PUTHINAM |
ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு போரை நிறுத்துவது தொடர்பான வழிமுறைகளை சிறிலங்க அரசுடன் விவாதிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் உள்ளிட்ட கொடை நாடுகள் விடுத்த வேண்டுகோளிற்கு பதிலளித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளர் ப. நடேசன் கடிதம் ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும், அங்கீகாரத்துடனும் ஒரு தீ்ர்வு எட்டப்பட்டால் அப்பொழுது விடுதலைப் புலிகள் ஆயுதம் வைத்திருப்பதற்கான அவசியம் ஏதும் இருக்காது என்று ப. நடேசன் கூறியுள்ளார்.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிரந்தரத் தீர்வை எட்டாமல், தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க தாங்கள் தூக்கிய ஆயுதத்தை கீழே போடுவது தீர்வை எட்டுவதற்கு எந்த விதத்திலும் உதவாது என்றும் கூறியுள்ள நடேசன், அப்படிச் செய்யக் கோருவது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைபடுத்துவதாகவும், இனப்படுகொலையை பாராட்டுவதாகவும் ஆகும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோ, ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன், நார்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க், ஜப்பான் பிரதமர் டாரோ ஆசோ ஆகியோருக்கு எழுதியுள்ள மடலில் இவ்வாறு கூறியுள்ள ப.நடேசன், தங்களுடைய விடுதலைப் போராட்டம் குறித்த வரலாற்று ரீதியான சில விவரங்களை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்
நடேசன் எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகவே வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் வடக்கும்- கிழக்கும் பகுதிகள் இணைந்துள்ள ஒரு தொடர்ச்சியான பகுதியே அவர்களின் பாரம்பரிய பூமியாகும். தேசமாகவும், சுய நிர்ணய உரிமையுடன் கூடியதாகவும் திகழும் தமிழினத்தை அரை நூற்றாண்டுக் காலமாக சிறிலங்க அரசு ஒடுக்கி வருகிறது. அத்தாக்குதலில் தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளை ஆக்கிரமித்தும், அவர்களை இனப்படுகொலைக்கு உட்படுத்தியும் வருகிறது.
தனது நாட்டு மக்கள்தான் தமிழர்களும் என்று கூறிக்கொண்டே அவர்கள் மீது அராஜகம் நடத்திவரும் சிறிலங்க அரசின் நடவடிக்கை ஒரு அப்படமான அரச பயங்கரவாதமாகும்.
தங்கள் மீது தொடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தை எதிர்த்தே கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழர்கள் போராடி வருகின்றனர். முதல் கால் நூற்றாண்டு அது சுய நிர்ணய உரிமையை கோரும் சாத்வீக போராட்டமாகவே நடந்தது.
உலகளாவிய அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட சாத்வீக வழியிலான இந்த அமைதியான போராட்டத்தை, சிங்கள இளைஞர்களை மட்டுமே கொண்ட ஆயுதப் படைகளால் சிறிலங்க அரசு ஒடுக்கியது. தங்களது உரிமைகளுக்காக போராடிய தமிழர்கள் ஏராளமாக இரத்தம் சிந்தினர்.
|
சிங்கள-தமிழ் மொழித் தகராறு, சிறிலங்க அரசின் ஒடுக்குமுறையால் மேலும் கூர்மையானது. சிறிலங்க அரசின் ஒடுக்குமுறையின் காரணமாக சாத்வீகப் போராட்டங்கள் வலுவிழந்த நிலையில்தான் ஆயுதப் போராட்டம் பிறந்தது. அந்த சூழலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பிறக்க வழியேற்படுத்தியது மட்டுமின்றி, அதற்குத் தலைமையேற்கவும் செய்தது.
தமிழர்களின் அரசியல் இலக்கை தமிழர்கள்தான் முடிவு செய்தனரேயன்றி, விடுதலைப் புலிகள் அல்ல. 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தங்களுடைய அரசியல் இலக்கு என்ன என்பதை எமது மக்கள் உலகத்திற்கு அறிவித்தனர். தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு-கிழக்கு இணையந்த பகுதி தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த அரசியல் கட்சிகளுக்கு தமிழர்கள் வாக்களித்தனர்.
தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக அளித்த தீர்ப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது தேசிய பொறுப்பாக ஏற்றது. கடந்த 30 ஆண்டுகளாக நடந்த விடுதலைப் போரில் பெற்ற இராணுவ வெற்றிகள் தமிழர்களுக்கு உலகளாவிய புகழைப் பெற்றுத் தந்தது. எமது விடுதலைப் போராளிகளின் ஒப்பற்றத் தியாகத்தால் இந்நிலை எட்டப்பட்டது.
தொடர்ந்த வெற்றிகளின் மூலம் எப்பொழுதெல்லாம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கை ஓங்கியிருந்ததோ அப்போதெல்லாம் அரசியல் தீ்ர்வு காண்பதில் ஆர்வம் காட்டுவது போல அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்தது சிறிலங்க அரசு. ஆனால் தனது இராணுவ பலத்தை பெருக்கிக் கொள்வதற்கு தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டு தன்னை பலப்படுத்திக் கொண்டதும், அமைதிப் பேச்சை சீர்குலைத்து போருக்கு வழி செய்தது.
|
கொடை நாடுகளின் ஆதரவுடனும், நார்வே அனுசரணையுடனும் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. 2002ஆம் ஆண்டு கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம், சுனாமித் தாக்குதலை அடுத்து உருவாக்கப்பட்ட மறுநிர்மாண ஆளுமை அமைப்பு, வடக்கு-கிழக்கு மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட செயலகம் ஆகிய மூன்று ஒப்பந்தங்களையும் பிறகு நிராகரித்ததது சிறிலங்க அரசு.
இராணுவ நடவடிக்கையின் மூலம் தீர்வு காணும் முயற்சியைத் தவிர்த்துவிட்டு, அமைதி பேச்சின் மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்க அரசு உதாசீனம் செய்தது என்பதை உலகம் அறியும்.
இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு காணத்தான் சிறிலங்க ஆட்சியாளர்கள் முயலுவார்கள் என்றும், இப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வைக் கண்டறிய அவர்கள் ஒருபோதும் முயற்சிக்க மாட்டார்கள் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் நீண்ட காலமாகச் சொல்லிவருகின்றனர். சிங்கள- தமிழ் இனப் பிரச்சனை மீதான சிறிலங்க அரசின் இந்த நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யாரும் சரியாக அடையாளங் காணவில்லை.
அரசியல் தீர்வுக்கு எதிரான, இராணுவத் தீர்வுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டைத்தான் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் சர்வதேசச் சமூகத்திடம் சிறிலங்க அரசு முன்னிறுத்தி வருகிறது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று எப்படிக் கூறுகிறதோ அப்படித்தான், “பாதுகாப்புக் காரணங்கள்” என்ற போர்வையில் சில மனிதாபிமான அமைப்புகளையும் ஊடகவியலாளர்களையும் வெளியேற்றுவதை சிறிலங்க அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளை சிங்கள ஆயுதப் படையினர் மீறுகின்றனர் என்று மேற்கத்திய அரசியல்வாதிகள் அல்லது ஊடகவியலாளர்கள் யாராவது சொல்லத் துணிந்தால், அவர்கள் உடனடியாக “வெள்ளைப் புலிகள்” அல்லது பயங்கரவாதிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
சிறிலங்க அரசிற்கு “அரசு” என்ற அந்தஸ்து உள்ள ஒரே காரணத்தால் அதன் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் யாவும் உலக மக்களால் சகிப்புத்தன்மையோடு பார்க்கப்படுகின்றன. அதே நேரத்தில் “அரசு” என்ற நிலையில்லாத ஒரே காரணத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் நிராகரிக்கப்படுகிறது.
|
தனி நாடு கோரும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆதரிக்க இன்றளவும் தயங்கும் சர்வதேசச் சமூகம், தமிழ்- சிங்கள இனப் பிரச்சனைக்கு தனி நாடு மட்டுமே ஒரே தீர்வு என்ற எங்களின் வாதத்தை நிச்சயம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும். சிங்கள அரசினுடைய சிங்கள ஆயுதப் படைகளால் பல ஆண்டுகளாக நிகழ்த்தப்படும் படுகொலைகளால் தமிழ் மக்கள் விரக்தியும் வெறுப்பும் அடைந்துள்ளனர்.
