உலகத் தலைவர்களுக்கான கோரிக்கை படிவங்களில் கையெழுத்திடுங்கள்: வைகோ மன்றாட்ட வேண்டுகோள்

ஈழத் தமிழ் மக்களைக் காக்கவும் சிங்கள அரசு திட்டமிட்டுள்ள பேரழிவுத் தாக்குதலைத் தடுக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க, ரஷ்ய அரச தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கைப் படிவங்களில் கையெழுத்திடுமாறு தமிழ்நாட்டு மக்களிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மன்றாட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கைத் தீவில், சிங்கள அரசு ஏவிவிட்டுள்ள முப்படைத் தாக்குதலால், குறிப்பாக, அனைத்துலக நாடுகள் தடைவிதித்துள்ள கொத்துக்குண்டுகள் - நெருப்பு மண்டலம் ஏற்படுத்தும் குண்டுகள் - இவற்றை வீசும் வான் வழித் தாக்குதலால், ஐந்து லட்சம் ஈழத் தமிழ் மக்களும் பேரழிவுக்கு ஆளாகும் பயங்கரமான அபாயம் சூழ்ந்திருக்கிற நிலையில், விடுதலைப் புலிகளை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சிறிலங்கா அரசுடன் கூட்டுச் சதித்திட்டம் வகுத்துள்ள இந்திய அரசு இதனால் படுகொலைக்குள்ளாகும் லட்சக்கணக்கான தமிழ் மக்களைப் பற்றி துளியளவும் கவலை கொள்ளாது தமிழக மக்களையும், இந்திய மக்களையும், உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்காக திட்டமிட்டு சில அப்பட்டமான பொய்களைத் துணிந்து சொல்கிறது.

அதனால்தான் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பெப்ரவரி 18 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், எழுபதாயிரம் பேர்தான் முல்லைத்தீவில் இருப்பதாக ராஜபக்ச அறிவிக்கின்ற அதே எண்ணிக்கையை அறிவித்தார்.

பாதுகாப்பான இடங்களைத் தேடி தமிழர்கள் செல்லும்போது அவர்கள் புலிகளால் கொல்லப்படுவதாக, சிறிலங்கா அரச தலைவர் போடும் அக்கிரமமான பழியை பிரணாப் முகர்ஜியும், புலிகள் மீது குற்றச்சாட்டாகச் சொன்னார்.

முப்பத்தையாயிரம் தமிழர்கள் புலிகளின் பிடியில் இருந்து வெளியே வந்துவிட்டதாக சிறிலங்கா அரச தலைவர் கூறியதையே இவரும் தெரிவித்தார். உண்மையில் பத்தாயிரத்துக்கும் உட்பட்டவர்களே அரசாங்கம் முதலில் சொன்னதை நம்பி, பாதுகாப்பான இடம் எனக் கருதி வந்தபோது 2,000-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனை உள்ளிட்ட பாதுகாப்பு வலயப் பகுதிகளில் சிங்கள இராணுவத் தாக்குதலால் கொல்லப்பட்டனர். 3,000-க்கும் அதிகமானோர் படுகாயமுற்றனர்.

மருத்துவமனைகள் மீது, குண்டு வீசியதை அமெரிக்க அரசும், இங்கிலாந்து அரசும் கண்டித்தன. ஆனால், இந்திய அரசு எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. அடுத்த ஒரு சில நாட்களுக்குள் பேரழிவுக் குண்டுகளை முல்லைத்தீவு எங்கும் வான் வழியாக வீசியும் தரை வழி எறிகணை, ஏவுகணை, பீரங்கித் தாக்குதல் நடத்தியும் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளது.

ஜெர்மனியிலும், ருவண்டாவிலும் நடத்தப்பட்ட பேரழிவைவிட இது கொடூரமானதாக இருக்கும். லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் கொடூரத்தை மறைப்பதற்காகவே முல்லைத்தீவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை சிங்கள அரசும், இந்திய அரசும் மிகக் குறைத்து அறிவிக்கின்றன.

தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவும், பெரும் பழியில் இருந்து தப்பிப்பதற்காகவும் ஈழத் தமிழர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களில் சேகரிக்கச் சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளதாக மோசடியான அறிவிப்பை காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.

இந்தத் துரோக நாடகத்தில் பங்குதாரராக இருக்கும் கலைஞர் கருணாநிதி தன் பங்குக்கு மருந்து அனுப்பத் தயார் என்றும் மருத்துவர்களையும் அனுப்பத் தயார் என்றும் அறிவித்துள்ளார்.

