கேள்வி : உங்கள் இயக்க ஆதரவில் கடந்த 17இல் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு எப்படியிருந்தது?
பதில் : பிரமாண்டம் என்று சொல்லலாம். இரண்டாயிரம் கிலோ மீற்றர் தூரமான மனித சங்கிலியில் முப்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். பல துறைகளையும் சேர்ந்த மக்கள் சுயவிருப்பத்துடன் பங்குகொண்டதையும் சிறுவர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி புதுச்சேரி முதல் தூத்துக்குடி வரையும் நடந்தது. நாங்கள் வகுத்த பாதையில் சேராத சேலம், தர்மபுரி, நீலகிரியிலும் தமிழகத்தின் குக்கிராமங்களிலும்கூட மக்கள் தாங்களாகவே முன்வந்து மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்தது சிறப்பாக இருந்தது.
கேள்வி : இத்தனை எதிர்ப்புகள் தமிழகத்தில் நிகழ்த்தியும் உங்கள் குரலுக்கு மத்திய அரசு செவிசாக்கவில்லையே?
பதில் : தூங்குபவனை எழுப்பலாம். நடிப்பவனை என்ன செவது? அங்கு ஒரு நாடகம் நடக்கிறது. ஆனால், தமிழ் மக்களது ஒட்டுமொத்த குரல், இப்பொழுது சர்வதேச மட்டத்தில் ஒலித்து திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டது. திருப்தியாக இருக்கிறது.
கேள்வி : இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் தாக்கல் செத அறிக்கை பற்றி?
பதில் : பிரணாப் முகர்ஜி தாக்கல் செத அந்த அறிக்கை பொறுப்பற்ற அறிக்கை மட்டுமல்ல; மஹிந்த ராஜபக்ஷவின் குரலை எதிரொலிக்கும், ஊதுகுழலான அறிக்கை அது. இலங்கைத் தமிழர் படுகொலைபற்றி, நெஞ்சைப் பிளக்கும் அந்தக் கொடிய துயரம் குறித்து ஒருசிறிய கண்டனத்தைக்கூட தெரிவிக்காமல் சிங்கள அரசின் கொடூரத் திட்டங்களுக்கு துதிபாடுவதாக அறிக்கை அமைந்திருக்கிறது. இலங்கைத் தமிழ் இன மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற தாத் தமிழகத்தின் இதயத் துடிப்பை உதாசீனப்படுத்துவதாக அந்த அறிக்கை இருக்கிறது. பிரணாப் முகர்ஜியின் அறிக்கை உடனடியாக வாபஸ்பெறப்பட வேண்டும். இல்லாவிட்டால், காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஆழத்தோண்டிப் புதைப்பார்கள் என்று நான் எச்சரிக்கின்றேன். இது குறித்து எமது இயக்கம் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி சில தினங்களில் முடிவெடுக்கும்.
கேள்வி :இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் இராணுவத்தினரின் பாதுகாப்பு வலயங்கள், இந்தியாவின் யோசனை மீதுதான் அமைக்கப்படுவதாக இலங்கை கூறுகிறதே?
பதில் : இந்திய அரசின் வேண்டுகோளைத் தொடர்ந்துதான் தமிழ்ப்பகுதிகளில் பாதுகாப்பு வலயங்கள் மஹிந்த ராஜபக்ஷ அமைத்ததாக பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார். ஆனால், என்ன நடந்திருக்கிறது? அந்த வலயத்துக்கு வந்த அப்பாவி மக்கள் படுகொலை செயப்பட்டுள்ளனர். இதனைக் கண்டிக்கவேண்டிய பிரணாப் முகர்ஜி, திசை திருப்பும் வகையில் புலிகள் மிது பழி சுமத்துகிறார். புலிகளை ஒழிப்பதாகக் கூறி தமிழின அழிப்பை மஹிந்த அரசு செதுவருவது இந்திய அரசுக்குத் தெரியாததல்ல. இந்தியாவின் துணையோடுதான் இலங்கை அரசு தனது தமிழ் இன அழிப்புத் திட்டங்களை செயல்படுத்துகிறது!
கேள்வி : மாணவர்களின் போராட்டங்களில் தொவு ஏற்பட்டுள்ளதா?
