போரிடும் மக்களின் உளவுறுதியே வெற்றியை தீர்மானிக்கும்

தமிழ் மக்களின் விடுதலைப்போர் நெருக்கடியானதும், முக்கியமானதுமான ஒரு கட்டத்தை எதிர்நோக்கி நிற்கின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு குறிப்பாக போர்க்களத்தில் நிற்கும் மக்களுக்கு முக்கியமாக தேவைப்படுவது சேர்ந்துபோகாத மனநிலையும் உளவுறுதியும் தான். போரை திணிக்கும் அரசினை விட போரிடும் மக்களுக்கு அது மிகவும் அவசியமானது.

போரில் ஈடுபடும் இரு தரப்பினரும் தமது தரப்பின் உளவுரனையும், மனநிலையையும் உயர்வாக பேணுவதுடன், எதிர்த்தரப்பின் உளவுரனை மழுங்கடிப்பதற்கு முயற்சிப்பது,அடிப்படை போரியல் விதிகளில் முக்கியமாவை.

ஆதிகால சமர்க்களங்களில் இருந்து உலகில் நடைபெற்ற இரு பெரும் உலக மகா யுத்தங்கள் வரை தொடர்ந்து வந்த இந்த உத்திகள் அதன் பின்னர் உலகில் நடைபெற்ற விடுதலைப் போர்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான போர்கள் என்பவற்றில் முக்கிய பங்கு வகித்ததை நாம் மறந்துவிட முடியாது. இந்த போர்களில் வெற்றியை தீர்மானித்த காரணிகளில் வெற்றி பெற்ற தரப்பின் படையினரினதும், மக்களினதும் உளவுரண் உயர்வாக இருந்ததும் ஒரு காரணமாகும். மறுவளமாக நோக்கினால் தோல்வியடைந்த தரப்பு தமது உளவுறுதியையும், நம்பிக்கையையும் முதலில் தொலைத்துவிட்டு பின்னர் களத்தில் வெற்றியை தேடி தோல்வியை தழுவியிருந்தன.

ஸ்ராலின்கிராட் சமரில் உலகின் வலிமைமிக்க இராணுவமாக திகழ்ந்த ஜேர்மனின் ஆறாவது இராணுவமும், பன்சர் படை பிரிவும் அழிவை சந்தித்தது எவ்வாறு என்ற ஆய்வின் முடிவில் வெளியாகிய தகவல்களிலும் இந்த காரணிகள் முக்கியமானவை. அதாவது நீண்டகாலம் இழுபட்டுசென்ற போர், தொடர்ச்சியாக சந்தித்த இழப்புக்கள், அன்னிய மண்ணில் வினியோகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் முடக்கப்பட்ட படையணிகள் போன்ற காரணிகளே படையினாரின் உளவுரனை முற்றாக சிதைத்திருந்ததாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தோல்வியை சந்திக்கப் போகின்றோம் என்ற மனநிலையுடன் போரிடும் படையினரும், மக்களும் உலகின் வரலாற்றில் வெற்றி பெற்றதில்லை.

வியட்னாம் போரை எடுத்துக்கொண்டால், 1960களின் பிற்பகுதியில் ஏறத்தாள நான்கு இலட்சம் அமெரிக்க படையினர், அதன் கூட்டணி படையினர், தென்வியட்னாம் படையினர் என ஏறத்தாள ஒரு மில்லியன் படையினர் பல ஆயிரம் குண்டுவீச்சு விமானங்களுடன் வட வியட்னாமின் கிராமங்களை அழித்ததுடன், பல பகுதிகளில் மக்களையும், போராளிகளையும் ஒரு முற்றுகைக்குள் கொண்டு வந்திருந்தனர். எனினும் அந்த மக்களும், போராளிகளும் தமது மனவுறுதியை இழக்கவில்லை. அந்த காலப்பகுதியில் அமெரிக்க படை மேற்கொண்ட முற்றுகைச் சமர்களில் எல்லாம் அமெரிக்க படையினர் இழப்புக்களை சந்தித்த போதும் பெரும்பாலன சமர்களில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

இவ்வாறான ஒரு நெருக்கடியான நிலையில் வியட்னாம் போராளிக்குழுவின் கேணல் தர அதிகாரி ஒருவருடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவருக்கு ஏற்பட்டிருந்தது. அப்போது கேணலிடம் ஊடகவியலாளர் இரண்டு கேள்விகளை கேட்டிருந்தார். ஒன்று "தற்போதைய சமர்களில் வெற்றியீட்டுவது யார்? இந்த கேள்விக்கு சற்றும் தாமதிக்காத கேணல் "அமொக்க படையினரே" என பதிலளித்திருந்தார். ஆனால் அவரிடம் அடுத்த கேள்வியை கேட்ட ஊடகவியலாளர் ஆடிப்போய்விட்டார். சமர்களில் அமெரிக்கர்கள் தொடர்ச்சியாக வெற்றியீட்டி வந்தால் இந்த போரில் வெல்லப்போவது யார்? என கேட்ட போது தனது குரலில் பதட்டமோ, அச்சமோ இன்றி உறுதியான குரலில் கேணல் கூறிய பதில் "நாம்" என்பதேயாகும்.