சிங்கள மக்களுடன் ஒன்றுபட்டு வாழ்வது பற்றிய தமிழ் மக்களின் நம்பிக்கையானது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருமளவிலான இழப்புகளாலும், அவர்களின் சொல்லொணாத் துன்பங்களாலும், மறக்கவியலாத நினைவுகளாலும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. இதனால், சிறிலங்காவில் சிங்களர்களும் தமிழர்களும் அமைதியாக சமமாக வாழ்க்கை நடத்த முடியும் என்பது இனி ஒருபோதும் நடக்காது.
இது இந்தத் தீவின் இன-அரசியல் உண்மை நிலையாகும். இந்த இன-அரசியல் உண்மை நிலையை தற்போது வன்னியில் நடத்தப்பட்டு வரும் கொடூரமான தாக்குதல்கள் மேலும் வலிமையாக்கி வருகிறது.
போரில் சண்டையிடுபவர்களால் இரு தரப்பிற்கும் இடையில் பயன்படுத்தப்படும் எறிகணைகள், பல்குழல் ராக்கெட்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தமிழ் மக்களின் மீதும், அவர்களுக்கான இடம்பெயர்ந்தோர் முகாம்களின் மீதும் சிறிலங்க ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படுகிறது. இத்தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என பல ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டும், படுகாயப்படுத்தப்படும், ஊனப்படுத்தப்பட்டும் உள்ளனர்.
|
தமிழ் ஈழத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் 21ஆம் நூற்றாண்டின் மிக மோசமான இனப்படுகொலையைச் சந்தித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், எமது மக்கள் சந்தித்துவரும் மனிப் பேரவலத்திற்கு முடிவுகாண வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சர்வதேசச் சமூகம் விடுக்கும் போர் நிறுத்த அழைப்புகளை ஏற்றுக்கொள்ளத் தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக உள்ளனர். ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேலும் வளர்ந்து, இனப் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வைக் கண்டறிவதற்கான அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னேற வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்புகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என்று விடுக்கப்படும் அழைப்புகள் இனச் சிக்கலைத் தீர்ப்பதற்கு உதவாது என்பதை உலக நாடுகள் குறித்துக்கொள்ள வேண்டும்.
|
தமிழீழ விடுதலைப் புலிகள் பெருமளவிலான அமைதி முயற்சிகளில் பங்கெடுத்துள்ளனர். ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று யாரும் வலியுறுத்தியது இல்லை.
தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளில் உள்ள ஆயுதங்களைச் சார்ந்து உள்ளது. தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும், அங்கீகாரத்துடனும் ஒரு தீர்வு எட்டப்பட்டால் அப்பொழுது விடுதலைப் புலிகள் ஆயுதம் வைத்திருப்பதற்கான அவசியம் ஏதும் இருக்காது.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிரந்தரத் தீர்வை எட்டாமல், தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க தாங்கள் தூக்கிய ஆயுதத்தை கீழே போடுவது தீர்வை எட்டுவதற்கு எந்த விதத்திலும் உதவாது. அப்படிச் செய்யக் கோருவது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைபடுத்துவதாகவும், சிறிலங்க அரசின் இனப்படுகொலையை பாராட்டுவதாகவும் ஆகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று வலியுறுத்துவதைவிட, தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சர்வதேசச் சமூகத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கோருகின்றனர். இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு காணும் முயற்சிகளைக் கைவிட்டுவிட்டு அரசியல் தீர்வுகாண முயற்சிக்க வேண்ம் என்று சிறிலங்க அரசிற்குச் சர்வதேசச் சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
|
உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டுவந்து, அரசியல் தீர்வு நோக்கி மேற்கொள்ளப்படும் சர்வதேசச் சமூகத்தின் எல்லா முயற்சிகளுக்கும், ஒத்துழைத்து, விவாதித்து, இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
பா.நடேசன்
அரசியல்துறைப் பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள்.
இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் விளக்கமான கடிதம் அனுப்பியுள்ளது.
Comments