அடிபட்டவன் சும்மா விடுவானா?

rajiv1987hit1இலங்கை இராணுவத்தால் கொடூரமான‌ இன அழிப்பு யுத்தம் ஒரு பக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற‌ அதே வேளையில் இலங்கை அரசு அதிகாரிகளால் ஒரு பெரும் பொய் பரப்புரை யுத்தம் செய்யப்பட்டு வருகிறது. போதாத குறைக்கு இந்திய மத்திய, மாநில அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக மக்களை பல்வேறு வழிகளில் திசை திருப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றனர். ஆனால் மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் இலங்கை பிரச்சினையை பற்றித்தான் பேசி தர்க்கம் நடக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர்.களத்தில் நிகழும் போரை விட இந்தக் கருத்துப் போர் மிகவும் அபாயகரமானதாக உள்ளது.

மக்களின் மனதில் எழுகின்ற சந்தேகங்களை தீர்ப்பது அல்லது விளக்கிச் சொல்வது இப்போது மிகவும் அவசியமாகிறது.

புலிகள் ஏன் அப்பாவி மக்களை வெளியே விடாமல் மனித கேடயமாக வைத்துள்ளார்கள்?

ஒன்றை மட்டும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த இடத்தில் நாம் பெண்டாட்டி, பிள்ளைகளுடன் இருந்தால் புலிகளுடன் இருப்போமா? இல்லை இராணுவத்திடம் செல்வோமா? இன்றைக்கு வன்னி மக்களின் உறவினர்கள் உலகம் முழுவதும் 130 நாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் போராட்டங்களில் புலிக்கொடியையும், பிரபாகரனின் படத்தையும் வைத்துத்தான் போராட்டம் செய்கிறார்கள். மனித கேடயமாக பயன்படுத்தினால் உலகத்தமிழர்கள் ஒரே நாளில் புலிகளுக்கு எதிராக திரும்பி விடுவார்கள். எதிரியிடம் சிக்கி சின்னாபின்னாமாவதை காட்டிலும் உள்ளே இருப்பதே மேல் என்று மக்கள் நினைக்கிறார்கள். ராஜபுத்திரர்கள் தோல்வியை தழுவும் சூழ்நிலை வந்தால் பெண்கள் அனைவரும் தீயில் குதித்து உயிரை விடுவார்கள். ஆண்கள் பிறந்த மேனியுடன் போராடி வீரமரணம் அடைவார்கள். தமிழினமும் அவர்களை விட வீரத்தில் குறைந்தவர்கள் அல்ல. இந்தியாவும், உலக நாடுகளும்தான் அவர்களுக்கு உதவி செய்து காப்பாற்ற வேண்டும்.

புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டியதுதானே?

முன்னர் இராஜிவ்காந்தியை நம்பி புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு அமைதிப்படை அவர்களை தாக்கியழிக்க நினைத்தது. ஒரு ஜனநாயக தீர்வு முன் வைக்கப்பட்டு அது இரு தரப்பினராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட பின்புதான் ஆயுதங்களை ஒப்படைப்பார்கள். ஆயுதங்கள் ஒப்படைப்பு என்பது பேச்சுவார்த்தையின் முடிவில் நடப்பது. அதை இப்போதே செய் என்பது மூலம் கட்டாயமாக போரை திணிக்கிறார்கள்.

பாதுகாப்பு வலயத்திற்கு வரும் மக்கள் மீது புலிகள் ஏன் தற்கொலை தாக்குதல் நடத்துகிறார்கள்?

ப‌டையின‌ர் வெளியிட்ட‌ காணொளியில் த‌ற்கொலை குண்டுதாரியின் உட‌லோ, ப‌டையின‌ரின் உட‌லோ காண்பிக்க‌ப்ப‌ட‌வில்லை. இராணுவமே வேண்டுமென்று பெண்களையும், குழந்தைகளையும் குறிவைத்துக் கொன்று விட்டு பழி போடுகிறார்கள். எல்லா தற்கொலைத் தாக்குதல்களிலும் குண்டுதாரியின் உடலையும், படை வீரர்களின் உடலையும் காண்பிப்பவர்கள் இப்போது மட்டும் ஏன் காண்பிக்க வில்லை?

புலிகள் ஏன் சகோதர போராளிகளையும் கொலை செய்கிறார்கள்?

பிர‌பாக‌ர‌ன் 18 அகவையில் இய‌க்க‌த்தை ஆர‌ம்பித்தார். இன்று வ‌ரை 30 ஆண்டு கால‌மாக‌ ம‌க்க‌ளுக்காக‌தான் போராடுகிறார். அவ‌ர் நினைத்திருந்தால் ஏதாவ‌து ஒரு நாட்டுக்குச் சென்று சுக‌மாக‌ வாழ்ந்திருக்க‌லாம். பிற போராளிகள் இலங்கை இராணுவத்துடனும், இந்திய உளவு அமைப்பான ‘ரா’ வுடனும் கைகோர்த்துக் கொண்டு புலிப் போராளிகளை கடத்துவது , கொலை செய்வது, காட்டிக் கொடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டதால்தான் அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த சண்டையை வளர்த்து விட்டதே இந்திய ‘ரா’ நிறுவனம்தான். இலட்சக்கணக்கான மக்களையும், ஆயிரக்கணக்கான போராளிகளையும் இழந்து விட்டு சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் போது அதற்கு தடைக்கற்களாக இருந்து குழப்புபவர்களை ஒழிக்காமல் என்ன செய்வது?

இராஜிவ் காந்தியை கொன்றதால்தானே இவ்வளவு பிரச்சினையும் வந்தது?

