இல்லாமல் போகுமா இலங்கை?--ரசாயன ஆபத்து...

லகம் முழுக்க வியாபித்திருக்கும் தமிழர்கள் ஒருசேரக் குரல் கொடுத்தும் சிங்கள அரசின் யுத்த வெறியாட்டத்துக்கு முடிவு கட்ட யாரும் முன்வரவில்லை! ''இன்னும் பத்தே நாட்களில் புலிகளைப் பூண்டோடு அழித்து விடுவோம்!''

எனக் கொக்கரித்திருக்கும் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவ நடவடிக் கைகளை உக்கிரமாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார். இதுநாள் வரை பதிலடித் தாக்குதல்கள் நடத்தாமல் தற்காப்பு போர் முறைகளையே பின்பற்றி வரும் புலிகள் தரப்பு,

கல்மாடுகுள அணைத் தகர்ப்பைப் போல் அதிரடியாக ஏதோ நடத்தும் முடிவில் இருப்பதாகவும் இலங்கையில் இருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பொய்யாகிப் போன போர்நிறுத்தம்!

சிங்கள ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் தங்கி இருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய கொடூரம், உலக நாடுகளையே கோபப்பட வைத்தது. ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் கடுமையான

வார்த்தைகளால் இலங்கை அரசை புரட்டி யெடுக்க, உடனடியாக அவரை சந்தித்திருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரர் பசில் ராஜபக்ஷே. அந்த சந்திப்பின்போது, '2009-ம் வருடத்துக்குப் பிறகு ஒரு மாதத்தில் 439 தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். 1,732 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். 173 தமிழர்கள் காணாமல் போயிருக்கின்றனர்.

சராசரியாக நாளன்றுக்கு 14 தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்' என ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணைய செயலர் நவநீதம் பிள்ளை வழங்கிய சில புள்ளிவிவரங்களை விளக்கி, இலங்கையில் மனித உரிமைகள் சுத்தமாக மலிந்துவிட்டதாக பான் கீ மூன் ஆவேசப்பட்டிருக்கிறார். அதேநேரம், பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மில்லிபேன்டும், 'அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனும் இலங்கையின் நிலைமை கவலையளிப்பதாகவும், படுபாதகக் கொலைகளை ராணுவம் நிகழ்த்துவதாகவும்' கருத்து வெளியிட்டிருந்தார்.

இன்னொரு பக்கம், 'இதேநிலை தொடர்ந்தால், இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டியிருக்கும்' என ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியம் எச்சரித்தது.

இதற்கிடையில், தமிழக அரசும் போர்நிறுத்தம் குறித்து மத்திய அரசை வற்புறுத்தியது. 'முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று சிங்கள அரசிடம் பேசினோம். அதையடுத்து 48 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டது' என முதல்வருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதம் சட்டமன்றத்திலும் முதல்வரின் சார்பில் வாசிக்கப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் இலங்கையின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளே, 'நாங்கள் போர்நிறுத்தம் குறித்து எந்தக் கருத்தும் சொல்லவில்லை. தமிழர்கள் வெளியேறுவதற்கான அவகாசத்தைத்தான் கொடுத் தோம்' எனப் போட்டுடைத் தார்கள்.

இதுகுறித்துப் பேசும் இலங்கையின் தமிழ் கூட்டமைப்பு எம்.பி-க்கள், ''ராஜபக்ஷே இந்திய அரசை ஏமாற்றினாரா... இல்லை இந்திய அரசு தமிழக முதல்வரை ஏமாற்றியதா என்று தெரியவில்லை. போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவித்துவிட்ட சிங்கள ராணுவம், மக்கள் வெளியேறக் கெடு கொடுத்த காலத்திலும், தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக்கொண்டுதான் இருந்தது. புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, சுதந்திரபுரம் ஏரியாக்களில் செல் தாக் குதலுக்கும் பீரங்கித் தாக்குதலுக்கும் ஆளாகி ஏராளமான அப்பாவித் தமிழர்கள் இறந்து போனார்கள். செஞ்சிலுவைச் சங்க ஊழியர்களின் மீதும், மருத்துவமனை மீதும் ஈவு இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டன!'' என்கிறார்கள்.

