தமிழ்நாட்டின் பல்வேறு அமைப்புக்ளைச் சேர்ந்தோரும் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவற்றில் பலரும் உண்ணாநிலை போராட்டத்தையே கையில் எடுத்துள்ளனர். அவற்றில் சிலவற்றின் செய்தித் தொகுப்பு:
ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி அருகே நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த தசரதன் என்பவரின் மகன் நரசிம்ம தசராஜா (வயது 34) எளாவூரில் நேற்று திங்கட்கிழமை 27 மணி நேர உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கியுள்ளார்.
இலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலைக் கண்டித்து நரசிம்ம தசராஜா கண்கள், வாய், கைகளைக் கட்டிக்கொண்டு காலை 6:00 மணிக்கு தனது உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினார்.
இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்தக்கோரி சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார் கோவிலில் இளையராஜா (வயது 25) நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை முதல் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
பறையர் பேரவை மாவட்ட அமைப்பாளரான இளையராஜா, காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்நாள் தொடக்கம் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கினார்.
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்து தமிழர்களை பாதுகாக்க வேண்டும், இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு சுய அதிகாரத்துடன் கூடிய அரசியல் தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ பொதுத் தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் வீரபாண்டியில் நேற்று முன்நாள் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கப்பட்டது.
சங்கத்தின் கிளைத் தலைவர் யூ.ஏ.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் கே.பொன்னுசாமி உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கி வைத்தார்.
ஒபாமாவுக்கு வேண்டுகோள்
இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவுக்கு, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் தற்போது 3 லட்சம் தமிழர்கள் சாவின் விளிம்பில் உள்ளனர். சிறிலங்கா அரசின் இந்தத் தாக்குதலை உலகம் வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
இனப் பிரச்சினைக்கு இராணுவம் மூலம் தீர்வு காண முடியாது என்பதை சிறிலங்கா அரசுக்கு உணர்த்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் பிரபாகரன் கேட்டுகொண்டுள்ளார்.
அஜித் மன்றம் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிறிலங்கா இராணுவத்தை கண்டித்து, அஜித் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் செஞ்சியில் நேற்று முன்நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செஞ்சி பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. காந்தி பஜார் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தவுடன் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈழத் தமிழருக்காக உயிர்நீத்த முத்துகுமாருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
சிறிலங்கா அரச தலைவரின் உருவப்பொம்மை எரிப்பு
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்து இலங்கை தமிழர்கள் பாதுகாப்புக்கு வழி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உருவப்பொம்மையை எரிக்க முயற்சித்தனர்.
உடனடியாக அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உருவபொம்மை எரிக்க முயன்ற புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் அமைப்பாளர் மாணிக்கம் உள்பட 19 பேரை கைது செய்தனர்.
Comments