சீர்காழி பிடாரி தெற்கு வீதியைச் சேர்ந்த 47 வயது பிரம்மச்சாரி ரவிச்சந்திரன். தலைஞாயிறில் இருக்கும் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். இவருடைய தாய், சீர்காழி நகர காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர். தாயைப் பார்த்து மகனும் காங்கிரஸில் சேர்ந்தார். 17-வது
வார்டில் கட்சிப் பொறுப்பிலும் இருந்தார். பொதுவாக தமிழுணர்வு, தனிஈழம் பற்றியெல்லாம் பெரிதும் ஆர்வம் இருப்பதாகக் காட்டிக் கொள்ளாதவர். அப்படிப்பட்டவர் திடீரென்று ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்திருப்பது அவருடைய பெற்றோர் உட்பட அந்தப் பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
''ரெண்டு மூணு நாளா, 'நான் இலங்கைத் தமிழர்களுக்காக உயிரைக் கொடுக்கப்போறேன்'னு எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டிருந்தான். நாங்க அலட்சியமா இருந்துட்டோம். நேத்து (6-ம் தேதி) சாயந்தரத்துலேர்ந்து அவன் ரொம்ப அமைதியா கிட்டான். பேச்சியம்மன் கோயில் திருவிழாவுல
ராத்திரி ஒரு மணிக்கு சாமி வீதியுலா வந்துட்டுப் போச்சு. அது போனதுமே இவன் வீதிக்கு ஓடி வந்து 'தமிழ் வாழ்க, இலங்கைத் தமிழர்களைக் காப்பாத்துங்க'ன்னு சொல்லிக்கிட்டே கையில் வச்சுருந்த மண்ணெண்ணெயை மேலே ஊத்திக்கிட்டான். எல்லோருமா ஓடிப் போய் அவன்கிட்ட யிருந்து கேனையும் தீப்பெட்டியையும் புடுங்கிட்டோம். அவனை ஆசுவாசப்படுத்தி உட்கார வச்சோம். அவன் சடாருன்னு ஏத்திவச்சுருந்த சாமி விளக்கை எடுத்துத் தீ வச்சுக்கிட்டான்!'' என்று கண்ணீர் வழியச் சொன்னார் ரவிச்சந்திரனின் தந்தை சுந்தரமூர்த்தி.
ரவிச்சந்திரன் எரிவதைப் பார்த்த ஊர்க்காரர்களும் உறவினர்களும் ஓடிவந்து தீயை அணைக்க முயல, 'என்னை காப்பாத்தாதீங்க, இலங்கைத் தமிழர்களைக் காப்பாத்துங்க!' என்றவாறே தீயோடு துடித்துச் சுழன்றிருக்கிறார். உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று முதலுதவி அளித்து மயிலாடுதுறை மருத்துவமனையின் தீப்புண் சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். ஏழாம் தேதி அதிகாலை நான்கு மணிக்கே அங்கு கொண்டுசென்றபோதும் 'தீ காயம் அதிகம் இருக்கு!
உயிர் பிழைக்க வாய்ப்பில்லை' என்று சொன்ன மருத்துவர்கள், மாலை வரை எந்த சிகிச்சையும் அளிக்கவில்லையாம். மாலை நான்கு மணிக்கு ரவிச்சந்திரன் உயிர் பிரிந்துவிட... மருத்துவமனை அலட்சியம் பற்றி கவலைப்பட நேரமில்லாமல்(?)... இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரும், ஆளுங்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ்காரர்களும் ரவிச்சந்திரனை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்பதில் பிஸியாகிவிட்டார்கள்!
இவர்களின் ஆலோசனையே ஒரு கட்டத்தில் கோஷ்டி மோதலாக மாறி மயிலாடுதுறை டி.எஸ்.பி--யின் மூக்கையும் உடைத்தது.