எந்த ஒரு நெருக்கடியான நிலையிலும் தமது உறுதியை தளர விடாத அந்த மக்கள் இறுதியில் தமது வெற்றியை பெற்றுக்கொண்டனர். அண்மையில் விடுதலைப்புலிகளின் குரல் வானொலியில் நடைபெற்ற கருத்துப்பகிர்வு நிகழ்வில் விடுதலைப்புலிகளின் சமர் ஆய்வுமைய பொறுப்பாளர் யோ. செ யோகி அவர்கள் கூறிய கருத்துக்களும் அதனையே வலியுறுத்தியுள்ளன. அதாவது "நெடிய எங்களுடைய விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாங்கள் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நிற்கின்றோம் நாங்கள் நம்பிக்கை இழந்து, உளவுரன் உடைந்து எதிரியிடம் சரணடைய வேண்டும் என்பது எதிரியின் ஆசை மட்டுமல்ல இந்த உலகத்தின் விருப்பமும் அதுவே.

ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கடிகளின் போதெல்லாம் நாம் வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் தான் போராடினோம், வாழந்து வந்தோம், தற்போதும் போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்த நம்பிக்கையை நாம் இழந்து விடக்கூடாது. மக்கள் போராடுகின்ற போது, மக்கள் தமது உணர்வுகளை இழக்காத போது போராட்டம் தோற்பதில்லை" என தெரிவித்திருந்தார். எனவே நாம் எமது மக்களிடமும், புலம்பெயர்ந்து வாழும் உறவுகளிடமும் எப்போதும் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் மக்கள் போராட்டமாக மாற வேண்டும், ஈழமண்ணில் உள்ள அனைவரும் ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்ற நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால் எமது பொது எதிரியும், அவனுக்கு அனுசரணையாக செயற்படும் ஊடகங்களும் மக்களின் உளவுரனை முற்றாக தகர்த்துவிடும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. இதற்காக பல அமைப்புக்களை ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளில் அமைத்து செயற்படவும் சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் உளவுரனை முற்றாக சிதறடிக்கும் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட சிறீலங்கா அரசு தீர்மானித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள சில ஊடகங்களும் மறைமுகமாக ஆதரவழித்து வருகின்றன.

அரசினை பொறுத்த வரையில் சிறீலங்காவில் இயங்கிவரும் ஊடகங்கள் மீது பல வழிகளில் வன்முறைகளை மேற்கொண்டு அவற்றை ஒரு முடக்க நிலைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் வன்னி போர் தொடர்பாக அரசு தெரிவித்து வரும் கருத்துக்களினால் சிங்கள தேசம் ஒரு மாயைக்குள் தள்ளப்பட்டுள்ளது. சிறீலங்காவில் உள்ள சிங்கள மக்கள் மட்டுமல்லாது அனைத்துலகிலும் பரந்து வாழும் சிங்க மக்களும் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சிங்கள மக்களினதும், படையினரினதும் மனவுறுதிகளை மேன்மையாக பேணுவதில் அரசு அதிக அக்கறை செலுத்தியும் வருகின்றது. படை நடவடிக்கையின் தற்போதைய கட்டத்தை நீங்கள் அவதானித்தால் அது நன்றாகவே புரியும். அதாவது வன்னியில் கொல்லப்படும் படையினர் தொடர்பாக அரசு எதனையும் தற்போது தெரிவிப்பதில்லை. அதிகளவில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுவதாகவும், அவர்களின் நிலங்கள், கனரக ஆயுதங்கள், வாகனங்கள் போன்றவை கைப்பற்றப்படும் தகவல்களை மட்டும் தான் அரசு வெளியிடுவதுண்டு. அதற்கான காரணம் என்ன? போருக்கான நிதியையும், படையினருக்கான இளைஞர்களையும் சிங்கள மக்களிடம் இருந்து பெற்று போரை வெல்வதன் மூலம் தனது அரசியல் இருப்பை தக்கவைப்பது தான் அரசின் நோக்கம்.

