கடைசி வாய்ப்பும் பறிபோனது

வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு மிக மோசமான கட்டத்திற்குள் இருக்கின்றது ஈழத் தமிழர்களின் வாழ்வு. வாழ்விற்கும் சாவிற்கும் இடையே ஒரு மரணப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள். அடுத்த நிமிடம் உயிருடன் இருப்போமா, இல்லையா என்று தெரியாத அளவிற்கு தினமும் மரணத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அந்த மக்கள்.

கணவனை, மனைவியை, பிள்ளைகளை, தந்தையை, தாயை, குடும்பத்தையே இழந்து பெரும் அழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் அந்த மக்கள்.இந்த மரணப் பொறிக்குள் இருந்து தங்களை விடுவிப்பதற்கு அவர்கள் எழுப்பும் அவலக் குரல்கள் உலகத்திற்கு கேட்க முடியாதபடிக்கு அனைத்துவித தடைகளையும் சிறீலங்கா பிரயோகித்திருக்கின்றது என்றால், எழுகின்ற சிறு முனகலும் தங்கள் காதுகளுக்குள் விழுந்துவிடக் கூடாது என்பதுபோல, உலகமும் காதை இறுக்க மூடி மொளனமாகியிருக்கின்றது. காரணம், இந்தக் கொலைக் கரத்திற்குப் பின்னே, வலுவான வல்லரசுக் கரம் இருப்பதுதான். இந்த மரணக் குழிக்குள் இருந்து அந்த மக்களை மீட்டெடுப்பதற்காக விடுதலைப் புலிகள் தங்கள் உயிரை அர்ப்பணித்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

உலகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தமிழினமும் குறிப்பாக தமிழக மக்களும் அந்த மக்களின் அவலத்தை உலகத்தின் காதுகளில் ஓங்கி ஒலிப்பதற்காக பேரெழுச்சி கொண்டிருக்கின்றார்கள். அந்த மக்களை அழிவில் இருந்து மீட்டெடுப்பதற்காக தங்கள் உயிர்களையே தீயாக எரியவிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடல் கடந்து போராடவும் புறப்படுகின்றார்கள் அந்த உணர்வுள்ள தமிழ் மக்கள். வரலாற்றில் என்றும் இல்லாத எழுச்சியை தமிழகம் இன்று அடைந்திருக்கின்றது. ஆனால், அந்த எழுச்சியை தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு பலம் பொருந்திய கரங்கள் முன்னின்று செயற்படுகின்றன.அந்தக் கரங்களில் ஒன்றாக தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புமிக்க தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் கரமும் இருப்பதுதான் உலகத் தமிழினத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஒன்றுதிரட்டி ஈழத் தமிழர்களை காக்கவேண்டிய பொறுப்புள்ள மனிதர், பலத்தைப் பிரயோகிக்கிக் கூடிய அரசியல் பலமுள்ள மனிதர் பதவிகளுக்காக என்னென்னமோ நாடகங்களை ஆடுகின்றார். தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்ததுபோல, தான் ஈழத் தமிழர்களுக்காக என்ன செய்தேன் என்று இப்போது கணக்குப் பார்த்துக்கொண்டிருக்கின்றார் கலைஞர்.

ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல, ஈழத் தமிழினம் பற்றி எரிகின்றது எனும்போது ஆட்சி பறிபோய்விடும் என்று ஒப்பாரி வைக்கின்றார். ஆட்சி பறிபோனால் தமிழ் மக்களுக்கு எப்படி உதவமுடியுமென்று பதில் கேள்வி எழுப்புகின்றார். ஆட்சியில் இருந்துகொண்டு எதுவுமே செய்ய முடியாத போது, அந்த ஆட்சி இல்லாமல் இருந்து எதுவுமே செய்யாமல் இருப்பது பரவாயில்லை என்பது படித்த, அனுபவமுள்ள அவருக்கும் புரியவில்லை. அத்தோடு, முழுப் பூசணியை எவ்வாறு சோற்றினால் மறைக்க முடியாதோ அதேபோல்தான் இன்றைய ஈழத் தமிழினத்தின் அழிவிற்குக் காரணம் மத்தியில் உள்ள கொங்கிரஸ் அரசுதான் என்பதும் இனி மூடிமறைக்க முடியாத உண்மை. அந்தக் கொங்கிரஸ் அரசிற்கு முண்டுகொடுத்து நின்று, இந்த தமிழின அழிவிற்கு ஒரு வகையில் கலைஞரும் துணை போய்விட்டார்.

இந்த வரலாற்றுப் பழியில் இருந்து கலைஞர் அவர்கள் இனி தப்பித்துக்கொள்ளவே முடியாது. தனது கடைசி ஆட்சியில் கலைஞருக்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பு, தமிழ் மக்களைக் பாதுகாக்கும் ஒரு நல்வாய்ப்பு. பதவிக்காக அதனைத் தட்டிக் கழித்து, இன்று உலகத் தலைவராக மட்டுமில்லை, தனது நாட்டிலுள்ள பெரும்பான்மைத் தமிழ் மக்களாலும் விரும்பப்படாத ஒரு தலைவராகி விட்டார் என்பதுதான் வேதனை கலந்த உண்மை.காலம் கடந்த ஞானோதயம், கண்கெட்ட பிறகு செய்யும் சூரிய நமஸ்கரத்திற்கு சமமானதுநன்றி:

- ஈழமுரசு ஆசிரியர் தலைப்பு (13.02.2009)


Comments