சி நிழலில் கல்லூரி நடத்துபவர்கள் யாராவது கட்சிக்காரன் வீட்டுப் பிள்ளைகளுக்கு காசு வாங்காமல் ஸீட் கொடுத்திருக்கிறார்களா? அப்புறம் ஏன் 'ராஜகண்ணப்பன்கள்' உருவாக மாட்டார்கள்?' என்று பொரிந்து தள்ளுகிறார்கள் தங்களுக்குள்!''

''அங்கே அம்மாவின் சிக்னல் ராஜகண் ணப்பனுக்கு கிடைத்து விட்டதாமே?''

''அடுத்தடுத்து நடப்பதை என்னோடு சேர்ந்து நீரும் கவனிக்கலாம்...'' என்ற கழுகார்,

''அ.தி.மு.க. பாச வலைக்குள் விழுந்துவிடாமல் காங்கிரஸைத் தடுத்தாளும் நோக்கில், குலாம் நபி ஆசாத்திடம் தயாநிதி மாறனும் அகமது படேலிடம் டி.ஆர்.பாலுவும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களாம். மேல் மட்டம் தவிர அடுத்தடுத்த நிலைகளிலும் இந்தப் பூச்சு வேலைகள் தொடர்கிறதாம். முன்னாள் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் உக்கம்சந்த் ஆதிகால காங்கிரஸ்காரர். இவருக்கு தற்போதைய காங்கிரஸ் கட்சிப் பொருளாளரான மோதிலால் வோராவுடன் நெருக்கமான பழக்கம் உண்டு. இப்போது உக்கம்சந்த், வோரா உட்பட பல காங்கிரஸ் நண்பர்களிடம் அ.தி.மு.க. உறவு வேண்டாம் என பேசிவருகிறாராம்.''

''ம்...''

''அரசியல் கச்சேரிகளுக்கு மத்தியில் ஆஸ்கர் கச்சேரி சொல்கிறேன் கேளும். ஆஸ்கர் விருதுபெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு வருமான வரிவிலக்கு வழங்க சிபாரிசு செய்வதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார் அல்லவா? இதுபற்றி சென்னை வந்திறங்கிய ஏ.ஆர்.ரஹ்மானிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர், 'ஆமாம். பரிசுத் தொகை 500 டாலர். அதற்கு வரிவிலக்கு வழங்குவதாக சொல்லியிருக்கிறார்கள்' என்றார் சுருக்கமாக. சில வருடங்களுக்கு முன்பு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருக்கும்போதுதான் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் ரெய்டு நடந்தது, ஞாபகமிருக்கில்லையா?''

''ரஹ்மானை நாடாளுமன்றமும் பாராட்டி வாழ்த்தியிருக்கிறதே?''

''அதிலும் செய்தி இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டி நாடாளுமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, தமிழக எம்.பி-க்கள், 'தமிழரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டுகள்' என்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டெல்லி எம்.பி-க்கள், 'ரஹ்மானை இந்தியர் என்று சொல்லுங்கள்' என்றனர் உரிமையாக! இதையடுத்து பேசிய தி.மு.க. உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, 'ஏ.ஆர்.ரஹ்மானை நாங்கள் தமிழர் என்கிறோம். அவரால் பெருமை என்றதும் நீங்கள் இந்தியராகப் பார்க்கச் சொல்கிறீர்கள். அதுபோலவே இலங்கையில் கொல்லப்படும் தமிழர் களையும் நீங்கள் இந்தியர்களாகப் பாருங்களேன். அவர்களுக்காக ஆதரவுக் குரல் கொடுத்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வற்புறுத்துங்களேன். அதைச் செய்தால், உங்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்கவும் நான் தயாராக இருக்

கிறேன்.' என்றார் உருக்கமாக!'' என்ற கழுகார், மீண்டுமொரு கிளாஸ் நன்னாரியைக் குடித்துவிட்டுத் தொடர்ந்தார்.

''கடந்த வாரம் பெங்களூருவில் உள்ள சிங்கள மாணவர்கள் சேர்ந்து அங்குள்ள 'சௌடையா நினைவு அரங்க'த்தில் இலங்கை சுதந்திர நாள் விழாவைக் கொண்டாடியிருக்கிறார்கள். இதை எதிர்த்து பெங்களூரு தமிழர்கள் போராட்டம் நடத்தத் தயாராகியிருக்கிறார்கள். இதைத் தடுக்க நினைத்த கர்நாடக காவல்துறை, அரங்கத்துக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு அளித்திருந்தது. இந்த பாதுகாப்பு வளையத்தையும் மீறி அரங்கத்தின் உள்ளே சென்ற கன்னட திரைப்பட இயக்குநரும் தமிழருமான கணேஷன், 'உங்களுக்கு இந்தியாதான் கல்வியறிவைப் புகட்டுகிறது. அந்த நன்றி உணர்வுக்காவது நீங்கள் உங்கள் நாட்டில் தமிழர்கள் கொல்லப்படக் கூடாது என்று குரல் கொடுக்கக் கூடாதா?' என சிங்கள மாணவர்களைப் பார்த்துக் கேட்டாராம். உடனே, மேடையேறிய சிங்கள மாணவர்கள் கணேஷனை தாக்க... அவருடைய உதடு கிழிந்தது. அவரை சுற்றிவளைத்த போலீஸார், விசாரணை நடத்திவிட்டு இரவு பன்னிரண்டு மணிக்குதான் அனுப்பினார்களாம். இலங்கையில்தான் தமிழர்கள் மீதான தாக்குதலை சிங்களர்கள் நடத்துகிறார்கள் என்றால், இந்தியாவிலும் இந்தியர்கள் மீது வன்முறையா என்று பெங்களூரு தமிழர்கள் பலரும் வேதனையில் வெம்பி வெடிக்கிறார்கள்...''

- கம்மிய குரலில் சொல்லி முடித்து, சத்தமில்லாமல் விண்ணில் சஞ்சரித்தார் கழுகார்.


Comments