ஐ.நா. உட்பட எந்த ஒரு நாடும் தலையிட அனுமதிக்க மாட்டோம்: மகிந்த

ஐக்கிய நாடுகள் சபை உட்பட எந்த ஒரு அனைத்துலக நாடுகளுக்கும் இனப் பிரச்சினை விவகாரத்தில் தலையிடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மக்களை அனைத்துலக நாடுகளின் கண்காட்சி பொருளாக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஒருபோதும் இடமளியாது எனவும் சூளுரைத்துள்ளார்.

கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஹேமகமவில் ஆதார மருத்துவமனை கட்டட திறப்பு விழவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த அமைச்சர்கள், அரச அதிகாரிகள் உட்பட பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.

மகிந்த ராஜபக்ச தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

மக்களை பாதுகாப்பது எப்படி என்று எங்களுக்கு தெரிய வேண்டும் என்றால் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இங்கு வந்து பார்த்து விட்டு போகட்டும் என சவால் விடுத்தார்.

அத்துடன், மக்களை பாதுகாக்கின்ற முறைகள் பற்றி சிறிலங்காவுக்கு அனைத்துலக நாடுகள் பாடம் படிப்பிக்கத் தேவையில்லை எனவும் கூறினார்.

மகிந்த ராஜபக்ச இவ்வாறு உரையாற்றிய போது அங்கு கூடியிருந்த மக்கள் கரவொலி செய்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மகிந்த ராஜபக்சவும் அப்போது சிரித்துக்கொண்டு மேலும் உரக்க சத்தமிட்டு உரை நிகழ்த்தினார்.



Comments