புதிய வடிவம் எடுக்கும் போர்

சிங்களப் பேரினவாதத்தால் மக்கள் கொல்லப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என்று எந்த வேறுபாடும் இன்றி தமிழ் மக்கள் சிங்கள அரசினால் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

“பாதுகாப்பு வலயம்” என்று அறிவித்து மக்களைப் அப் பகுதிகளுக்குள் வரச் செய்து, அப் பகுதிகள் மீது ஆகோர எறிகணை வீச்சை சிங்கள தேசம் நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பை அண்டிய பகுதிகளை “பாதுகாப்பு வலயம்” என்று அறிவித்திருந்தது. அங்கும் எறிகணை வீசி நூற்றுக் கணக்கான மக்களை கொன்றது. தற்பொழுது முல்லைத்தீவு நகருக்கு வடக்கேயுள்ள வெள்ளமள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து பழமாத்தளம் வரை பாதுகாப்பு வலயமாக அறிவித்து மக்களை அங்கு வரச் செய்து, அப் பகுதி மீதும் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலையும் விமானத் தாக்குதலையும் நடத்திக் கொண்டிருக்கின்றது.

இப்படி கோரமான வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசு மறுபுறம் தமிழ் மக்களை தன்னுடைய கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும்படி அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது. இதை நம்பி சிங்கள அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த தமிழ் மக்களின் நிலைமையும் படுமோசமாக மாறி வருகின்றது.

கிட்லர் யூத மக்களை முகாம்களுக்குள் அடைத்து பெரும் மனிதப்படுகொலையை நடத்தியது போன்று சிங்கள அரசும் தன்னுடைய பகுதிக்கு வந்த மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்து ரகசியமான முறையில் படுகொலை செய்து வருகின்றது. சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கள் வந்த பல இளம் வயதினர் காணாமல் போயிருக்கின்றார்கள். விசாரணை என்று அழைத்து செல்லப்படும் இளம் வயதினைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் திரும்பி வருவது இல்லை. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொல்லப்படுகின்றார்கள்.

இந்த மக்களை சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குப் பகுதிக்குள் வரும்படி அழைத்த ஒட்டுக் குழுக்கள் இந்த மக்களுக்கு நேர்கின்ற கதி பற்றி எவ்வித அக்கறையும் இன்றி இருந்து, தாம் வெறும் கூலிக் கும்பல்களே என்பதை ஆயிரத்தோராவது முறையாக மீண்டும் நிரூபித்திருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டுப் பகுதியில் வாழுகின்ற மக்களையும் கொன்று குவித்து, தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற மக்களையும் கொலை செய்து சிங்கள அரசு வெறியாட்டம் போடுகின்றது. சர்வதேசமும் கைவிட்டு விட்ட நிலையில், இந்த மக்களின் எதிர்காலம் போரில் ஏற்படப் போகும் மாற்றங்களில் மட்டும்தான் தங்கியிருக்கின்றது.

ஆனால் வன்னியில் நடக்கின்ற போர் ஒரு மர்மமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. தற்பொழுது நடந்து வருகின்ற சண்டைகள் பற்றி விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் கனத்த மௌனம் சாதிக்கின்றன. இதுவரை நடந்திராத அளவிற்கு மிக உக்கிரமான மோதல்கள் தற்பொழுது நடந்து வருகின்ற போதிலும் இது பற்றிய செய்திகள் பெரியளவில் வெளியில் வருவது இல்லை.

எதிரிப் படைகளை எதிர்த்து பல அதிரடித் தாக்குதல்களை நடத்தி வரும் விடுதலைப் புலிகள் கடந்த வெள்ளியன்று (20.02.2009) கொழும்பு மீது வான் தாக்குதல்களையும் நடத்தியிருந்தார்கள். விடுதலைப் புலிகளின் அனைத்து ஓடுதளங்களையும் கைப்பற்றி விட்டோம் என்று சிறிலங்கா அரசு சொல்லிக் கொண்டிருக்க, வான்புலிகளின் விமானங்கள் கொழும்பு வரை பறந்து சென்று வான்கரும்புலித் தாக்குதலை நடத்தியிருக்கின்றன.

விடுதலைப் புலிகள் முதன்முறையாக வான்கரும்புலித் தாக்குதலை நடத்தியிருப்பது பற்றி பலவாறு கருத்துகள் கூறப்படுகின்றன. கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இழந்து வரும் விடுதலைப் புலிகள் தம்மிடம் உள்ள விமானங்களை கொண்டு செல்ல முடியாத நிலையில் கரும்புலித் தாக்குதலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது.

உண்மையில் கொழும்பில் வான்புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியதற்கு சில காரணங்கள் உண்டு. விடுதலைப் புலிகள் நினைத்திருந்தால் வன்னியில் நிலைகொண்டிருக்கும் படைகள் மீது வான் தாக்குதலை நடத்தியிருக்க முடியும். ஆனால் முந்நூறு கிலோமீட்டர்கள் பறந்து வந்து கொழும்பில் தாக்குதல் நடத்தியதன் மூலம் ஆயுதங்களை போட்டு விட்டு சரணடையும்படி அறிவுறுத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளுக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கின்றார்கள்.

“கொழும்பின் மீது தாக்குதல் நடத்துகின்ற பலம் எம்மிடம் உண்டு, தேவைப்பட்டால் கரும்புலித் தாக்குதல்களையும் நடத்துவோம், விடுதலைக்கான எமது போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்துவோம், நீங்கள் நினைப்பது போன்று நாம் ஒன்றும் பலம் இழந்து விடவில்லை” என்கின்ற செய்திகளை விடுதலைப் புலிகள் சர்வதேச நாடுகளுக்கு சொல்லியிருக்கின்றார்கள்.