ரவிச்சந்திரன் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்று அவருடைய நண்பர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் விசாரித் தோம். ''மூணாம் தேதி சீர்காழியில நடந்த பெரியார் தி.க-வின் பொதுக்கூட்டத்துக்குப் போயிருக்கான். அதுல பேசுன விடுதலை ராஜேந்திரன், இலங்கையில் நடக்கும் போரில் இந்தியா எந்தெந்த வகையில தமிழர்களை அழிக்க, சிங்களப் படைக்கு உதவுதுனு பேசியிருக்கிறார். அதே சிந்தனையோட இருந்தவன் 5-ம் தேதி நடந்த காங்கிரஸ் ஊழியர் கூட்டத்துல கலந்துக்க வந்த மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் மேல இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் செருப்பையும் கல்லையும் வீசியெறிஞ்சதைப் பார்த்து ரொம்ப ஆவேசப்பட்டு ஊழியர் கூட்டத்துல மணிசங்கர் ஐயர் முன்னி லையில் சத்தமும் போட்டிருக்கான். அவனை அங்கிருந்தவங்க சமாதானம் பண்ணி வச்சுருக்காங்க.
'காங்கிரஸ்காரனுக்கும் தமிழுணர்வு இருக்கு, தமிழர்கள் மீது அக்கறை இருக்குங்கிறதை காங்கிரஸ்காரனும் உணரமாட்டேங்கிறான், மத்த கட்சிக்காரனும் உணர மாட்டேங்கிறான்'னு ஆதங்கப்பட்ட ரவிச்சந்திரன், காங்கிரஸ்காரனான நாம் உயிரைக் கொடுத்து தியாகம் பண்ணினா மத்த காங்கிரஸ்காரர்கள் உணர்வு பெறுவார்கள்னுதான் இந்த முடிவுக்கு வந்திருக் கிறான்...'' என்றார்கள்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சமயத்தில் ரவிச்சந்திரனை பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. அப்போது அவர், ''தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க, ராஜபக்ஷே ஒழிக, இலங்கைத் தமிழர்களைக் காப்பாத்துங்க...'' என்று ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தார். இந்தக் கருத்துகளை வலியுறுத்தி, ''ஈழத்தமிழர் வாழ வழி செய்யாத இந்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். மானம்கெட்ட தமிழக அரசே என் உயிரை உன்னால் தரமுடியுமா? என் அருமைத் தமிழர்களுக்காக இலங்கை அரசே என் உயிரைத் தருகிறேன். போரை நிறுத்தவேண்டும்!'' என்று முன்கூட்டி ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார்.
ஆனால், ரவிச்சந்திரனின் 'தியாகத்தை' காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் ஆரம்பித்து பெரிய தலைவர்கள் வரை யாரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூட வரவில்லை. ஐந்தாம் தேதி நடந்த ஊழியர் கூட்டத்தில் மணிசங்கர் ஐயர் கையால் உறுப்பினர் கார்டு வாங்கிய ரவிச்சந்திரனை, 'காங்கிரஸ்காரரே இல்லை' என்று அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு. ஆனால், உள்ளூர் கட்சிக்காரர்களோ ரவிச் சந்திரன் காங்கிரஸ்காரர்தான் என்று உறுதியாகச் சொல் கிறார்கள்.
இந்நிலையில், 'ரவிச்சந்திரன் தி.மு.க. தொழிற்சங்கத்தில் இருக்கிறார். அதனால் எங்களிடம் உடலை ஒப்படைக்க வேண்டும்' என்று தி.மு.க-காரர்கள் வாதம் செய்து பார்த் தார்கள். இதை எதிர்பார்த்திருந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர், ரவிச்சந்திரனின் தந்தை சுந்தர மூர்த்தியிடம், 'என் மகன் இறுதிச் சடங்குகளை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர்தான் செய்யவேண்டும்!' என்று எழுதி வாங்கிக்கொண்டனர்.