பதில் : நிச்சயமாக இல்லை. குறிப்பிட்ட சில கல்லூரிகளைத் தொடர்ந்து மூடிவைத்து, மாணவர்களை பணியவைக்கலாம் என்று தமிழக அரசு எண்ணுகிறது. இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்காக போராடும் மாணவர்களை காவல்துறை மூலம் மிரட்டிப் பணிய வைக்கலாம் என்று முயற்சிகள் நடக்கின்றன. இது பலிக்காது. மாணவர்கள்; தமிழின உணர்வில் தினம் தினம் செத்துமடியும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற குரல் எழுப்புகிறார்களே தவிர, தி.மு.க. அரசை வீழ்த்தப் போராடவில்லை. மாணவர்களின் எழுச்சியை ஒடுக்க நினைத்தால் ஆட்சிக்கு எதிராக அவர்கள் போராட்டம் மாறிவிடும். தமிழ் நாட்டு மாணவர்கள் உள்ளேயும் வெளியிலும் போராட்டங்கள் நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். டில்லி சென்று அரசின் கவனத்தை ஈர்க்கவும் அவர்கள் தயங்கவில்லை.
கேள்வி : இரண்டு மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கட்சிகள் இத்தேர்தலில் கவனம் செலுத்துவதால் காட்சிகளும் மாறலாம். கூட்டணிகளும் தோன்றலாம். இதனால், இலங்கைத் தமிழர் நலனுக்காக நடத்தப்படும் போராட்டங்களின் பின்னடைவு ஏற்படுமா?
பதில் : அதற்கு சந்தர்ப்பங்களே இல்லை. கட்சிக்கு அப்பாற்பட்டு தமிழின உணர்வால் தலைவர்கள் இன்று ஒன்றுபட்டுள்ளனர். இதில் மாற்றம் வராது. ஈழத் தமிழருக்காக நாம் ஒரு கூட்டத்தை நடத்தினால் எல்லாக் கட்சியினரும் குரல் கொடுக்கின்றனர். ஒரு தடவை, நாம் நடத்திய கூட்டத்தில் எனக்கு வலப்பக்கமாக பாரதிய ஜனதாக் கட்சி தமிழ் மாநிலத் தலைவர் இல.கணேசன் இருந்தார். இடப்பக்கமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா.பாண்டியன் இருந்தார். ஆனாலும் அன்றைய கூட்டத்தில் யாருமே கட்சி நலன்பற்றிப் பேசவில்லை. ஈழத் தமிழ் மக்களுக்காகவே உரத்து குரல் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் தா.பாண்டியன் என்னுடன் உரையாடியபோது, "எங்களுக்குள் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். அதேநேரம் தமிழின உணர்வில் இல.கணேசனுக்கு கரம் நீட்டவும் நான் தயார்தான்.' என்று சொன்னது, எங்களது போராட்ட முயற்சிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. இது மட்டுமல்ல; டில்லியில் கடந்தவாரம் வைகோ நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரே மேடையில் பல எதிர்முகங்கள் ஒரு நோக்கத்துக்காக ஒற்றுமையுடன் குரல் கொடுத்ததை தமிழினம் மறக்காது.
கேள்வி : இலங்கைத் தமிழர் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என தமிழகத்தில் எழுப்பப்படும் கோஷம் பற்றி?
பதில் : இது வெறும் கோஷமாகத்தான் இருக்கும். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சினை நிச்சயம் எதிரொலிக்கும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் கண்டிப்பாக பிரதிபலிக்கும்.
கேள்வி : இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
பதில் : இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவேண்டும். அது நடக்கும்வரை எங்களது போராட்டங்கள் பல வடிவங்களில் தொடரும். இன்றைய நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முக்கியமான உலகநாடுகளின் கவனம் திரும்பி இருக்கிறது. எல்லா நாடுகளிலும் ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும் சிங்கள அரசைக் கண்டித்தும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. எங்களது அடுத்த நடவடிக்கையும் உலகநாடுகளைத் திசை திருப்புவதாகவே அமையும். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையிலுள்ள வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை இவ்வாரம் சந்திக்கின்றோம். இல.த.பா.இயக்கத்தைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் மொத்தமாகச் சென்று தூதரக அதிகாரிகளுடன் பேசுவோம். அவர்களுக்குத் தேவையான எல்லாத் தகவல்களையும் ஆதாரபூர்வமாகக் கொடுப்போம். போர் நடக்கும் பகுதிகளில் சர்வதேச பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதிக்கும் முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
Comments