முல்லைத்தீவை ஒட்டிய காட்டுப்பகுதியில் கிட்டத் தட்ட இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் தஞ்ச மடைந்துள்ள நிலையில், 48 மணி நேர போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து நிறைய தமிழர்கள் அரசு பகுதிகளுக்குள் தஞ்ச மடைவார்கள் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், வெறும் 226 பேர் மட்டுமே வெளியேறி இருக்கிறார்கள். தமிழ் எம்.பி-யான மனோ கணேசன் நம்மிடம், ''அரசு 48 மணிநேர அவகாசத்தை அறிவித்ததுமே அரசுடன் கூட்டணியிலிருக்கும் ஜாதீக ஹெல உறுமய கட்சியினர், 'வன்னியிலிருந்து வெளியேறும் எல்லோருமே புலிகள்தான்' என்றொரு கருத்தை வெளியிட்டனர். வன்னியிலிருந்து போர் காயங்களுடன் வெளிவரும் மக்களை மருத்துவமனைகளில் அனுமதிப்பதைவிட ரகசிய முகாம்களில் வைத்து சித்ரவதைதான் செய்கிறார்கள்!'' என்கிறார்.

மீண்டும் 'செம்மணி' சித்ரவதைகள்!

இலங்கையின் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவின் திட்டப்படி உருவானதுதான் செம்மணி சித்ரவதைகள். இதுகுறித்துப் பேசும் கொழும்புவாழ் பத்திரிகையாளர்கள், ''பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு விடுதலைப்புலிகளுடன் நடந்த போரில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது சிங்களப்படை.

அதற்கு முக்கியக் காரணமாக இருந்த ஃபொன்சேகா, அப்பாவி தமிழ் இளைஞர்களையும் இளம் பெண்களையும் இலங்கையில் உள்ள செம்மணி என்கிற இடத்தில் அடைத்து வைத்துக் குரூரமாக சித்ரவதை செய்து, ஒரே இடத்தில் புதைக்கச் செய்தார். அப்படி புதைக்கப்பட்டதில், இறந்தவர்கள் மட்டுமல்லாது அரைகுறை உயிரில் அல்லாடியவர்களும் அடக்கம். ஃபொன்சேகாவின் இந்தக் கொடூரம் வெளியுலகுக்குத் தெரிந்தபோது, உலக நாடுகளின் கடும் கண்டனத்துக்கு இலங்கை ஆளானது.

ஆனாலும், செம்மணி சித்ரவதைகள் நிறுத்தப் படவில்லை.... சிங்கள ராணுவத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகின்றன. கடந்த இரு வாரங்களில் மட்டும் 25 இளைஞர்களும், 27 பெண்களும் தமிழர் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து காணாமல் போயிருக்கிறார்கள். இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்ற சிங்கள ராணுவம், பெண்கள் மீது பாலியல் சித்ரவதைகளை ஏவி விட்டிருக்கிறது.

இறந்த பெண்களின் மார்புகளை அறுத்த கொடூரங்கள்கூட நடந் திருக்கின்றன! இதற்கான படங்களை சிங்கள ராணுவமே தங்களின் சாதனைப் பெட்டகமாக அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறது. இத்தகைய கொடூரங்களுக்கு பயந்துதான் இலங்கை அரசு வற்புறுத்தி அழைத்தும், புலிகளின் கட்டுப்பாட்டைவிட்டுத் தமிழ் மக்கள் இடம் பெயரவில்லை...'' என்கிறார்கள்.

முல்லைத்தீவு நெருக்கடிகள்!