தென்னிலங்கையில் தற்போது எஞ்சியுள்ள படைத்துறை ஆய்வாளர்களும் அதற்கு ஆதரவாக செயற்படுவதுடன், விடுதலைப்புலிகளின் முடிவுக்கான காலம் தொடர்பாகவே அவர்கள் தமது பத்திகளை வரைந்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகளால் அரசு ஓரளவு வெற்றிபெற்றும் வருகின்றது, படையினருக்கான ஆட்சேர்ப்புக்களை அது அதிகளவில் மேற்கொள்வதுடன், வெளிநாடுகளில் உள்ள சிங்கள மக்களிடம் இருந்து 500 மில்லியன் டொலர்களை திரட்டவும் முடிவு செய்துள்ளது.

அதற்கான காரணம் இந்த போரில் அரசு வெல்லும் என்ற மனநிலையை சிறீலங்கா அரசு எல்லா சிங்கள மக்களிடமும் ஏற்படுத்தியுள்ளது என்பதேயாகும். களமுனைகளை பொறுத்தவரையில் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அதிர்ச்சிகரமான தாக்குதலின் இழப்புக்களை மூடிமறைத்துள்ள அரசு, வன்னி களமுனையில் மேலும் ஒரு படையணியை புதிதாக களமிறக்கியுள்ளது.

நடவடிக்கை படையணி எட்டு என்படும் இந்த படையணி இரண்டு பிரிகேட்டுக்களை கொண்டது. தற்போது மன்னார் மாவட்ட கட்டளைத்தளபதியாக பணியாற்றி வரும் கேணல் ஜி.வி ரவிப்பிரியா இதன் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரிகேட் அதிகாரிகளாக 63-3 பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய லெப். கேணல் சுபாசனா வெலிகல, 59-3 பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய லெப். கேணல் லாலந்த கமகே ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த படையணியை புதுக்குடியிருப்பின் மேற்குப்பகுதியில் அதாவது 59 ஆவது டிவிசன் மற்றும் நடவடிக்கை படையணி 3 ஆகியவற்றிற்கு இடையில் நிறுத்தும் முயற்சிகளை இராணுவத்தளபதி மேற்கொண்டுள்ளதுடன், அதன் கட்டளை அதிகாரியும் மன்னாரில் இருந்து அவசர அவசரமாக ஒட்டுசுட்டான் பகுதிக்கு சிறப்பு உலங்குவானூர்தியில் அழைத்துவரப்பட்டுள்ளார்.

எனினும் புதிதாக உருவாக்கப்படும் நடவடிக்கை படையணிகள் முழுமையான டிவிசனின் பலத்தை கொண்டிருப்பதில்லை. இந்த புதிய படையணியின் வரவுடன் தற்போது வன்னி களமுனையில் புதுக்குடியிருப்பு பகுதியை நோக்கி நகர்ந்துவரும் படையணிகளின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. இதனிடையே தற்போது விசுவமடுப்பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 57 ஆவது டிவிசனை பின்னிருக்கை படையணியாக பேணப்போவதாக கடந்த வாரம் படைத்தரப்பு தெரிவித்திருந்த போதும் அந்த படையணியும் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் வன்னிப்பகுதியில் தொடர்ச்சியாக மோதல்கள் நடைபெற்று வருவதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதல்களில் இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்து வருகின்றது. அரசு இது தொடர்பில் எதனையும் தெரிவிக்காத போதும், கொழும்பில் தொடர்ச்சியாக ஓடும் நோயாளர் காவுவண்டிகளின் அலறல் சத்தங்கள் அதனை உறுதிப்படுத்துவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மிகவும் தீவிர சிகிச்சை தேவைப்படும் படையினரை மட்டுமே அரசு இரத்மலானை விமான நிலையத்திற்கு கொண்டு செல்வதாகவும், ஏனைய பொருமளவான படையினர் அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில் கண்டியில் உள்ள பெரதேனியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர். படையினரின் இழப்புக்கள் தொடர்பான தகவல்களை மறைப்பதற்கே அரசு இந்த உத்திகளை கையாண்டு வருகின்றது.

இதனிடையே இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து விடுதலைப்புலிகள் சிறீலங்கா வான்படையினர் மீது விமான எதிர்ப்பு பீரங்கி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. விடுதலைப்புலிகளின் 23 மி.மீ மற்றும் 30 மி.மீ விமான எதிர்ப்பு பீரங்கிகளின் தாக்குதல்களில் சிக்கி நான்கு மிக்-27 ரக விமானங்களும், ஒரு எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தியும் சேதமடைந்துள்ளன.

