அரசின் இராணுவ வெற்றியில் நம்பிக்கை கொண்டுள்ள உலகு

இலங்கையில் கட்டவிழும் மிக மோசமான மனிதப் பேரவல நிலையை ஒட்டி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் மேரி றொபின்ஸன் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ள அதேசமயம், வேறு சில விடயங்களையும் சுட்டிக்காட்டிருக்கின்றார்.
இலங்கையின் இன்றைய நிலைமை, சூடானின் டார்பூர் மற்றும் கொங்கோ நிலைவரங்களுடன் ஒப் பிடத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேசமயம், இலங்கையில் அளவுக்கு அதிகமாகப் படைப்பலம் யுத்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றமையை நாம் கேள்விக்கு உட்படுத்தாவிட்டால், வாழ்வின் உயிரின் பெறுமதியை நாங்கள் (உலகம்) குறைத்து மதிப் பிட்டதாக அது ஆகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், இலங்கை அரசு தான் வெற்றி பெறும் நிலை யில் உள்ளதாக உலக நாடுகளை நம்ப வைத்துள்ள தால், இலங்கையில் யுத்தநிறுத்தம் ஏற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் மனோ நிலையில் ஐ.நாவோ அதன் செயலாளர் நாயகமோ இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இது தான் இன்றைய இலங்கை நிலைமை. ஓர் இனத் தின் உரிமைக் கோரிக்கைக்கான ஆயுதப் புரட்சி அல்லது கிளர்ச்சி இராணுவ ரீதியிலேயே அடக்கப்படக்கூடிய வாய்ப்பும், சூழ்நிலையும் தென்படும்போது, அடங்கி விடப்போகும் அத்தரப்புக்கு, நியாயம் பற்றிப் பேசி, உயிர் வாயுவை ஏன் ஊட்டுவான் என்ற சிந்தனையே இப் போது சர்வதேச மட்டத்தில் மேலோங்கி நிற்கின்றது.

1994 1995 இலும், பின்னர் 2001 2006 இலும் இடம் பெற்ற இலங்கை அமைதிப் பேச்சுகளின் போது விடுதலைப் புலிகள் அமைப்பு, இலங்கை இராணுவத்துக்கு சவால் விடக்கூடிய இராணுவக் கட்டமைப்பைக் கொண்டு விளங்கியது.

அதனால், இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரையுமே ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பேச்சு மேசைக்கு வந்து, அமைதித்தீர்வு காணுங்கள் என்று சர்வதேசம் வற்புறுத்தியது.

ஆனால் இப்போதோ இராணுவ வலுச் சமநிலையில் மட்டுமல்லாமல், அதையடுத்து சர்வதேச நிலைப்பாட் டிலும் பெரிய மாற்றம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளர் றொபின்ஸன் குறிப்பிடுகின் றமை போல, விடுதலைப் புலிகளை நிரந்தரமாக அடக்கி இலங்கை அரசு வெற்றி கொண்டுவிடும் இராணுவ மேலாதிக்கத்தை நிரந்தரமாக நிலைநாட்டிவிடும் என்ற நம்பிக்கை இலங்கை அரசுத் தரப்பின் செய்தி மட் டங்கள் ஊடாக உலகுக்கு உணர்த்தப்பட்டு நம்பவைக் கப்பட்டுள்ளது.

அதனாலேயே முன்னர் இலங்கை அரசுக்கு சமனான இராணுவ வலுச்சமநிலையில் இருந்த புலிகளை ஆயுதங் களுக்கு ஓய்வு கொடுத்து அமைதித் தீர்வுக்கு முயலுமாறு வலியுறுத்திய சர்வதேசம், இப்போது ஆயுதங்களைக் கீழே வைத்துச் சரணடையுங்கள் என்று கோருகின்றது.

அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட சமயம் இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் அனு சரணைத் தரப்பாகச் செயற்பட்ட நோர்வே, இப்போது கடலில் வேகமாக ரோந்து சென்று கண்காணிக்கும் அதிவேகப் படகுகள் தொடர்பான தனது தொழில்நுட்பத் தகைமையை இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு உதவியாக வழங்கி, இலங்கை அரசுக்கு இராணுவ ஒத் தாசை செய்கின்றது.

அதேபோல இலங்கை அமைதி முயற்சிகளுக்கு உதவுவதற்காக அப்போது தனது விசேட சமாதானத் தூது வர் ஒருவரையே இலங்கைக்கென நியமித்து, சமாதான முயற்சிகளில் ஈடுபாடு காட்டிய ஜப்பான், இப்போது ஐ.நா.பாதுகாப்புக் கவுன்ஸிலின் சுழற்சி முறைத் தலை மைத்துவம் தன்னிடம் இருக்கும்போது அதை வைத்துக் கொண்டு புலிகளுக்கு எதிராக நெருப்பெடுக்கின்றது.

இப்படியெல்லாம் முன்னர், அமைதி முயற்சிக ளுக்கு ஒத்துழைக்கும் சமாதானப் பிரியர்களாகக் காட் டிக் கொண்ட நோர்வே, ஜப்பான் போன்ற தேசங்களே, புலிகளை ஆயுதங்களைக் கீழே வைத்து, சரணாகதி அடையுங்கள் என்று கூறும் அளவுக்குத் தடம் மாறியுள்ளன என்றால், அதற்குக் காரணம் ஐ.நாவின் மனித உரி மைகளுக்கான முன்னாள் ஆணையாளர் றொபின்ஸன் குறிப்பிடுகின்றமை போல இந்த யுத்தத்தில் இலங்கை அரசுப் படைகள் இறுதியாக வெற்றியீட்டிவிடும் என்ற நம் பிக்கை சர்வதேச தரப்புக்கு ஊட்டப்பட்டிருப்பதுதான்.

இலங்கையில் அமைதி முயற்சிகள் வெற்றிகரமாகத் தொடர வேண்டும் என்றால், இங்கு இலங்கை அரசுக் கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நிலவும் இராணுவ வலுச் சமநிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்று அமைதி முயற்சி சமயத்தில் அனு சரணைத் தரப்பாக இருந்துகொண்டு முன்னர் வற்புறுத்திய நோர்வே,

இப்போது ஆயுதங்களைக் கீழே வைத்து இலங்கை அரசுப் படைகளிடம் புலிகள் சரணாகதி அடை யவேண்டும் என்று கூறும் அளவுக்கு "குத்துக் கரணம்" அடித்திருப்பது தமிழர்களைப் பொறுத்தவரை பெரும் துரதிஷ்டமே.

அதற்குக் காரணம், தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலுவாகக் கருதப்பட்ட புலிகளின் இராணுவ வலி மையை விட இலங்கைப் படைகளின் வலிமை மிகவும் மேலோங்கிவிட்டது என்ற நம்பிக்கைதான்!


Comments