இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை, இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை, ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது. கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள்.
இதற்குமேல் சர்வதேச அளவில் கவனயீர்ப்பையோ பரப்புரையையோ செய்யமுடியாது என்பது சர்வதேச மனித நேய கனவான்களுக்கு தெரிந்த உண்மை. கொழுத்தும் வெய்யிலில் தீக்குளித்தார்கள் மெல்பேர்ன் நகரில் 5000 தமிழர்கள். பட்டிணியிருந்து உடல் வருத்தி கருணை காட்டுங்கள் என இளையோர் மன்றாடிக் கேட்டார்கள் சிட்னியில். கன்பராவில் 4000 தமிழர்கள் என்றுமில்லாதவாறு அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தார்கள்.
ஆனாலும் என்ன பயன்? என்ன நடந்தது? ஒன்றுமேயில்லை. வெறும் காகிதத்தில் உப்புச்சப்பில்லாத பதில் அறிக்கைகள். அதுகூட சிறிலங்கா அரசாங்கத்தின் மனம் நோகக்கூடாது என்று கஸ்ரப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்பது எல்லோரும் அறிந்த கசப்பான உண்மை. ஆனால் கண்துடைப்புக்காக சில தாமதமான வாக்குறுதிகள் வழங்பட்டது ஏனோ மனதுக்கு ஆறுதல். அவைகூட கானல் நீர்தான்.
வாழ்க்கை தேடி வந்த நாட்டையும் மக்களையும் குறை சொல்வதாய் சிலர் முணுமுணுப்பது என் காதுகளுக்கு கேட்கிறது. அடைக்கலம் தந்த நாட்டை ஆலயங்காளாக நினைக்கும் ஆயிரம் ஆயிரம் தமிழர்களில் நானும் ஒருவன். நாயிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட இந்த அகதிகளுக்கு கொடுக்கிறார்கள் இல்லையே என்று நினைக்கும் போதுதான் மனதின் ஒரு ஓரத்தில் வலிக்கிறது.
உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் இதை ஒரு சீனாக்காரனோ இல்லை அவுஸ்ரேலிய பழங்குடியினரோ செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அவுஸ்ரேலிய குடியுரிமை உடைய அவுஸ்ரேலிய இளையோர் 4 பேர் உண்ணாவிரத போராட்டம் என்று ஒரு 5 நிமிடத்துக்கு இருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதுவே இந்த நாட்டின் முக்கிய பிரச்சினையாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகியிருக்கும். நாடே திரும்பிப்பார்த்து கேள்வி கேட்டிருக்குமா? இல்லையா? ஆனால் அவுஸ்ரேலிய மண்ணின் குடியுரிமை பெற்ற இளையோர் 72 மணிநேரத்துக்கு மேலாக பட்டினியிருந்து குரல் எழுப்பி என்ன பலன்?
கடைசியில் அவர்கள் அந்த புனிதமான அகிம்சை வழி போராட்டத்தை தொடர்ந்து நடத்தக்கூட அனுமதி மறுக்கப்பட்டதுதான் வேதனை தருகின்றது. மகாத்மாகாந்தி மேல் கொண்ட வெறுப்பும் கோபமும் இன்னும் வெள்ளைக்காரர்களுக்கு போகவில்லை என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களையும் சமத்துவமாக சரிசமானமாக வேறுபாடின்றி பார்க்கவேண்டியது ஒரு நல்ல மாந்தை நேய அரசின் கடமையாகும்.
மனிதநேயம் என்பதை வெறும் வாயினால் பேசினால் மட்டும் போதாது. மனச்சாட்சியோடு அதை செயல் வடிவத்திலும் காட்டவேண்டும். அவ்வாறு வேறுபாடு காட்டப்படும் இடத்து அதை தட்டிக்கேட்க வேண்டியது எமது உரிமை. ஆனால் இது நமது வேலையல்ல. தாயகத்தில் நாள்தோறும் 50,100 என நரபலி எடுக்கிறது சிறிலங்கா பேரினவாத இராணுவம். இதற்கு துணைபோகிறது இந்திய ராணுவமும் சர்வதேச நாசகார படைகளும்.
