விடுதலைப் புலிகளை ஆயுதங்களைக் கீழேபோடச் சொல்வதும் சரணடையுமாறு கோருவதும் இனப்பிரச்சினையைத் தீர்க்க உதவப் போவதில்லை

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்கள் நாள் தோறும் எதிர்நோக்கும் இனஅழிப்பு பற்றி சர்வதேச சமூகத்தின் முன்னால் சில தகவல்களை முன்வைக்க விரும்புகிறோம்.

தமிழ் மக்கள் ஒரு தேசியமாகவே இலங்கை தீவினுள் வாழ்ந்து வருகிறார்கள். தொடர்ச்சியாகவே இத்தீவின் வடக்கு மற்கும் கிழக்குப் பகுதிகள் தமிழ் மக்களுடைய பாரம்பரியப் பிரதேசங்களாகவே இருந்து வருகின்றன. ஐம்பது வருடங்களுக்கு மேலாகவே சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அவர்களுடைய சுயநிர்ணய உரிமைக்கெதிராகவும் அவர்கள் ஒரு தேசம் என்பதற்கெதிராகவும் இந்த ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் அவர்களுடைய நிலங்களைப் பறிக்க முயற்சி எடுத்ததோடு அவர்களுக்கெதிரான இனஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

தமிழ் மக்கள் மீது இத்தகைய கொடுரமான இன ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொண்டே அவர்களைத் தமது மக்கள் என்றும் சொல்லி வருகிறது. இது ஒரு அரச பயங்கரவாதம் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் சமூகம் இதற்கெதிராகப் போராடி வருகிறது.

ஆரம்பத்தில் ஏறத்தாழ 25 வருடங்களாக அகிம்சை வழியில் சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்கான போராட்டமாக இருந்தது. உலகம் முழுவதும் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இந்த அகிம்சை வழிப் போராட்டம் சிறிலங்கா அரசாங்கத்தின் இளம் சிங்கள இளைஞர்களை மட்டுமே கொண்ட இராணுவத்தால் ஒடுக்கப்பட்டு பெருமளவான இரத்தம் சிந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

அதேவேளை போலிக்காரணங்களால் தூண்டிவிடப்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக தமிழ் மக்களுக்கெதிரான பல இனஒழிப்பு நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தின் துணையுடன் முன்னெடுக்கப்பட்டு வந்தன. தமிழ்மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் அரச ஆதரவுடன் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

பொருளாதார அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற துறைகளில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டது. சிங்கள தமிழ் இனமுரண்பாடு இவ்வாறான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை இன்னமும் கூர்மையாக்கின.

சிறிலங்கா அரசாங்கத்தின் வன்முறை காரணமாக தமிழ் மக்களுடைய அகிம்சை ரீதியான போராட்டம் பயனற்றதாகியது. இந்தப் புறக்காரணி தமிழ் மக்களின் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக்கியது.

இது தமிழீழ விடுதலைப் புலிகளின் வரவுக்கும் இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அவர்கள் தலைமை தாங்கவுமான சூழலை உருவாக்கியது. தமிழ் மக்களே தமது அரசியல் இலக்கைத் தீர்மானித்தார்களே தவிர விடுதலைப் புலிகள் அல்ல. 1977இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்கு எதுவென்பதை முழுஉலகுக்கும் தெரியப்படுத்தினார்கள்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அவர்களுடைய பாரம்பரியப் பிரதேசமான வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்தில் சுதந்திரமான ஒரு அரசை நிறுவுவது என தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒரு பொது முடிவுக்கு வந்தன. தமிழ் மக்களுடைய ஜனநாயகரீதியான இம்முடிவை நிறைவேற்றுவதை தனது தேசியக்கடiமையாகக் கருதி அதனைக் கையிலெடுத்தது.

கடந்த 30 வருடங்களாக தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் அவர்களுடைய இராணுவ பலம் காரணமாக உலக அரங்கில் புகழ் பெற்றது. விடுதலைப் போராளிகளுடைய அதியற்புத அர்ப்பணிப்பு காரணமாகவே இது அடையப்பட்டது. எப்போதெல்லாம் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக மேலோங்கிக் காணப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அரசியல் தீர்வு காணப் போவதாகச் சொல்லிக் கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறது.