''நான் இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை கொடுக்கப் போறேன்னு சொன்னவனை, 'என்னை வேணா கொளுத்திப் போட்டுட்டுப் போ. நீ இருந்து குடும்பத்தைப் பாரு'ன்னு சொன்னேனே... அதைக் கேட்காம இப்பிடிப் பண்ணிட்டானே...'' என்று கதறுகிறார் ரவிச்சந்திரனின் தாய் சரஸ்வதி.
எட்டாம் தேதி நடந்த ரவிச்சந்திரனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இலங்கைத் தமிழர் பாது காப்பு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ், திருமாவள வன் ஆகியோருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் புள்ளிகளும் வந்திருந்தனர். இவர்களோடு (சசிகலா) நடராஜன், சுப.இளவரசன், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். மார்க்சிஸ்ட் தோழர்களை மட்டும் காணவில்லை.
காங்கிரஸ்காரரின் இந்த பரிதாப மரணத்தை அந்தக் கட்சிக்காரர்களே கண்டுகொள்ளாததுதான் துர்பாக்கியமான விஷயம்.
''என்னைத் தெரியாதென நீ மூன்று முறை மறுதலிக்கப் போகிறாய்...'' என்பார் யேசுபிரான். அவர் சீடன் இராயப்பரோ, ''ஐயகோ! அப்படி நான் செய்வேனா?'' என்பான். ஆனால், சிலுவையில் அறைந்து யேசு ரத்தம் சிந்துவதற்கு முன் அவரைத் தெரியாதென்று இராயப்பர் மறுத்துச் சொன்னது வரலாற்றுப் பதிவு!
இன்று இலங்கைப் பிரச்னைக்காக உணர்வுக் கொதிப் போடு தங்கள் உயிரையே தொண்டர்கள் தியாகம் செய்ய, தங்கள் கட்சிகள் எடுத்த நிலைப்பாட்டுக்கு மாறாக இருப்பதாலேயே அந்த உயிர் தியாகங்கள் பற்றிக் கவலைப்படாமல், 'இவர் எங்கள் கட்சியே இல்லை' என்று சொல்கிற சுயநல அரசியல் அவலத்தை அரங்கேற் றியுள்ளன காங்கிரஸ§ம் தி.மு.க-வும்!
காங்கிரஸை சேர்ந்த சீர்காழி ரவிச்சந்திரன் தீக்குளித்த சோகம் தணியும் முன்பே, சென்னை வண்ணாரப் பேட்டையை சேர்ந்த கோழி வியாபாரி அமரேசனும் தீக்குளித்து மாண்டு போயிருக்கிறார்.
அவருடைய மகன் சங்கரலிங்கத்திடம் பேசினோம். ''வீசிங் பிரச்னைக்காக அப்பா ஆஸ்பத்திரியில் இருந்தப்ப... இலங்கை செய்திகளை படிச்சுட்டு ரொம்ப வருத்தப் பட்டார். குறிப்பா, முத்துக்குமாரின் கடிதத்தை ரெண்டு மூணு தடவை படிச்சு வருத்தப்பட்டார். எட்டாம் தேதி தைப்பூசத்துக்காக வடலூர் கிளம்பினாரு. ஆனா, அன்னிக்கு சாயங்காலமே போலீஸ்காரங்க போன் பண்ணி, 'அமரேசன் யார்'னு கேட்டுட்டு ஸ்டான்லி ஆஸ்பிட்டலுக்கு வரச் சொன்னாங்க. அங்கே போயும் அவரை பார்க்க போலீஸ் விடலை. உயிருக்குப் போராடி செத்துட்டாரு. வீட்டைவிட்டு போகும்போது கையில பாலீத்தின் பை வச்சிருந்தார். அதைக் காணல...'' என்றவரிடம்,
''உங்க அப்பா தி.மு.க. அபிமானி என்று சொல்கிறார் களே...'' என்று கேட்டோம். ''அவருக்கு எந்தக் கட்சியும் பிடிக்காது... ஆனா, எங்கப்பா மரணத்தை அரசியலாக் குறாங்க!'' என்றார் சங்கரலிங்கம்.