புலம்பெயர் தமிழர்கள் நாங்கள் இப்போது ஒரு தீர்மானத்தை ஒருமனதாக எடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.
விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா? தலைவர் பிரபாகரன் வன்னியை விட்டு ஓடிவிட்டாரா? விடுதலைப்புலிகளுக்குள் பிளவு ஏற்பட்டு வலிமை குன்றிவிடார்களா? காடுகளுக்குள் ஓடி ஒழிந்துவிடார்களா? இன்னும் சில நாட்களில் ஆயுதங்களை எல்லாம் போட்டுவிட்டு சரணடையபோகிறார்களா? இப்படியெல்லாம் பலகேள்விகளை கேட்டுக்கொண்டிக்கிறார்கள் பலபேர்.
அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் தான். புலி பசித்தாலும் புல்லை தின்னாது.
ஒரு மாதமாக 1500 அப்பாவி பொதுமக்களை நரபலி எடுத்து 5000 விடுதலைப்புலிகளை கொன்றொழித்துவிட்டதாக சர்வதேசத்துக்கு கணக்கு காட்டியிருக்கிறது மகிந்த அரசாங்கம்.
அதை அப்படியே மண்டையை ஆட்டி ஏற்றுக்கொண்டிருக்கிறது சர்வதேசமும் மனித நேய அமைப்புக்களும். கோடிக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழர்கள் கொட்டும் வெய்யிலிலும் உறைபனியிலும் நின்று "எங்களுக்கு நீதி வேண்டும், எங்கள் சொந்தங்களை மரணத்தில் இருந்து காப்பாற்றுங்கள்" என்று கதறிக்கூக்குரல் கொடுத்தும் சர்வதேசம் இறுக கண்மூடி தூங்குகின்றது. இல்லை தூங்குவதுபோல் நடிக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் 2000 உயிர்கள் அநியாயமாக காவுகொள்ளப்பட்டுள்ளது. 2500 இக்கும் அதிகமானவர்கள் உடல் ஊனமாக்கப்பட்டுள்ளார்கள். கோவில்கள், தேவாலயங்கள், வைத்தியசாலைகள் என அடைக்கலம் தேடி புகுந்த மக்களையும் சர்வதேச போர் விதிமுறைகளையும் மதிக்காது குண்டு வீசி கொன்றொழித்து கொண்டிருக்கிறது சிங்கள பேரினவாதம். இதை கைகட்டி வாய்பொத்தி மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமா கொல்லப்படுவது புலிகள்தான் என்று அறிக்கையும் வேறு. வெள்ளைப்புறா வேசம் போட்ட குளிர் நாடும் அதற்கு ஆமாம் என்று தலையாட்டுவதுதான் கொடுமையிலும் கொடுமை.
வயிறுபிளந்து குடல் சிதறிக்கிடக்கும் சின்னக்குழந்தையும் தள்ளாத வயதில் தலை இல்லாமல் துண்டு துண்டாய்க் கிடக்கும் அப்புவும் ஆச்சியும் விடுதலைப்புலிகளா?
இல்லை இரண்டு கைகளையும் இழந்து வலியால் குழறும் சின்னப்பொடியன் புலியா?
என்னடா உங்கள் நீதி?
காசாவில் நாலு வயது குழந்தை இறந்து விட்டால் வாய் கிழிய கத்துகிறீர்கள்.
நாய் ஒன்று நடுவீதியில் அடிபட்டால் நாலு பக்கத்துக்கு அனுதாப கட்டுரை எழுதும் சர்வதேச மனிதநேய வாதிகளே கொஞ்சம் மனச்சாட்சியோடு எங்கள் மக்களை திரும்பி பாருங்கள்.
இல்லையென்றால் நீங்கள் எடுத்திருக்கும் சில இறுக்கமான தீர்மானங்களையும் மனச்சாட்சி இல்லாத முடிவுகளையும் போல நாங்களும் அவசரமாக எடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டிருக்கிறோம்.
