எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே,

"அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்"

வான் கரும்புலி கேணல் ரூபன் அவர்கள் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் வாழும் தமிழ்மக்களுக்காகவும் எழுதிய மடல்

15.02.2009

தமிழீழம்.

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே,

மாவீரர்கள், மாவீரர்களாகப் போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம். நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள். மாவீரன் முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.

எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதகளில் விழும். மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.

புலப்பெயர் எமது உறவுகளே நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப்புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.

மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப் போகின்றது. வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.

விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.

அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.

எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்"

இப்படிக்கு,

தம்பி, அண்ணா, மகன், போராளி

இ.ரூபன்.


Comments