இரண்டு வருடங்களுக்கு முன்புவரை இலங்கையில் 3-ல் 1 பங்கு நிலப்பரப்பைத் தங்கள் வசம் வைத்திருந்த புலிகளிடம் இப்போது வெறும் 300 சதுர மைல்தான் உள்ளது. அதிலும் ஒரேயரு முக்கிய நகரம் புதுக்குடியிருப்பு மட்டுமே. இந்த நகரைக் கைப்பற்றி விட்டால், ஏ-35 சாலையையும் கைப்பற்றி, புலிகளுக்கான கடைசி விநியோகப் பாதையையும் மூடி விடலாமென ராணுவம் கருதுகிறது. முல்லைத்தீவை ராணுவம் கைப்பற்றும் வரைக்கும் தற்காப்பு போரையே மேற்கொண்டு வந்த புலிகள், தற்போதுதான் முன்னகர்வு தாக்குதல்களை முழுவீச்சில் ஆரம்பித்திருக்கின்றனர்.

கடந்த 1-ம் தேதி காலையில் புதுக்குடியிருப்புக்கு தாக்கு தல் நடத்த வந்த ராணுவத்தின் 59-வது படையணி மீது ஊடறுப்பு தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்றனர் புலிகள். இதில் 150-க்கும் அதிகமான படையினரை கொன்றதோடு மூன்று டாங்கிகளையும், ஏராளமான ஆயுதங்களையும் கைப்பற்றியிருக்கின்றனர் புலிகள்.

திருகோணமலையில் உள்ள கடற்படையின் கிழக்கு பிராந்திய அலுவலகமான டொக்யார்டிலிருந்துதான் புலிகள் மீதான கடற்தாக்குதல் களை நடத்தி வருகிறது ராணுவம். இதில் இயங்கி வந்த அதிவேகத் தாக்குதல் படையணிகளின் படகு ஒன்றை இரு தினங்களுக்கு முன் வீழ்த்தியிருக்கிறார்கள் கடற் கரும்புலிகள்.

இதில் லெப்டினென்ட் கமான்டர் என்.எஸ்.அபேசிங்க மற்றும் பெரேரா உள்ளிட்ட 24 பேர் இறந்து போயிருக்கிறார்கள். இதுதவிர, பி-434 டோரா படகு மற்றும் அரோ படகுகள் நான்கையும் துவம்சம் செய்திருக்கிறார்கள் புலிகள். இது எல்லாமே புலிகளின் லேட்டஸ்ட் தாக்குதல் வியூகத்தினால் பெறப்பட்ட வெற்றிகள் என்கிறார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்.

பின்வாங்கிய ரகசியம்...

இன்றிருக்கும் போர்ச் சூழலில் புலிகளின் பின்வாங் கல்களை ஒருவிதமான போர் தந்திரம் என்கிறார்கள், புலிகளின் நடவடிக்கைகளை நன்கு அறிந்திருப்பவர்கள். பி.பி.சி-க்கு அளித்த பேட்டி யில் அரசியல் பொறுப்பாளர் நடேசனும், ''ஒருவித திட்டத்தோடுதான் நாங்கள் பின்வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள்...'' என்று சொல்லியிருக்கிறார்.

''இலங்கை ராணுவத்தில் மொத்தம் 60,000 பேர் இருக் கறதா சொல்றாங்க. ராணுவத்துல நடக்கும் ஒவ்வொரு மூவுமே எங்க உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் கவனத்துக்கு வந்துடும். அவரோட கணக்குப்படி பார்த்தா, தற்போது புதுக்குடியிருப்பு முற்றுகையில் கிட்டத்தட்ட 20,000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்காங்க.

திரிகோணமலையில் 4,000 பேர் இருக்காங்க. தலைநகர் கொழும்பில் 2,000 பேர் இருக்காங்க. இந்த 26,000 பேரை வச்சுக்கிட்டுதான் எல்லா பகுதியையும் அவங்க பாதுகாத்து ஆகணும். இலங்கை ராணுவத்தைப் பொறுத்தவரைக்கும் முல்லைத் தீவு நகரம் வரைக்கும்தான் தெளிவா தெரியும்.