மக்களின் அழிவுகளை நிறுத்துவதற்காகவே விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்திற்கு தயாராக இருக்கின்றார்கள். இதை தவறாகப் புரிந்து கொண்டு “ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையுங்கள்” என்று இணைத் தலைமை நாடுகளும் இந்தியாவும் தொடர்ந்து சொல்லி வருவதற்கு விடுதலைப் புலிகள் அளித்துள்ள பதிலாகவே வான்கரும்புலிகளின் தாக்குதல் இருக்கின்றது.

இதற்கு இடையில் புதுக்குடியிருப்பை கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. ஆயினும் புதுக்குடியிருப்பு கைப்பற்றப்பட்டது பற்றி முன்னுக்குப்பின் முரணான தகவல்களையே அது தெரிவித்து வருகின்றது. உண்மையில் புதுக்குடியிருப்புக் கைப்பற்றப்பட்டதா என்பது சந்தேகத்திற்கு இடமானதாகவே இருக்கின்றது.

அதே வேளை புதுக்குடியிருப்பை பல திசைகளில் நெருங்கியுள்ள எதிரியின் படைகள் அப் பகுதியை கைப்பற்றுவதற்கு வாய்ப்புகள் நிறையவே உள்ளன. இன்று இல்லாது விட்டாலும் வரும் நாட்களில் புதுக்குடியிருப்பு எதிரியின் கைகளில் விழுந்து விடக் கூடும். ஆனால் புதுக்குடியிருப்பைக் கைப்பற்றிய பின்பும் சண்டைகள் தொடரத்தான் போகின்றன.

மற்றைய பகுதிகளை விட புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகள் நீண்ட காலமாக முறியடிப்புச் சமரில் ஈடுபட்டு வருகின்றார்கள். எதிர்பார்த்த நாட்களுக்குள் எதிரியால் புதுக்குடியிருப்பைக் கைப்பற்ற முடியவில்லை. எதிர்காலத்தில் தாம் நடத்தப் போகும் சண்டைகளுக்கான தயாரிப்பு வேலைகள் நிறைவு பெறும் வரை புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகள் சண்டைகளை நீடித்துச் செல்வதாக இருக்கக் கூடும்.

வன்னியில் தற்பொழுது நடைபெறும் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறப் போகும் சண்டைகளை கட்டியிம் கூறி நிற்கின்றன. ஏற்கனவே கைப்பற்றப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசால் சொல்லப்பட்ட இடங்களில் சண்டைகள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. இதனுடைய அர்த்தம் விடுதலைப் புலிகள் மீண்டும் அப் பகுதிகளை கைப்பற்றி விட்டார்கள் என்பது அன்று.

விடுதலைப் புலிகளின் அணிகள் வன்னியின் பல பகுதிகளுக்குள் ஊடுருவி விட்டன. கடந்த வெள்ளியன்று ஓமந்தையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக சில செய்திகள் கூறுகின்றன. அதற்கு முன்பும் ஏ9 வீதியில் ரோந்து சென்ற சிறிலங்காப் படையணி மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி எதிரிக்கு இழப்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள். அலம்பில், முள்ளியவளை, ஒட்டுசுட்டான் போன்ற இடங்களிலும் விடுதலைப் புலிகளின் படையணிகள் ஊடுருவித் தாக்குதலை நடத்தியுள்ளன.

இவைகள் அனைத்தும் சென்ற ஆண்டு சிறிலங்காப் படைகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள். பின்தளப் பிரதேசங்களாக இருப்பவை. இப் பகுதிகளில் சண்டைகள் நடப்பது சிறிலங்கா அரசுக்கு பெரும் பாதகங்களைக் கொடுக்கும்.

வன்னி என்பது மிகப் பரந்த பிரதேசம். யாழ் குடாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாற்பதினாயிரம் படைகள் தேவைப்படுகின்றன. யாழ் குடாவை விட வன்னிப் பெரு நிலப்பரப்பு பத்து மடங்கு பெரியது. ஆனால் நான்கு இலட்சம் படையினரை நிறுத்தினால் கூட வன்னியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. காடுகளும், ஆறுகளும் நிறைந்துள்ள வன்னியில் இந்த எண்ணிக்கை போதாது.

இன்றைக்கு மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் சிறிலங்காப் படையினர் இல்லை. வன்னி மண்ணின் பல பகுதிகள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத பகுதிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. இப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் படையணிகள் ஊடுருவி நிலைகொள்ளும் சாத்தியங்கள் அதிகரித்துச் செல்கின்றன.

இதனாற்தான் விடுதலைப் புலிகளை அழித்து ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து சிறிலங்காப் படைகள் சண்டையைச செய்கின்றன. இதை சரியான முறையில் எதிர்கொள்ளும் விடுதலைப் புலிகளும் தமது சண்டையிடும் பலத்தை தக்கவைத்தபடி பின்னகர்ந்து சென்று, இன்றைக்கு பல பகுதிகளில் ஊடுருவத் தொடங்கியுள்ளார்கள். ஏற்கனவே பல புதிய பகுதிகளிலும் ஊடுருவி நிலைகொண்டும் உள்ளார்கள்.

இதனுடைய விளைவுகள் குறிப்பிட்ட காலங்களின் பின்னரே தெரிய வரும். அதுவரை நிலங்களை கைப்பற்றியது பற்றி சிறிலங்கா அரசு சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். தமிழீழப் போராட்டத்தை அடக்கி விட்டதாகக் கனவு காணலாம். ஆனால் புதிய வடிவம் எடுத்திருக்கும் போர் ஏற்படுத்தப் போகும் விளைவுகளை மகிந்த அரசு உணர்கின்ற பொழுது காலம் கடந்து போயிருக்கும்.

- வி.சபேசன் (26.02.09)


Comments