ஆனால் இந்தக் காலஇடைவெளியைப் பயன்படுத்தி தனது ஆயுதப்படைகளை மீண்டும் பலப்படுத்திக் கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறு விளைவித்து போருக்கான சூழலை உருவாக்கி வந்திருக்கிறது. ஆயுதப் போராட்டம் உருவாகியதன் பின்னர் முதல் முதல் 1985இல் இடம்பெற்ற திம்புப் பேச்சுவார்த்தைகளிலிருந்து நோர்வேயின் அநுசரணையுடன் 2002ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு ஐந்து ஆண்டுகளாக நீடித்த சமாதான ஒப்பந்தம் வரை உலகை ஏமாற்றும் வகையில் சிறிலங்கா அரசு இந்த நாடகத்தை அரங்கேற்றியது.

இணைத்தலைமை நாடுகளின் ஆதரவுடனும் நோர்வேயின் அனுசரணையுடனும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. 2002 போர் நிறுத்த உடன்படிக்கை, சுனாமிக்குப் பின்னரான நிர்வாகக்கட்டமைப்பு, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான வடகிழக்குக்கான உடனடியான மனிதாபிமான மற்றும் புனர்வாழ்வு செயலகம் ஆகிய மூன்று உடன்படிக்கைகளையும் சிறிலங்கா அரசு நிராகரித்து விட்டது.

பேச்சுவார்த்தைகளுடாக அரசியல் தீர்வைக்காணுமாறும் இராணுவ வழியில் தீர்வைக் காண முற்பட வேண்டாம் என்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததை சிறிலங்கா அரசு புறக்கணித்துவிட்டது என்பதை உலகம் அறியும். சிங்கள தமிழ் இன முரண்பாட்டில் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டினை விடுதலைப் புலிகளைத் தவிர வேறெவரும்; சரியாக இனம்காணவில்லை.

இனப்பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒரு போதும் அரசியல் தீர்வு காணப் போவதில்லை. அது இராணுவ ரீதியில் தீர்வு காணவே முயற்சிக்கிறது என்று விடுதலைப் புலிகள் நீண்ட காலமாகவே சொல்லி வந்திருக்கிறார்கள். அரசியல் தீர்வு காண்பதற்குப் பதிலாக தனது இராணுவத் தீர்வை வலியுறுத்தும் வகையில் இதனை சர்வதேச சமூகத்தின் முன் பயங்கரவாதத்திற்கெதிரான போராகச் சித்திரித்து வருகிறது.

சிறிலங்கா அரசாங்கம் செய்யும் கொடுரங்களை அது அரசு எனும் ஸ்தானத்தில் இருப்பதன் காரணமாக சகித்துக் கொள்வதையும் விடுதலைப் புலிகள் அரசு என்ற ஸ்தானத்தைப் பெறாததால் அவர்களை நிராகரிப்பதையும் உலக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஹிட்லரின் அரசாங்கத்திலிருந்து ருவாண்டா, சூடான் அரசாங்கங்கள் வரை இவை எல்லாமே அரசாங்கங்களாக இருந்து கொண்டு இனப்படுகொலையை மேற்கொண்டவை.

சிறிலங்கா அரசாங்கமும் தமிழர்கள் மீது பல இனப் படுகொலைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இந்த இனப்படுகொலை வரலாறு 1956இல் ஆரம்பித்து இன்று வரை நீள்கிறது. 1956இலிருந்து இந்த இனப்படுகொலை வரலாற்றில் இரண்டு இலட்சம் பேர் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தனியரசை ஆதரிப்பதில் தயக்கம் காட்டி வருகின்றன.

எங்களுடைய அபிப்பிராயத்தில் இந்த தமிழ் சிங்கள முரண்பாட்டிற்கு உள்ள ஒரேயோரு நிரந்தரத் தீர்வு அதுவாகத் தானிருக்கிறது. சிங்கள அரசாலும், சிங்கள ஆயுதப்படைகளாலும் நீண்டகாலமாகவே தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த படுகொலைகளால் சோர்வுக்கும் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

அவர்களுடைய மிகப்பெருமளவிலான இழப்புக்களும், அவர்களுடைய சொல்லப்படாத துயரங்களும் வேட்டையாடப்பட்ட நினைவுகளும் ஒன்றாக வாழலாம் என்கிற நம்பிக்கையைச் சிதைத்து விட்டன. இது தான் இலங்கையின் இனத்துவ அரசியல் யதார்த்தம்.