மத்திய அரசினுடைய துரோகத்தின் உச்சகட்டமாக நேற்று செவ்வாய்க்கிழமை வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத ஒரு கோயபல்ஸ் பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார். அதில், "போர்ப் பகுதியில் உள்ள அப்பாவித் தமிழர்களை அனைத்துலக பார்வையாளர்கள் முன்னிலையில் ஒப்படைக்கத் தயார் என விடுதலைப் புலிகள் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் ஆகவே, அந்த மக்களை வெளியேற்றுவதற்கு தேவையான கப்பல் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கத் தயாராக உள்ளது" என்றும் கூறியுள்ளார்.

இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?

உண்மை நிலை என்ன?

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரத்தில் ஏமாந்துபோன ஒரு சில நாடுகளும் இணைத் தலைமை நாடுகளும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியதற்கு விடுதலைப் புலிகள் மிகக் தெளிவான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும், அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இணைத் தலைமை நாடுகளுக்கும் அனுப்பி உள்ளனர்.

அதில், "சிங்கள அரசின் பயங்கரவாதத்தால் கொடூரமாக நசுக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் காக்கவே ஆயுதம் ஏந்தி உள்ளனர் என்றும் அத் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் தரும் அரசியல் தீர்வு ஏற்படும்வரை ஆயுதங்களைக் கீழே போட இயலாது என்றும் அனைத்துலக நாடுகள் சிறிலங்கா அரசு நடத்தும் இனப்படுகொலையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்" தெரிவித்து உள்ளனர்.

"தமிழ் மக்களை சிறிலங்கா அரசு திறந்து வைத்திருக்கும் நலன்புரி நிலையங்கள் எனும் இராணுவ வதை முகாம்களுக்கு கொண்டு போகும்படி கூறுவது ஒரு சுத்தமான தமிழ் இன அழிப்பு ஊக்குவிப்பு முயற்சியாகும். எனவே, வன்னிக்கு, முல்லைத்தீவுக்கு நடுநிலையான உலக ஊடகவியலாளர்களை, மனித உரிமை அலுவலர்களை, கண்காணிப்பாளர்களை அனுப்பி நிலையை நேரில் கண்டு போரை நிறுத்தச் செய்வதற்கும், உணவும், மருந்தும் கிடைக்கச் செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே உடனடித் தேவையான மனிதாபிமானப் பணியாகும்" என்றும் புலிகள் தெரிவித்து உள்ளனர்.

மீண்டும் அமெரிக்க அரசு போரை நிறுத்தச் சொல்கிறது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அரசுகளும் அதனையே வலியுறுத்துகின்றன. ஆனால், உண்மைகளை முழுக்க முழுக்க மறைத்து விட்டு பொய்த்தகவல்களை நாடாளுமன்றத்தில் சொல்லி, தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றி விட்டு சிறிலங்கா அரசு நடத்தும் தமிழ் இன அழிப்புப் போருக்கு ஏற்கனவே ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து உதவிய இந்திய அரசு இப்போது நேரடியாகவே நமது கடற்படையையும், வான் படையையும் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.

இந்த அபாயத்தைத் தடுக்க தமிழ் மக்களே! உங்களை மன்றாடி வேண்டுகிறேன். ஐக்கிய நாடுகள் சபையும் குறிப்பாக அதன் பாதுகாப்புச் சபையும் தலையிட்டு ஈழத் தமிழ் மக்களைக் காக்கவும் சிங்கள அரசு திட்டமிட்டுள்ள பேரழிவுத் தாக்குதலைத் தடுக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க, ரஷ்ய அரச தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கோரிக்கைப் படிவங்களில் கையெழுத்திடுங்கள்.

இரண்டு கோடி மக்களுக்கும் குறையாத எண்ணிக்கையில் கையெழுத்துக்களைப் பெற்று அவர்களுக்கு அனுப்பி வைக்க இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு உதவுங்கள். பள்ளியில், கல்லூரியில் பயிலும் மாணவர்களே! கையெழுத்திடுங்கள். ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களே! விவசாயப் பெரு மக்களே! அரசு ஊழியர்களே!

அனைத்துத் துறையையும் சார்ந்த பெரியோர்களே! தாய்மார்களே! தாமதமின்றி செயற்படுங்கள்! கையெழுத்திடுங்கள் தாள்பணிந்து வேண்டுகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயவு செய்து உங்கள் குரலை பதியுங்கள்


Comments