மன்னார்குடியில் ஒரு மரணம்! இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையைக் கண்டித்து, முத்துக்குமார், ரவி, ரவிச்சந்திரன், மலேசியா ரவி, சென்னை அமரேசன் என்று வரிசையாக உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி திருவாரூரில் தி.மு.க., காங்கிரஸ், தி.க. சார்பில் 'இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை' நடத்திய கண்டனப் பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மன்னார்குடி தா.செ.பாண்டியன் மாரடைப்பால் இறந்துவிட்டார். காங்கிரஸ்காரரான மன்னை மதியழகன், ''ஆறு மணிக்குப் பேரணி தொடங்குச்சு. அப்பவே அதிக சத்தம் போட்டுக் கோஷம் எழுப்பினாரு. நடக்கும்போது வேர்த்துக் கொட்டுச்சு. பேரணியோட முடிவுல நடந்த மீட்டிங்குக்கு நான் வரத் தாமதமாயிடுச்சு. அப்ப எனக்கு போன் போட்டு, 'ஸ்டேஜுக்கு உடனே வாங்க'ன்னாரு. அடுத்த நிமிஷமே நான் அங்க போனேன். அப்போ திடீர்னு சரிஞ்சு விழுந்துட்டாரு...'' என்றார். குணசேகரன் என்பவர், ''நேத்து அவருக்குப் பக்கத்து நாற்காலியிலதான் நான் உட்கார்ந்திருந்தேன். திடீருன்னு அவருக்கு அதிகமா வியர்த்துச்சு. என் பக்கமா சாய்ஞ்சாரு. அதைப் பார்த்து நான் சத்தம் போட்டதும், தி.மு.க-வோட திருவாரூர் மாவட்டச் செயலாளர் கலைவாணன் தன்னோட கார்ல பாண்டியனைத் தூக்கிப் போட்டுக்கிட்டார். ஆஸ்பத்திரிக்குப் போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சு!'' என்றார் வருத்தமாக. மத்திய அமைச்சர் டி-.ஆர்.பாலு, பழனிமாணிக்கம் மற்றும் மதிவாணன், தமிழரசி, மாவட்டச் செயலாளர் கலைவாணன் என தி.மு.க-வினரும் பி.வி.ராஜேந்திரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் என காங்கிரஸாரும் மன்னார்குடி வந்து இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தற்சமயம் டெல்லியில் இருந்து திரும்பியதும் மன்னார்குடி வருவதாகத் தெரிவித்திருக்கிறாராம். மாநில அளவில் பொறுப்பிலிருந்தாலும் வறுமையில் வாடும் அவருடைய குடும்பத்துக்கு என்ன வழி என்பதுதான் கேள்விக் குறி. - வீ.மாணிக்கவாசகம் |
அக்கம் பக்கத்தினரோ, ''அமரேசன் தி.மு.க. அபிமானிதான். அவர் தீக்குளித்த இடத்துக்குப் பக்கத்தில் போலீஸ் அவுட்-போஸ்ட் இருக்கிறது. அங்கேயிருந்து வந்த போலீஸ், அவர் ஈழத் தமிழர்களுக்காக எழுதிய கடிதங்களை கைப்பற்றி மறைத்துவிட்டது!'' என்றார்கள். இதற்காக போலீஸை கண்டித்து ஸ்டான்லி மருத்துவமனையில் தமிழ் உணர்வாளர்கள் திரண்டு போராட் டம் நடத்தியிருக்கிறார்கள். அஞ்சலி செலுத்த வந்த வைகோவும் போலீஸாரின் செயலைக் கண்டித்து விட்டுப் போனார்.
- எம்.பரக்கத் அலி, கரு.முத்துபடங்கள்: பொன் காசிராஜன்
Comments