இப்போது வன்னி மீது மேற்கொள்ளப்படும் கொடுமையான நடவடிக்கைகள் இந்த யதார்த்தத்தை கெட்டிப்படுத்தியுள்ளன. யுத்தத்தில் ஒருவர் மீது மற்றவர் பாவிக்கும் ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கிகள் வன்னி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்கள் மீதும் அவர்களுடைய முகாம்கள் மீதும் பாவிக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் சிறுவர்கள் முதியோர்கள் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் அவயவங்களை இழந்தும் காயப்பட்டும் உள்ளனர். கடந்த சில வாரங்களில் நாளாந்தம் 50 தொடக்கம் 100 வரையான சாதாரண மக்கள் இவ்வாறான தாக்குதல்களால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே இரண்டாயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 5000 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறான மனித அவலம் குறித்து உலகம் தொடர்ந்து மௌனம் சாதிப்பது வருத்தம் தருகிறது. 21ஆம் நூற்றாண்டில் தமிழீழ தமிழ் மக்கள் வெறுத்தொதுக்கத்தக்க இனப்படுகொலையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் மனித அவலத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நன்நோக்கோடு சர்வதேச சமூகத்தால் கொண்டு வரப்படும் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது. இந்தப் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தையூடான ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கு இட்டுச் செல்வதாக அமைய வேண்டும் என்பதே விடுதலைப் புலிகளின் அவாவாகும்.

விடுதலைப் புலிகளை ஆயுதங்களைக் கீழேபோடச் சொல்வதும் சரணடையுமாறு கோருவதும் இனப்பிரச்சினையைத் தீர்க்க உதவப் போவதில்லை என்பதை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகளிடமுள்ள ஆயுதங்கள் தான் தமிழ் மக்களைப் பாதுகாப்தோடு அவர்களுடைய அரசியல் விடுதலைக்கான கருவியாக உள்ளது என்பதும் இன்றைய அரசியல் யதார்த்தம். விடுதலைப் புலிகள் பல பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியுள்ளார்கள்.

அப்போதெல்லாம் எவரும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று சொன்னதில்லை. விடுதலைப் புலிகளிடமுள்ள ஆயுதம் தான் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு. சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் உறுதிப்பாட்டுடனும் தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரத்தீர்வு எட்டப்படுமிடத்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் அவசியப்படாத ஒரு சூழல் உருவாகும்.

தமிழ் மக்கள் இனப்படுகொலையை எதிர்நோக்கியிருக்கும் தருணத்தில் அரசியல் தீர்வொன்றைக்காண முயற்சிக்காத ஒரு நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என எதிர்பார்ப்பது இந்த நூற்றாண்டில் சுதந்திரத்திற்கான ஒரு போராட்டத்தை நிந்தனை செய்வதாகும்.

அதேவேளை சிறிலங்கா அரசாங்கத்தையும் அதன் இனப்படுகொலை யுத்தத்தையும் ஊக்கப்படுத்துவதுமாகும். ஆகவே, விடுதலைப் புலிகளை ஆயுதங்களைக் கீழேபோடுமாறு வற்புறுத்துவதை விட்டு விட்டு தமிழ் மக்களுக்கெதிரான இனப்படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

வன்னியலுள்ள தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவதோடு அவர்களுக்கான உணவு மற்றும் மருத்தவ தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதோடு இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

உடனடிப் போர் நிறுத்தத்திற்கும் அதனூடாக ஒரு நிரந்தர அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான எல்லா முயற்சிகளையும் முன்னெடுக்கவும் அதற்காகக் கலந்துரையாடவும் இணைந்து செயற்படவும் தயாராக உள்ளோம் எனச் சர்வதேச சமூகத்திற்கு நாங்கள் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உண்மையுள்ள
பா.நடேசன்
அரசியல் துறைப் பொறுப்பாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள்

Comments