அதைத் தாண்டி அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் புதுக்குடியிருப்பு, விசுவமேடு சந்தி, முகமாலை போன்ற இடங்களைப் பற்றி சரியா தெரியாது. அதனாலதான் ஒவ்வொரு இடத்திலும் எங்களுக்கு உயிர்பலியோ, ஆயுதபலியோ ஏற்பட்டுவிடாதபடிக்கு ரொம்ப கவனமா பின் நகர்ந்துகிட்டே இருந்தோம்.

இப்ப பிப்ரவரி 4-க்குள் எப்படியும் எங்களை ஒழிச்சே தீரணுங்கிற வெறியில எல்லா பகுதி யிலிருக்கும் துருப்புகளையும் மொத்தமா புதுக் குடியிருப்பு நோக்கி குவிச்சிருக்காங்க. நாங்க எதிர் பார்த்ததும் இதுதான். இப்பதான் தங்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத காட்டுப் பகுதிக்குள் ராணுவம் வர ஆரம்பிச்சிருக்கு. இனி மேல்தான் அவர்களுக்கு இழப்புகள் காத்திருக்கு...'' என்கிறது புலிகளின் தரப்பு.

வியூகம் தயார்... வீரர்கள் தயார்..!

கடந்த 27-ம் தேதி பிலிப்பைன்ஸிலிருந்து ஒரு கப்பல் நிறைய ஆயுதங்களை இறக்கியதின் மூலமாக ஆயுதத் தேவையை புலிகள் கிட்டத்தட்ட சமாளித்து விட்டிருக்கிறார்கள். அதோடு, வருகிற 7-ம் தேதியும் அதிநவீன ஆயுதங்கள் அடங்கிய கப்பல் ஒன்றும் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு வரப் போகிறதாம். ''புலிகள்கிட்ட ஆள்பலம் குறைச்சுருக்கறது உண்மைதான். ஆனால், எந்த சூழ்நிலையையும் விரைவா சமாளிக்கக்கூடியவங்க புலிகள். அவர்களோடு காட்டுப் பகுதியில் தஞ்சமடைந்திருந்த மக்களில் 4,000 பேரைத் தேர்ந்தெடுத்து, அவசியமான சில ஆயுதப் பயிற்சிகளை மட்டும் அளித்து, மிக குறுகிய காலத்தில் போராளிகளாக மாற்றியிருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 1,000 பேர் தற்கொலைப்படையாக மாறியிருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து தற்போது புலிகளிடம் 17,000 பேர் இருக்கிறார்கள். இந்த மொத்த வலிமையையும் ஒரே புள்ளியில் குவித்து வைத்திருக்கிறார் புலிகள் இயக்கத் தலைவர். இந்த நிலைமையில்தான் கடந்த வாரம் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடல்புலிகள் கமாண்டர் சூசை, கட்டளைத்தளபதி லெப்டினென்ட் கலோனல் பானு, சார்லஸ் ஆண்டனி படைப்பிரிவு தளபதி அமுதாப், ராதா படையணி தளபதி ரத்னம் மாஸ்டர், இம்ரான்பாண்டியன் படையணி தளபதி ஆண்டனி உள்ளிட்ட சில முக்கியமான தளபதிகளுடன் ஆலோசித்து ஒரு வியூகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மொத்த ரெஜிமென்டையும் நேரடியாகக் களத்துக்கு அனுப்பாமல், அதை குழுக்களாகப் பிரித்து அனுப்ப முடிவெடுத்திருக்கிறார்கள். இதன்படி ஒரு ரெஜிமென்டில் உள்ளவர்கள் 4 முதல் 8 பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள். இதில் பயிற்சி பெற்ற வீரர்கள் 4 பேருடன் புதிதாகச் சேர்க்கப்பட்ட 4 பேரும் இணைந்து செல்வார்கள். இந்தக் குழு முழுக்க முன்ன கர்வு படையணியாக செயல்பட்டு, ராணுவ பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தும். புலிகளின் மிக அனுபவம் வாய்ந்த வீரர்கள், தற்காப்புப் படையணியாக செயல்பட்டு ராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவார்கள். இந்த சமயத்தில் புலிகளின் டாங்கி அணிகளும், ஏவுகணை உந்து செலுத்துதல் பிரிவும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்.