ப‌ஞ்சு மெத்தையில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌ இராஜிவ் வ‌ர‌லாறு தெரியாம‌ல் ஜெய‌வ‌ர்த்த‌னாவின் பேச்சையும், கூட‌ இருந்த‌ அதி மேதாவிக‌ளின் பேச்சையும் ந‌ம்பி ஈழப் பிரச்சினையில் காலை விட்ட‌தால்தான் இவ்வளவு பிரச்சினையும். இந்தியாவில் இராஜிவ் காந்தி ஹீரோ என்றால், இலங்கையில் அவர் வில்லனாகவே நடந்து கொண்டார். சிங்கள வீரன் அடித்த சரியாக பட்டிருந்தால் அவருடைய உயிர் அப்போதே போயிருக்கும்? சிங்களர், தமிழர் இருவருக்குமே அவருடைய நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. இரு தரப்பினரும் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமரசம் செய்து வைத்தால் அது நியாயம்.

அதை விடுத்து ஒரு பக்கம் சாய்ந்து இன்னொருவரை அடித்தால் அடிபட்டவன் சும்மா விடுவானா? சமாதானம் செய்து வைக்காமல் இராஜிவ்காந்தி இலங்கைக்கு ஒரு இலட்சம் பேர் கொண்ட படையை அனுப்பினார். அவர்கள் அங்கு 10,000 தமிழர்களை கொன்று குவித்தார்கள். பெண்களின் மார்புகளை அறுத்தெறிந்து, பாலியல் வெறியாட்டம் ஆடினார்கள். புலிகளிடம் அடைந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொன்றுக் குவித்தார்கள். பெண்களும் குழந்தைகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட போது இராஜிவ் காந்தி தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று தனது படைகளுக்கு உத்தரவிட வேண்டியதுதானே? படை வீரர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் எதற்குப் படை நடவடிக்கையை எடுக்க வேண்டும்?

உண்ணாநிலைப்போராட்டம் இருந்த‌ திலீபன் 5 சாதாரண கோரிக்கைகளைத்தான் முன் வைத்து அறப்போராட்டம் நடத்தினார். தனி ஈழ கோரிக்கை கூட அவர் அப்போது வலியுறுத்தவில்லை. சிங்களர்களை தமிழர் பகுதியில் குடியேற்ற வேண்டாம், தமிழர்களை சிங்கள காவலர்கள் துன்புறுத்தக் கூடாது என்பனவற்றைத்தான் கேட்டார். இந்திய அரசு நினைத்திருந்தால் ஒரு நொடிப்பொழுதில் அவற்றை நிறைவேற்றி திலீபனை காப்பாற்றி
இருக்க‌லாம். கண்டு கொள்ளாமல் இருந்து அவரை சாகடித்தார்கள். சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த புலித்தளபதிகளை இலங்கை அரசு பிடித்து வைத்த போது காப்பாற்றச் சொல்லி இந்திய அரசை கெஞ்சிய போதும் காப்பாற்ற முன்வரவில்லை. 12 தளபதிகள் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்தார்கள். அமைதிப்படை இலங்கையில் தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை ஈழத்தமிழர்கள் என்றைக்கும் மறக்க மாட்டர்கள்.

இலங்கையின் இறையாண்மையில் இந்தியா எப்படி தலையிட முடியும்?

கிழக்கு பாகிஸ்தானை பிரித்து பங்களாதேஷ் என்ற தனி நாட்டை இந்தியா உருவாக்கவில்லையா? திபெத் மக்களுக்கு மற்றும் தலாய்லாமாவுக்கு அடைக்கலம் தரவில்லையா? அவையெல்லாம் முடியும் போது ஈழம் உருவாக தலையிட முடியாதா? இலங்கை அரசு புலிகளை பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றும் சொல்கிறதே? அதில் எப்படி இந்தியா தலையிட முடியும்? காஸா படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் இந்திய அரசு இலங்கையை இதுவரை கண்டிக்கவில்லை. ஏனென்றால் இந்திய அரசுதான் போரை நடத்துகிறது.

தனி ஈழம் உருவானால் தமிழக மக்களும் ஈழத்துடன் சேர விரும்ப மாட்டார்களா?

மத்திய அரசு தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஏன் தமிழக மக்கள் வேறு பக்கம் போகிறார்கள். ஆயிரத்தெட்டு போராட்டங்கள், தீக்குளிப்புகள் செய்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புலிகளை பிடிக்கவில்லையென்றால் அப்பாவி மக்களையாவது காப்பாற்றலாமே? அதுவும் இல்லையென்றால் தமிழக மீனவர்களை தினமும் சுடுகிறதே இலங்கை கடற்படை? அதையாவது தட்டிக் கேட்கலாமே? ஒரு சுண்டைக்காய் நாட்டிற்கு ஒரு வல்லரசின் குடிமக்களை சுடும் அதிகாரத்தை மத்திய அரசுதானே வழங்கி இருக்கிறது. இந்தியாவில் இருந்து கொண்டு இவ்வளவு கத்தியும் ஒரு பயனும் இல்லையென்றால் மக்கள் அவ்வாறுதான் முடிவெடுப்பார்கள்? தமிழர்களின் உயிரை வட இந்தியர்கள் மதிப்பதே இல்லை. செத்த பிறகு கொடுத்த நட்ட ஈடு பணத்தை முன்னமே கொடுத்திருந்தால் ஆப்கனில் கடத்தப்பட்ட தமிழன் சைமன் உயிரை காப்பாற்றி இருக்கலாமல்லவா……..


Comments