செஞ்சிலுவைச் சங்கத்தை வன்னியில் இருந்து வெளியேற்ற காரணம் தேடும் மகிந்த அரசு

வன்னியில் நிலை கொண்டிருந்த தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேற்றி விட்டு, தனது இன அழிப்புத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்திய சிங்களப் படைகள் அங்கே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினை மாத்திரம் தங்கியிருக்க அனுமதித்திருந்தன. உலக அபிப்பிராயம் தனக்கு எதிராக உருவாவதைத் தடுக்கவும், போரில் கொல்லப்படும் படையினரின் உடலங்களைப் பெற்றுக் கொள்ளவும், சிறைப் பிடிக்கப்படும் படையினரை விடுவித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுமே செஞ்சிலுவைச் சங்கம் வன்னியில் தங்கியிருப்பதற்கு அரசு அனுமதித்தது.

இதிலே இன்னுமொரு அனுகூலத்தையும் அரசு எதிர்பார்த்தது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவானது, மோதல் நடைபெறுகின்ற பிராந்தியத்தில் பணியாற்றும் போது மோதலில் ஈடுபடுகின்ற தரப்புக்களின் அனுமதியுடன் மட்டுமே செயற்படுவதை வழமையாகக் கொண்டுள்ளன. எந்தவொரு தரப்பாவது பாதுகாப்பு உத்தரவாதத்தினை வழங்க மறுத்தால், செஞ்சிலுவைக் குழு அங்கிருந்து வெளியேறிவிடும்.

மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகின்றதோ, அதேயளவு முக்கியத்துவத்தைத் தமது பணியாளர்களுக்கும் தந்து வருகின்றது இந்த அமைப்பு.

இதைத்தவிர நடுநிலை இடையீட்டாளராகப் பணியாற்றி வரும் இந்த அமைப்பு, தனது அராஜகச் செயற்பாடுகளை வெளிப்படையாகத் தெரிவிக்காது என்ற எதிர்பார்ப்பும் சிங்கள அரசுக்கு இருந்தது.

அரசு எதிர்பார்த்ததைப் போலவே சர்வதேச செஞ்சிலைக்குழு 'வாயை மூடிக் கொண்டு" மனிதாபிமானப் பணிகளை மாத்திரம் செய்து கொண்டிருந்தது. அதேநேரம், அங்கே நிலை கொண்டுள்ள அதிகாரிகள், நடப்பு நிகழ்வுகள் பற்றிய அறிக்கைகளை தலைமையகத்துக்கு உடனுக்குடன் அனுப்பி வைத்தார்கள். இந்த அறிக்கைகள் உரிய இடங்களுக்குச் சென்றடைந்த போது அவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இதனையடுத்தே செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தனது மௌனத்தைக் கலைத்தது. முதலாவது அறிக்கையே சிங்கள அரசை ஆட்டங்காணச் செய்து விட்டது. இத்தனைக்கும் அந்த அறிக்கை மிகக் கவனமான வார்த்தைகளைக் கொண்டு, எவரையும் சாடாமல், யதார்த்த நிலையை விளக்குவதாகவே அமைந்திருந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்து வந்த அறிக்கைகளாலும், அதனையடுத்து உறங்கு நிலையில் இருந்த சர்வதேச ஊடகங்கள் கண் முழித்துக் கொண்டதாலும் வெலவெலத்துப் போன சிங்கள அரசுத் தலைமை தனது வழக்கமான பாணியில் 'செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவில் புலிகள் ஊடுருவியிருப்பதான" தனது மகத்தான கண்டுபிடிப்பை வெளியிட்டது.

அடுத்த கட்டமாக பல்வேறு நெருக்கடிகளை வழங்குவதனூடாக செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவை வன்னியை விட்டு வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கலாம்.

அந்த நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பித்து விட்டது போன்றே புலப்படுகின்றது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் கொழும்பு அலுவலகத்தின் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது. வன்னியில், எறிகணை வீச்சில் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவர் காயமடைந்திருக்கின்றார். போதாதற்கு மூன்று அதிகாரிகள் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் குற்றச்சாட்டும் முன்வைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், வன்னியில் பணிபுரியும் மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் வெளியேறினால் மருத்துவமனைகள் தரமாகவே செயலிழக்கும். இதனையடுத்து செஞ்சிலுவைக் குழு அங்கு தங்கியிருப்பதற்குத் தேவையான காரணம் வலுவற்றதாகி விடும். இதுவே சிங்கள அரசின் திட்டம்.

போகிற போக்கைப் பார்த்தால் இத்திட்டம் நிறைவேறக் கூடும் என்றே தெரிகின்றது. அவ்வாறான நிலைமை உருவான பிறகாவது செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தனது மௌனத்தை உண்மையாகவே கலைக்குமா? அழிவின் விழிம்பில் நிற்கும் ஒரு மக்கள் கூட்டத்தைக் காக்க முன்வருமா? அல்லது மேற்குலகைப் போன்று சிங்களத்தின் கொடூரத்தை மௌனமாக அங்கீகரிக்குமா? அடுத்த ஒரு சில வாரங்களுள் இந்தக் கேள்விக்கு நிச்சயம் விடை கிடைக்கும்.

Comments