தமிழர்கள் இழிச்சவாயர்கள், குட்டக் குட்ட குனியும் மடையர்கள்.!, எது செய்யினும் ஏன் என்று கேட்பதற்கு நாதியற்றவர்கள்.!. தமிழன் உயிர் நாயிலும் கேவலமானது.!. மதிப்பில்லாதது. தமிழன் என்ற இனம் இனிமேல் இருக்கக்கூடாது. அவனுக்கென்று ஒரு நாடு வரலாற்றில் இருக்கவேகூடாது. இப்படியெல்லாம் நினைக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கும் சர்வதேச சண்டியர்களுக்கும் ஒன்றை மட்டும் கடைசியாய் கூறுகிறோம்.
என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்று எதிரியே தீர்மானிக்கிறான் என்று யாரோ ஒருவன் சொன்னான்.
முல்லைத்தீவிலும் புதுக்குடியிருப்பிலும் கொத்துக்குண்டுகளையும் கிளஸ்ரர் குண்டுகளையும் எரிகுண்டுகளையும் வீசியும் அப்பாவி பொதுமக்களின் உயிர்களை கொன்றொழித்தும் போராட்டத்தின் வடிவத்தையும் பாதையையும் மாற்றி விட்டான் எதிரி. வன்னியில் கேட்கின்ற அழுகுரல்களைப் போல் ஆயிரம் மடங்கு சிறிலங்காவின் மூலை முடுக்கேல்லாம் கேட்க வைப்பதற்கு தமிழர்களால் நினைத்தால் அரை நொடியில் முடியும். இதைத்தான் சிங்களப் பேரினவாதமும் மகிந்த அரசும் மனிதநேய அமைப்புக்களும் சர்வதேசமும் எதிர்பார்க்குமானால் அது வெகுவிரைவில் நடக்கும்.
அப்போதும் புலம் பெயர் தமிழர்களின் கைகளில் தான் இன்னொரு பணியும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது சர்வதேசமே கண்திறந்து பார் என கூக்குரலிட்டு கதறும் நாங்கள், சிங்கள தேசம் கூக்குரலிட்டு அழும்போது கொடுக்கு கட்டிகொண்டு ஓடிவரும் சர்வதேச சண்டியர்களை நடப்பதை பொத்திக்கொண்டு வேடிக்கை மட்டும் பார் என்று அடக்கிவைக்க வேண்டியதும் நாம்தான்.
என் அப்பு கட்டிய கோவணமே எனக்கு தேசியக்கொடி.!
உனக்கு வேண்டுமானால் பிரான்ஸ் கொடியோ அவுஸ்ரேலியக் கொடியோ தேசியக்கொடியாகலாம்...
எனக்கு என் அப்பு கட்டிய கொவணத்துணியே தேசியக்கொடி.!
ஒடியல் புட்டும் மீன்கறியும் தான் எனக்கு எப்பொதும் தேசிய உணவு.
பிசாவும் மக்கசும் ருசிதான் -ஆனாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில் ஆக்கிய நண்டுக்குழம்புக்கு கீழ்தான்
கொள்ளை அழகுதான் பாரிஸ் கோபுரம் - ஆனாலும்
நெடிதுயர்ந்த பனையை விட கொஞ்சம் குறைவுதான்.!
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது
கடல் கடந்தாலும் கலாச்சாரம் மாறாது
நாகரிகம் என்று உன் நல்ல பெயரை நறுக்கி மாற்றலாம்
உன்னுள் ஒடும் உன் தாயின் குருதியை மாற்றலாமோ?
ராப்பும்(துள்ளிசை) பப்பும்(கேளிக்கை விடுதி) உனக்கு அந்த மாதிரி
உடுக்கோசையும் காவடி ஆட்டமும்தான் என்றும் எனக்கு முன்மாதிரி
அடையாளங்களை தொலைத்து விட்டு அசிங்கமாய் வாழ்வதைவிட
அம்மணமாக வாழ்வது மேல்.!
- தமிழ்ப்பொடியன் (சபா ரமணா)
Comments