விமானங்களின் வெளிப்பகுதிகளிலேயே (AIRFR AME) பீரங்கி சன்னங்களினால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்த விமானங்கள் திருத்தப்பட்ட பின்னர் மீண்டும் பயன்படுத்தபடும் நிலையில் இருப்பதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன. சிறீலங்கா வான் படையினரிடம் இயங்கு நிலையில் 07 மிக்-27 ரக விமானங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வான்படை விமானங்கள் தொடர்பான இந்த தகவல்களுடன் மேலும் சில தகவலக்ளும் வெளிவந்துள்ளன.

சிறீலங்காவின் வான்படை விமானங்களில் மிக்-27 மற்றும் எம்ஐ-24 போன்றவற்றில் சிலவற்றை இந்திய வானோடிகள் சிறீலங்கா வானோடிகளுடன் இணைந்து செலுத்தி வருவதாகவும், எத்தனை விமானங்களில் அவர்கள் பணிபுரிகின்றனர் என்பது தொடர்பான தகவல்களை பெறமுடியவில்லை எனவும் கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் பாதுகாப்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. எனினும் ஒரு எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தியில் இந்திய வான்படையின் துப்பாக்கிதாரர், உதவி விமானி, கண்காணிப்பாளர் ஆகியோர் பணியாற்றி வருவது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் போரில் இந்தியா முக்கிய பங்குவகித்து வருவது நாம் அறிந்தவையே. இருந்தபோதும் அனைத்துலகத்திலும், இந்தியாவிலும் ஏற்பட்டுவரும் எழுச்சிகள் அவர்களுக்கு அனுகூலமானதல்ல. இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் அண்மித்து வரும் நிலையில் அங்கு ஏற்பட்டுவரும் மாற்றங்கள் கணிசமான தாக்கங்களை இந்திய அரசியலில் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்களும் அதனையே பிரதிபலித்துள்ளன.

தற்போதைய சமரில் இராணுவம் கனரக ஆயுதங்களை செறிவாக பயன்படுத்துவதை தனது உத்தியாக கொண்டுள்ளது. உதாரணமாக 10 பேர் கொண்ட இராணுவ அணியானது இரண்டு ஏ.கே எல்எம்ஜி, இரண்டு பி.கே எல்எம்ஜி, இரண்டு ஆர்பிஜி உத்துகளை செலுத்திகள், மூன்றிற்கு மேற்பட்ட ஒரு தடவை பயன்படுத்தப்படும் லோ வகை உந்துகணை செலுத்திகளை ,ஆதரவு சூட்டிற்கு 152 மி.மீ பீரங்கி மற்றும் 122 மி.மீ பல்கு ழல் உந்துகணை செலுத்திகளின் தாக்குதல்களையும் பெற்று வருகின்றது. உத்திகளை முறியடிப்பதற்கு விடுதலைப்புலிகளும் சமரில் இலகுவாக நகர்த்தப்படும் கனரக ஆயுதங்களை அதிகம் பயன்படுத்தி வருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலின் போது 23 மி.மீ அல்லது 30 மி.மீ பீரங்கியை இலகு காலாட்படை பற்றலியன்களின் நடவடிக்கையில் இணைத்திருந்ததுடன், அந்த தாக்குதலில் பயன்படுத்திய கவசத்தாக்குதல் வாகனத்தில் 14.5 மி.மீ கனரக துப்பாக்கியையும் அவர்கள் பயன்படுத்தியிருந்தனர். கடந்த வருடத்தின் பெரும் பகுதி வரை தற்காப்பு சமரில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகள் இந்த வருடத்தில் வலிந்த சமரையும், தற்காப்புச்சமரையும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சமர்களில் இராணுவமும், கடற்படையும் அதிக சேதங்களை சந்தித்து வருவதுடன், தற்போது வான்படையும் அதனை எதிர்நோக்க ஆரம்பித்துள்ளது. படைத்தரப்பின் இழப்புக்களையோ அல்லது சேதங்களையோ அரசு மூடிமறைத்து வருகின்ற போதும், தற்போது வன்னி களமுனையில் படைத்தரப்பின் நகர்வுகள் மிகவும் மந்த நிலையை அடைந்ததற்கும், படையணிகள் அடிக்கடி மாற்றப்படுவதற்குமான காரணங்களும் அதுவே.

- வேல்ஸ் இல் இருந்து அருஷ்


Comments