இதுதவிர கரும்புலிகள் 2,000 பேர் தயாராக இருக் கிறார்கள். அதனால் தற்போதைய நிலவரப்படி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், இந்தியாவை நினைத்துதான் கலவரமாக இருக்கிறது. ஏற்கெனவே ராடார் உதவி, உளவு உதவிகளை செய்து வந்த இந்தியா, இப்போது நேரடியாக ஆள் பலத்தையும் கொடுத்து உதவுகிறது! கடந்த வாரம் உடையார்கட்டில் நடந்த சண்டையில் காயம்பட்ட வீரர்களில் 8 இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். திடீரென்று இந்தியா பெருமளவில் ஆள்பலம் கொடுத்து உதவினால் சமாளிப்பது கடினம்தான்...'' என்கிறார்கள் புலிகள் தரப்பில்.

இதற்கிடையில், உலகம் முழுவதிலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் மத்தியில் எழுச்சியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் புலிகள் இயக்கம் இறங்கி இருக்கிறது. இதற்காக அனைத்துலக உறவு களுக்கான பிரிவை புலிகள் அமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது. செல்வராசா பத்மநாபன் என்பவரை இந்த பிரிவுக்கான பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்கள். விரைவில் புலிகள் அமைப்பிலிருந்து அமெரிக்க ஹிலாரி கிளின்ட்டனை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அப்படியரு நிகழ்ச்சி நடக்கும்பட்சத்தில் புலிகள் சார்பில் ஹிலாரியை சந்திக்கும் குழுவில் செல்வராசா பத்மநாபன் முக்கியமான நபராக இருப்பாராம்.

இலங்கையே இல்லாமல் போகும்!

புலிகளிடம் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக பல காலமாகவே பேசப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து ரசாயன ஆயுதங்கள் வாங்கப்பட்டிருக்கும் என்றும் புலிகளே ரசாயன ஆயுதங்களை உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள்தான் என்றும் பல்வேறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் கேட்டபோது,

''போரில் புலிகள் பெரிதாகப் பின்ன டைகிற போதெல்லாம் ரசாயன ஆயுதங்கள் அவர்கள் வசம் இருப்பதாக செய்திகள் பரவுவது வழக்கம். 1990-ம் ஆண்டு நடந்த போரில், புலிகள் பலத்த அடி வாங்கினார்கள். அப்போது போர்களில் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்ட கொடூர பாதிப்புகளை உண்டாக்கும் ஆயுதங்கள் அவர்கள் வசம் இருப்பதாகச் செய்தி பரப்பி விடப் பட்டது.

ஆனால் புலிகள், போர் மரபுகளை மீறிய ஆயுதங்களை எந்தப் போரிலுமே பயன்படுத்தி யதில்லை. அவர்கள் ரசாயன ஆயுதங்களை உருவாக் கவோ பயன்படுத்தவோ மாட்டார்கள். ஆனால், தாங்களும் ஈழ மக்களும் பூண்டோடு அழிகிற கட்டா யம் வந்தால்... ரசாயன ஆயுதங்களால் மொத்த இலங்கையையும் அழித்துவிட்டுத்தான் அவர்கள் மடிவார்கள் எனப் பேச்சிருப்பதையும் மறுக்க முடியாது!'' என்கிறார்கள்.

- மு.தாமரைக்கண்ணன்,
இரா.சரவணன்



Comments